பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? என்ற கட்டுரையை தொடர்ந்து படித்து வரும் ஒரு நண்பர், தன் 6வது படிக்கும் தன் பெண்ணின், பிறந்த நாளுக்கு 1500 ரூபாய்க்கு டிரஸ் கேட்டதாகவும் அந்த விஷயத்தை நம் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சிறப்பாக கையாண்டதாவும் எழுதியிருந்தார்.

1500 ரூபாய் என்பது அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் ஒரு வருட படிப்பு செலவு. ஒரு ஏழைக்குடும்பத்தின் இருபது நாள் உணவு என்று எடுத்துச் சொன்னதாகவும் அதை யோசித்து புரிந்துகொண்ட அவர் பெண் ஆடம்பர ஆடையை தவிர்த்து எளிய விலையில் ஒன்றை வாங்கிக் கொண்டதாக மகிழ்ந்து போய் எழுதியிருந்தார்.

எனக்கு பகீர் என்றிருந்தது. உண்மையிலேயே நண்பர் சொன்னது ஒரு சிறப்பான முறைதான். ஆனால், குழந்தை அதே அர்த்தத்தில் புரிந்து கொண்டதா என்பதுதான் முக்கியம். இல்லையா?

உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?

நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.

?     பணம் சம்பாதிப்பது சுலபமா ? கஷ்டமா ? என விளக்கு.

?     உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன ?

?     பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள் ?

?     தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?

?     அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன ?

?     தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா ?

ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

ஹோம்ஒர்க் – விடுமுறை தருணம் என்பதால் இந்த மாதம் இரண்டு ஹோம்ஒர்க்

ஹோம்ஒர்க் -1

உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன். விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஹோம்ஒர்க் – 2

பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்கள்… உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உதாரணங்கள்  மூன்று.

ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.…

தியேட்டரில் 50 ரூபாய் டிக்கெட்டை பிளாக்கில் 100 ரூபாய்க்கு வாங்குவது..

புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது……

2 Responses

  1. v.chandrasekar

    super for how to handling money.

  2. lions v.janardhanam

    hai sir,

    good morning.

    handling money matter is simply superb. pls give this type of matters in your book regularly.

    thank you sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *