மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

தொடர்…8

– மரபின் மைந்தன் ம. முத்தையா

மலைகளில் ஏற்படும் நிலச்சரிவு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்துகிறதே என்கிற கவலை நீலகிரி மலையை நினைப்பவர்களுடைய நெஞ்சங்களில் எல்லாம் நிழலாடும். மலைகளில் வளர்கிற மரங்களே, மண்ணை இறுகப் பற்றுகின்றன. மரங்களைப் பெருமளவு வெட்டிவிடும்போது மண் சரிகிறது.

இதுதான் நிலவியல் பூர்வமான நிலவரம், மலையுடன் ஒப்பிட்டால் மிகவும் சிறியதுதான் மரம். ஆனால் மலை பல வகைகளில் மரங்களைச் சார்ந்துதான் இருக்கிறது.

நம்மினும் பெரியவர்களுக்கு நாம் முக்கியம். நம்மினும் சிறியவர்கள் நமக்கு முக்கியம். இந்தப் படிப்பினையை நிலச்சரிவு மூலம் நாம் எல்லோருமே அறிகிறோம். நீண்டுகிடக்கும் மலைத் தொடர்களை நெருங்கிப் பார்த்தாலும் அழகுதான். தொலைவில் நின்று பார்த்தாலும் அழகுதான். மலைகள் நீண்டு கிடப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஆனால், பிரச்சினைகள் நீண்டு கிடப்பது, மலைப்பாய் இருக்கிறது.

நீண்ட மலைகளில் இருக்கும் சௌகரியமே அதைக் கடந்து செல்லப் பல வழிகள் இருப்பதுதான். கொடைக்கானல் மலையில் ஏறத்தான் எத்தனை வழிகள்! பழனி வழியாக – கொடைரோடு வழியாக என்று நாமறிந்த பிரதான வழிகள் மட்டுமின்றி இன்னும் எத்தனையோ புறவழிகளும் பிறவழிகளும் உண்டு.

அதேபோல, நீண்டு கிடக்கும் பிரச்சினைகளைத் தாண்டிச் செல்வதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. சிக்கலுக்கு ஒரேயொரு கோணம். தீர்வுக்கோ எத்தனையோ கோணங்கள். சில நேரங்களில் பெரிய பிரச்சினை ஒன்றிற்கு நீங்கள் முயன்று காணும் நேரடித் தீர்வு, பல சிறிய பிரச்சினைகளுக்கும் மறைமுகத் தீர்வாக அமைந்துவிடும். இதற்கு, தீர்வை நோக்கி உற்சாகத்துடன் நகர்கிற அணுகுமுறைதான் முக்கியம்.

எப்போதாவது சிக்கல் வரும்போது மட்டும் துணிச்சல் பற்றியும் உற்சாகம் பற்றியும் யோசிப்பவர்களுக்கு அந்த சிக்கல் மலைபோலத் தோன்றும். எப்போதும் துணிச்சலாகவும் உற்சாகமாகவும் இருப்பவர்களுக்கு மலை போன்ற சிக்கல் கூட சாதாரணமாகத் தோன்றும். எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை நம் இயல்பாகவே ஆக்கிக் கொள்கிறபோது சிக்கல்களை எதிர்கொள்ளும் சக்தியை, தனியாக எங்கிருந்தோ தருவிக்கத் தேவையில்லை.

அந்த நான்கு வயதுச் சிறுவனை வீதிகளில் சுதந்திரமாக விளையாடவும் சுற்றித் திரியவும் அவனுடைய பெற்றோர் அனுமதித்தார்கள். சாலை கடக்கும் விதம்பற்றி சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அந்தச் சிறுவன் சாலையைக் கடக்கும்போது கவனமாகக் கண்காணித்தார்களே தவிர, “பத்திரம்! பத்திரம்” என்று பதறவில்லை.

அந்தக் காலங்களில் இத்தனை வாகனங்கள் இல்லைதான். ஆனால் ஒரு வகையில் இன்னும் ஆபத்தான போக்குவரத்துகள் இருந்து வந்த காலம் அது. இப்போது ‘சர்’ என்று சீரிப்பாய்கிற கார்களை, சடன் பிரேக் போட்டு நிறுத்தலாம். ஒடித்துத் திருப்பலாம். ஆனால் அந்தக் காலங்களில் குதிரைகளால் இழுக்கப்பட்ட சாரட் வண்டிகள் வீதிகளில் வந்து கொண்டிருக்கும், கடிவாளத்தைப் பொறுத்தும், குதிரைகளின் கால்களைப் பொறுத்தும் ஓடுகிற வண்டியை நிறுத்துகிற சாகசம் நடக்கும்.

ஆனால்கூட, குழந்தைக்கு விழிப்புணர்வையும் சுதந்திரத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தனர் பெற்றோர். சின்ன வயதிலேயே அந்த சுதந்திரத்தையும் பொறுப்புணர்வையும் ஒருசேர அனுபவித்ததால்தான் அந்தச் சிறுவன் அறிவாற்றலோடு வளர்ந்தான். தவறுகள் நிகழ்வது இயல்பென்றும் தவறுகளைத் திருத்திக்கொள்வதே புத்திசாலித்தனம் என்றும் பாடம் பயின்று, அதன் மூலமே மகத்தான விஞ்ஞானியாய் மலர்ந்த ஐன்ஸ்டீன்தான் அந்தச் சிறுவன்.

சின்ன வயதில் கிடைத்த சுதந்திரம், மிகப்பெரிய மனவுறுதியை ஐன்ஸ்டீனுக்கு அளித்தது. ஒரு காலகட்டத்தில் ஐன்ஸ்டீனின் பேட்டிக்காக நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். அனைவரையும் தவிர்த்த ஐன்ஸ்டீன் நியூயார்க் டைம்ஸ் இதழின் செய்தியாளரை மட்டும் அழைத்து பேட்டி கொடுத்தார். இதே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைதான் ஐன்ஸ்டீனின் கணக்கு ஒன்றைத் தவறென்று நிரூபித்திருந்தது. நியாயமாக ஐன்ஸ்டீன் அந்தப் பத்திரிகையைத் தவிர்த்துவிட்டு மற்றவர்களுக்கு பேட்டி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஐனஸ்டீன் மற்ற பத்திரிகைகளைத் தவிர்த்துவிட்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தார்.

தன்னுடைய தவறை ஒத்துக் கொள்வதுதான் தீர்வை நோக்கி முன்னேற முதல்படி என்று தெரிந்து வைத்திருந்தார் ஐன்ஸ்டீன். 1935ல் பிரின்ஸிலான் பகுதிக்குக் குடிபெயர்ந்த போது, அவருக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று கேட்டார்கள். “எழுதுவதற்கு மேசை, காகிதங்கள், பேனா, அப்புறம் என் எல்லாத் தவறுகளையும் ஏந்திக் கொள்ள பெரிய குப்பைக்கூடை ஒன்று” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஐன்ஸ்டீன்.

இதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தனக்குத் தரப்பட்ட அதே சுதந்திரத்தை ஐன்ஸ்டீன் தன் பிள்ளைகளுக்கும் அளித்தார் என்பதுதான்.

தன் முதல் மனைவி மிவாவுடனும் மகனுடனும் ஜுரிக் பகுதிக்குக் குடிபெயர்ந்தார் ஐன்ஸ்டீன். ஃபிரெட்ரிக் அட்லர் அப்போது அருகே குடியிருந்தார். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இருவரின் பிள்ளைகளும் கூச்சலிட்டுக் குதித்தோடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு மேதைகளும் அந்த சத்தத்தை சிறிதுகூடப் பொருட்படுத்தாமல் தீவிரமாக உரையாடிக் கொண்டிருப்பார்கள், மேதைகளாய் இருப்பது மேதைகளின் உரிமை என்பது போலவே குழந்தைகளாய் இருப்பது குழந்தைகளின் உரிமை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

எந்தத் தடையையும் எதிர்கொள்ளாமல் சாதிப்பதற்குப் பெயர் சாதனையே இல்லை. எதையும் எதிர்கொள்ளத் தயாராய் இருந்தால் தடைகளுக்குப் பெயர் தடையே இல்லை.

“மலைபோலப் பிரச்சினை” என்று மலைத்து நிற்பவர்களுக்கு ஒரு வார்த்தை. பிரச்சினை பெரியதில்லை. பிரச்சினை பற்றிய உங்கள் பிரம்மிப்புதான் பெரியது. உங்கள் மனதைவிட்டு அந்த பயத்தை நகர்த்துங்கள்.

முன்னே…. முன்னே…. செல்லுங்கள்…..

(மலைகள் நகரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *