எது பெரிய விஷயம் தெரியுமா?

க்டர் சீயூஸ் கெய்ஸல், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றுவதில் பிரபலமானவர். இவர் குழந்தையாய் இருந்த போது, இவருடைய தாயார் பாடிய தாலாட்டுப்பாடல்களே தமக்கு ஆதர்சம் என்பாராம் கெய்ஸல். 1904ல் பிறந்த கெய்ஸல் குழந்தை எழுத்தாளராகவும் கேலிச்சித்திரங்கள் வரைபவராகவும் புகழ்பெற்றார்.

இரண்டாம் உலகப்போரின்போது இவர் வரைந்த அரசியல் கேலிச்சித்திரங்கள் மிகவும் பிரபலம். கெய்ஸல் 1991ல் இறந்தபோது குழந்தைகளுக்காக, ஓவியங்களுடன் கூடிய 140க்கும் மேற்பட்ட புத்தகங்களை உருவாக்கியிருந்தார். எளிய நடையில் விரிவாக எழுதுவது இவரின் தனித்தன்மை.

குழந்தைகளுக்காக இவர் சொன்ன சில வாசகங்கள் பெரியவர்களுக்கும் ரொம்பப் பொருந்துகிறது…. பார்ப்போமா?

ஒரு நல்ல விஷயம் முடிந்ததற்காக வருந்தாதீர்கள். அது நிகழ்ந்ததற்காக மகிழுங்கள்.

அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு மட்டுமல்ல மனிதன். அபத்தங்களுக்காகவும்தான். அபத்தங்களைப் பார்த்து நீங்களே சிரிப்பது தான் நிஜமான அற்புதம்.

ஒரு விஷயத்தைப் பற்றி ஆயிரம் முறை வேண்டுமானாலும் சிந்தியுங்கள். ஒரு முறையாவது செயல்படுத்துங்கள்.

மிக மோசமான நாளில்கூட, மிக மேன்மையான பாடமொன்றைக் கற்றிருப்பீர்கள். அந்த வகையில் எந்த நாளும் இனிய நாளே.

எத்தனைபேர் எவ்வளவுதான் சொல்லித் தரட்டுமே… கற்றுக்கொள்வது உங்களிடம்தான் இருக்கிறது.

எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா… நீங்கள் நீங்களாக இருப்பது!!

கடினமான சில கேள்விகளுக்கு சுலபமான விடைகள் இருப்பதுண்டு. சிக்கலான பல சூழல்களுக்கு தீர்வுகள் மிக எளிமையாய் இருக்கும்.

சிறியவரோ பெரியவரோ – ஒவ்வொரு மனிதரும் முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *