– சாதனா
ஹாய் பிரண்ட்ஸ்!
எக்ஸாம் முடிஞ்சு ஸ்கூலுக்கே லீவு விட்டாச்சு. இப்ப கூட ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு என்று கட்டுரை எழுதுகிறீர்களே நியாயமா என்கிறீர்களா ?
ப்ரெண்ட்ஸ், பத்து பேர் மலை உச்சிக்கு போக தனித்தனியா கிளம்புறீங்க… யார் முதல்ல கிளம்புறாங்களோ, அவங்க சீக்கிரமே மலை உச்சிக்கு போவாங்க.. இல்லையா? புரிந்து கொண்டீர்களா? இதுதான், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதற்கான ரகசியம்.
முதலாவதாகவும் சீக்கிரமாகவும் கிளம்பும் மனிதர்களே சாதனைகள் படைக்கிறார்கள். விடுமுறை நாட்கள், இன்று ஒருநாள் மட்டும் என்று உங்கள் நேரத்தினை கடத்தாதீர்கள். ஏனென்றால் நீங்கள் கடத்தும் ஒவ்வொரு மணித்துளியும் உங்கள் மதிப்பெண்ணை குறைக்கிறது.
ஸ்கூல் ஆரம்பித்த நாளிலிருந்து படிக்க துவங்குபவர்களுக்கும், ஸ்கூல் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் படிக்க துவங்குபவர்களுக்கும் கூட மதிப்பெண்ணில் வித்தியாசம் உண்டு.
சீக்கிரமே உயரத்திற்குப் போக வேண்டு மென்றால் சீக்கிரமே பயணத்தை துவங்க வேண்டும் என்பதற்கு அர்த்தம், அதிக மதிப்பெண் பெற வேண்டுமென்றால் பள்ளி திறந்ததும் அல்ல விடுமுறையிலேயே நீங்கள் படிக்கத் துவங்க வேண்டும்.
பள்ளியில் நடத்துவதற்கு முன்னரே படிப்பதா? ‘அது எப்படி முடியும்’ என்கிறீர்களா? நன்றாகப் பாருங்கள், நான் சொன்னது, ‘படிப்பது’. புரிந்து கொள்வது அல்ல.
செய்தித்தாளை வாசிப்பது போல உங்கள் பாடங்களை வாசியுங்கள். ஒன்றுமே புரியாதது போல்தான் இருக்கும். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெறுமனே வாசியுங்கள். மூளையில் தோன்றும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்காமல் வாசியுங்கள். அனைத்தும் முழுமை யாக புரிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வாசிக்காதீர்கள்.
உதாரணத்திற்கு, “ஒமாகசீயா” என்ற சினிமா பாடல் அர்த்தம் புரிந்ததாலா மனப்பாடம் ஆனது. இல்லைதானே, மீண்டும் மீண்டும் கேட்டதால் தானே. உண்மையில் வெறுமனே கேட்டதால் மட்டும்தானா? என்றால் கிடையாது மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை நினைத்துப் பார்த்ததாலும்தான்.
சினிமா பாடல்கள் அளவிற்கு பள்ளிப் பாடங்கள் மனதில் பதிவதில்லையே ஏன்? என்று பெற்றோர்கள் என்னிடம் கேட்பதுண்டு. அதற்கு பதில், அதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் முணுமுணுக்கிறார்கள் என்பதும்தான்.
இப்போது மற்றொரு வழிமுறை. படித்ததை மீண்டும் யோசித்துப் பாருங்கள். கண்டிப்பாக அனைத்தும் நினைவில் இருக்காது. இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.
இப்போது மீண்டும் படியுங்கள். முதன் முறை படித்தபோது இருந்த சிரமம் தற்போது குறைந்திருக்கும்.
உதாரணத்திற்கு, முதல் முறை “ஓமகசீயா” என்ற பாடலை கேட்ட போது வரிகள் சரியாக புரிந்திருக்காது. ஆனால் இரண்டாவது முறை கேட்கும் போது சற்றே கவனமாக கேட்க ஆரம்பிப்பீர்கள். அதனால் வார்த்தைகள் தெளிவாகப் புரிந்திருக்கும்.
அதே போல, இரண்டாவது முறை நீங்கள் படிக்கும்போது சில விஷயங்கள் புரிவது போலிருக்கும். ஆனாலும் முழுமையாக புரிந்திருக்காது. அதனால் படிப்பதில் சிரமம் குறைந்திருக்கும்.
இப்போது சுமார் பத்து நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் படித்ததை யோசித்துப்பாருங்கள். உங்கள் சக்தி உங்களுக்கே தெரிய வரும்.
உங்கள் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர் தெரிந்தோ தெரியாமலோ இதைச் செய்கிறார். அதனால்தான் அதிக மதிப்பெண் எடுக்கிறார்.
முதலில் பயணத்தை துவங்குகிறவர்கள்தான் சீக்கிரமே உயரத்தை அடைகிறார்கள் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
Leave a Reply