– ருக்மணி பன்னீர்செல்வம்
இத்தாலியின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் வீரர்களிடையே எழுச்சி உரை ஆற்றிக் கொண்டிருந்தார் கரிபால்டி.
ஒரு வீரன் எழுந்து மிக ஆவேசத்துடன் கரிபால்டியை நோக்கி ஒரு கேள்விக் கணையை வீசினான். “நாங்கள் எவ்வளவுதான் தீவிரமாக போரிட்டாலும் எங்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? காயமும் மரணமும்தானே?”
ஒரு சாந்தப் பார்வையை பார்த்தபடி மிகப் பொறுமையாக கரிபால்டி சொன்னான். ” ஆம் வீரனே! நீங்கள் காயப்படலாம். மரணிக்கவும் நேரலாம். ஆனால், நம் சந்ததியினர் சுதந்திரமாய் வாழ இத்தாலி விடுதலை பெறுமே!”
கரிபால்டியை கேள்வி கேட்க வேண்டுமென்று நினைத்திருந்த மற்ற வீரர்களும் இப்பதிலால் அடங்கிவிட்டனர். சுய பரிதாபத்தால் அலுப்பும் சலிப்புமாய் இருந்த வீரர்களையும் தன் வசப்படுத்தி மீண்டும் போரிடுகின்ற வல்லமையை தட்டி எழுப்புகின்ற ஆளுமை கரிபால்டியிடம் இருந்தது.
எப்படி போராடுகிறோம் என்பதை விடவும் எதற்காகப் போராடுகிறோம் என்பது முக்கியம்.
சிலர் புறத்தோற்றத்தைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. அது இன்னும் மோசமானது. பல விமர்சனங்களுக்கு அவர்களை உள்ளாக்கிவிடக் கூடியது.
ஒரு மனிதரிடம் எந்த அளவிற்கு பழகுவது என்பதை அவர்களின் புறத் தோற்றம்தான் முதலில் முடிவு செய்கிறது. நாம் ஒருவரைச் சந்திக்கச் செல்லும்போது முதலில் அவர் மனதில் பதிவது நம்முடைய புறத்தோற்றம்தான்.
நம்மால் நம்முடைய உயரத்தையோ, நிறத்தையோ, உடலமைப்பையோ தீர்மானிக்க முடியாது. முழுமையாய் மாற்றியமைக்கவும் முடியாது. ஆனால் அவரவர் உடலமைப்பு, உயரம், நிறம், பருமனுக்கு ஏற்றாற்போல் உடையணிய முடியும். கௌரவமான வெளித்தோற்றத்தை செய்து கொள்ள முடியும். வசதியிருந்தால்தான் என்றில்லை. எளிமையிலும் சிறப்பாக நாம் காட்சியளிக்க முடியும்.
எந்த இடத்திலும் கண்ணியமான தோற்றப் பொலிவோடு விளங்குதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமே. அதனைத் தொடர்ந்து கடைப் பிடித்தல்தான் நாம் செய்ய வேண்டியது. புறத்தோற்றம் பொலிவாய்த் திகழ்தல் என்பது பேச்சு, நடை, அங்க அசைவுகள், மேனரிசம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
எந்த அளவிற்கு புறத்தோற்றத்திற்கு கவனம் செலுத்துகின்றோமோ அதைவிட அதிகமாய் நம்முடைய ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கும், செயல்படுத்துவதற்கும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
நாம் வெற்றியடைதல் என்பது நம்முடைய ஆளுமைத்தன்மையில் அடங்கியிருக்கிறது என்பதை உணருதல் வேண்டும்.
புகழ்பெறுதல் என்பது, ஏதோ ஒருமுறை பெற்றுவிட்டால் போதும் என்பதோடு நின்று விடுவதில்லை. நிலைத்த புகழில் தொடர்ந்து நம்மை நிறுத்தி வைத்தல் அவசியம். அதனைப் பெறுவதற்கு உதவுவது நம்முடைய ஆளுமைப் பண்புகள்தான்.
புகழடையும் வரை நம்மை கண்டு கொள்ளாமல் ஒதுக்கி வைக்கும் கூட்டம்தான் நாம் புகழ் பெற ஆரம்பித்தவுடனே விமர்சனக் கணைகளையும் வீச ஆரம்பிக்கும். அவற்றை எதிர் கொள்வதில் மிகவும் நுட்பம் தேவை. அதுவும் ஆளுமைப் பண்பால் மட்டுமே சாத்தியம்.
உயர்ந்த இலக்கை மையப்படுத்தி போராடும் போது பலவகையிலும் துன்பப்படுதல் நேரிடத் தான் செய்யும். துன்பத்தை பெரிதுபடுத்தாமல் நோக்கத்தில் குறியாய் இருந்தால் துன்பத்தை தாங்குகின்ற வலிமை வசப்படும்.
பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், கொடூரக்காரர்களும் நிரம்பி வழியும் இடம் தில்லி திஹார் சிறை. இங்கு பணியாற்றவேண்டும் என்றாலே காவல்துறை அதிகாரிகள் எல்லாம் அலறுகின்ற சூழலில், பணியேற்றவர்கள் எப்போது மாறுதல் வாங்கிக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்றுவிடலாம் என முயற்சி செய்து மாறிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு தண்டனை யாகவோ அல்லது வேண்டுமென்றோ ஒப்படைக்கப்பட்ட பணியை ஏற்றுக்கொண்ட மிக்க துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் உள்ளே நுழைந்தார் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி.
திறமையும், பொறுமையும் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் மாற்றியமைக்க முடியும் என்பதில் மிக அழுத்தமான நம்பிக்கையுடையவர் அவர்.
திஹார் சிறையில் இதுவரை பணிபுரிந்த அதிகாரிகள் கடைப்பிடித்த அனைத்து வழிமுறைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணுகுமுறைகளை கையாள ஆரம்பித்தார். ஒரு அதிகாரிக்குரிய கடுமையான செயல்பாடுகளை எல்லாம் மென்மையாய் ஆக்கி சிறையில் இருப்பவர்களை தாங்களும் மனிதர்கள்தான். மனிதப் பண்புகளுக்கு உரியவர்கள்தான் என்பதை உணர வைத்தார்.
அதுவரையில் அவர்களுக்கு பழக்கமில்லாத தியானத்தை பழக்கி மேற்கொள்ள வைத்ததோடு நிறைய தன்முனைப்பு பயிற்சிகளை ஏற்பாடு செய்து அவர்களின் கொடூர குணங்களை மெல்ல மெல்ல குறைத்து வந்தார். சிறைவாசிகளின் தவறான பழக்கங்களை நிதானமாய் உணரவைத்து திருந்துகின்ற மனப்பாங்கை உருவாக்கி வந்தார்.
உள்ளே இருந்த 8500 பேரும் நரகமாய் உணர்ந்த சிறைச்சாலையை தன்னுடைய ஆளுமைப்பண்புகளால் அறச்சாலையாய் மாற்றி வந்தார்.
செல்வாக்கு படைத்தோர் மற்றும் அரசியல் வாதிகளின் கைப்பாவையாக ஆகிவிடாமல் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்து செயல்பட்டு வரும்போது உண்டான பல திசை எதிர்ப்புகளையும், தடைகளையும், விமர்சனங் களையும் தனியொரு ஆளாய் துணிச்சலோடு நின்று எதிர்கொண்டார்.
அவர் வேறு யாருமல்ல. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி தான்.
பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு நின்றதால்தான் உலகின் உயர்ந்த விருதுகள் எல்லாம் கிரண் பேடியைத் தேடிக் கொண்டு வந்தன. எனக்கு மட்டும் ஏன் போராட்டமே வாழ்க்கையாகிப் போனது என்று புலம்புபவர்கள் எல்லாம் ஆளுமைப் பண்புகள் மிக்க கிரண் பேடியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்க வேண்டும்.
ஆளுமைப் பண்புகளை தெரியாதவர்களும், தெரிந்து செயல்பட விரும்புபவர்களும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்களை அணுகுங்கள்.
M.J. SYED ABDULRAHMAN
Thank You
உயர்ந்த இலக்கை மையப்படுத்தி போராடும் போது பலவகையிலும் துன்பப்படுதல் நேரிடத் தான் செய்யும். துன்பத்தை பெரிதுபடுத்தாமல் நோக்கத்தில் குறியாய் இருந்தால் துன்பத்தை தாங்குகின்ற வலிமை வசப்படும்.
Good Wishes,