நி ர் வா கி

வியாபார போட்டிகளை சமாளிப்பது எப்படி?

முன்கதைச்சுருக்கம் : கடுமையான உழைப்பாளியான சதாசிவம் தன்னுடைய வணிகத்தில் போட்டியால் மிகப்பெரிய சரிவை சந்திக்கிறார். அப்போது வணிக மேம்பாட்டு ஆலோசகராக செயல்படும் ஒரு கல்லுôரி பேராசிரியரிடம் தன் பிரச்சனைகளை சொல்லி தீர்வு கேட்கிறார்.

செஸ் விளையாடலாமா? என்றார் பேராசிரியர்.

தன் குழப்பத்திற்கு தீர்வு சொல்லாமல் பேராசிரியர் விளையாட்டாக பேசுவது தன்னை கிண்டல் செய்யத்தானோ? என்று சதாசிவத்திற்கு தோன்றியது.

“செஸ் போர்டு இருக்கா ?” பேராசிரியர் ஃபுல்ஹாண்ட் சர்ட் பட்டனை கழட்டி கையை மடித்து விட்டுக்கொண்டே உற்சாகமாகக் கேட்டார்.

பரிசாக வந்து, பயன் படுத்தாமல், பீரோ மேல் புழுதி படிந்து கிடந்த செஸ் போர்டையும், காயின் பாக்ஸையும் தூசி தட்டி எடுத்தார்கள்.

“விளையாடத்தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டே பேராசிரியர் காயின்கள் அனைத்தையும் அடுக்கினார்.

சதாசிவத்திற்கு பேராசிரியரின் செயல்கள் அனைத்தும் புரியாத புதிராக இருந்தது. ‘எப்பவோ விளையாடியது. இப்பவும் விளையாடத் தெரியும் . ஆனால் நல்லா விளையாடத் தெரியாது” என்றார்

“நல்ல விளையாடறவங்க.. சுமார விளையாடறவங்க, இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்?” என்றார் பேராசிரியர்.

விளையாட்டான குரலில் கேட்டாலும், கேள்வி விளையாட்டான கேள்வி இல்லை. ஆழமான கேள்வி. சதாசிவம் கோபம் மாறி, சட்டென்று குளிர்ந்தார். பேராசிரியர் தனக்கு எதையோ கற்றுத்தரத்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரிந்தது.

உற்சாகமாக செஸ்போர்டை நெருங்கி உட்கார்ந்து, தன் பக்கம் அடுக்கப்பட்டிருந்த ஒயிட் காயினை நகர்த்தியவாறே சதாசிவம், “நன்றாக விளையாடத்தெரிந்தவர்கள் என்றால் அதிகம் வெற்றி பெற்றவர்கள், அதாவது அதிகம் விளையாடி, விளையாட்டில் நன்றாக தேர்ச்சி பெற்றவர்கள்” என்றார்.

“பல வருடங்களாக விளையாடிக்கொண்டிருந்தாலும் பொழுது போக்குக்காக விளையாடுகிறவர்கள் தங்கள் ஆட்டத்திறனை பெரிதாக மேம்படுத்திக் கொள்வதில்லை. அதனால் அதிக முறை ஆடுபவர்கள் சிறந்த ஆட்டக்காரர்கள் என்று சொல்ல முடியாது. இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்” என்றவாறே பேராசிரியர் தன் காயினை நகர்த்தினார்.

“ஒவ்வொரு முறையும் தன்னை மேம்படுத்திக்கொள்கிறவர்கள்தான் சிறந்த ஆட்டக்காரர்” என்ற பேராசிரியர் ஓர் உதாரணமும் சொன்னார்.

கிரான்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்திடம், “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்று கேட்டார்கள். அவர் சொன்னார், “நான் தோற்றால் நான் விளையாடியதில் என்ன தவறு என்று யோசிப்பேன். நான் வென்றால் எதிராளி விளையாடியதில் என்ன தவறு? என்று யோசிப்பேன்” என்றார்.

“அதாவது தோற்றாலும் ஜெயித்தாலும் கற்றுக்கொள்கிற மனநிலைதான் அவரை சர்வதேச வெற்றி வீரராக மாற்றியிருக்கிறது. சதாசிவம், நீங்களும்கூட தற்போதைய தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் நாளை சிறந்த பிஸினஸ்மேனாக வருவீர்கள்.”

தோல்வி போன்ற தற்போதைய நிலையில் ஏன் இந்த நிலை என்று யோசிக்கிறோம். ஆனால் நிறுவனம் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த போது வெற்றியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த போது, தோற்ற மற்றவர்களை அலசத்தவறி விட்டோம் என்பதை சதாசிவம் நன்கு உணர்ந்தார்.

உணர்ந்த உற்சாகத்தில் சதாசிவம், விடுவிடுவென்று நான்கைந்து காய்களை வெட்டித் தள்ளினார். ‘பேராசிரியருக்கு விளையாடத் தெரியாதோ அல்லது ஒருவேளை திடீரென்று ஏற்பட்ட உற்சாகத்தில் சிறப்பாக விளையாடுகிறோமோ ? என்று தனக்குள் கேட்டுக்கொண்டார்.

அப்போது எதிர்பாராத விதத்தில் ஒரு காயினை நகர்த்திய பேராசிரியர், ‘செக்’ என்றார். சதாசிவம் திகைத்துப்போனார்.

“யார் முதலில் துவங்குகிறார்கள் என்பதை விட யார் இறுதியில் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் முக்கியம்” என்று சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் அடித்தார் பேராசிரியர்.

“விளையாட்டு நன்றாக போகும்போது மேலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் நாம் மெத்தனமாக இருந்துவிடுகிறோம். எதிராளியின் மூவ்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். அல்லது குறைவாக மதிப்பிட்டு விடுகிறோம்.”

“இந்த ஆட்டத்தில் நீங்கள் தவறான மூவ் எதையும் செய்யவில்லை. ஆனால் உங்களிடமிருந்த பவர்களை முறையாக பயன்படுத்தாததால்தான் சீக்கிரமே தோற்றுவிட்டீர்கள். இது உங்கள் பிஸினஸில் நீங்கள் தற்போது உள்ள நிலைமைக்கு இது மிகவும் பொருந்தும்.”

“எதிராளியின் மூவ் பற்றிய அதிக கணிப்புகளும், எப்படி தடுத்தாடுவது என்ற தன்னுடைய கவுன்டர் மூவ்களை அதிக வழிகளில் யோசிப்பவர்களே வெல்கிறார்கள்”

“நிறைய போட்டிகளை சந்தித்து நிறைய பேருடைய விளையாட்டு முறைகளை கிரகித்த வர்கள், கணித்தவர்கள் நிபுணர்களாகிறார்கள். இதையே பிஸினஸிலும் செய்தால் நீங்களும் நிபுணர் ஆவீர்கள்.”

“நம்மோடு போட்டியிட்ட வெளிநாட்டு நிறுவனம், பெரிய நிறுவனம் . அதனால்தான் நம் பேக்கரி தயாரிப்புகளின் விற்பனையில் தோல்வி என்று நினைக்காதீர்கள். அவர்கள் செஸ் விளையாடுவதில் வேண்டுமானால் கில்லாடியாக இருக்கட்டும். ஆனால் நாம் செஸ் என்ற விளையாட்டையே உருவாக்கிய கில்லாடிகள்” என்றார் கம்பீரமாக.

“எல்லா காய்களையும் வெட்டி விட்டாலும் ராஜாவை வெட்டியவுடன்தான் ஆட்டம் முடிவடைகிறது. மந்திரியையோ சிப்பாய்களையோ அல்ல.. இப்பொழுது நான் செக்தான் வைத்திருக்கிறேன். அதனாலேயே ஆட்டம் முடிவடைந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதே போல பிஸினஸில் போட்டி என்பதுகூட நம் ராஜாவுக்கு விடப்படும் செக்தான்.”

“ராஜா என்பது நம்முடைய பிராண்டு அதாவது நிறுவனத்தின் பெயர். அது வீழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்வதில்தான் நம்முடைய ஆட்டத்திறமை இருக்கிறது.”

பேராசிரியர் தான் கொண்டு வந்திருந்த லாப்-டாப்பை திறந்து அதிலிருந்து ஒரு விளம்பரத்தை போட்டுக்காட்டினார்.

பெப்ஸி – கோக் விளம்பரம் அது .

அது ஒரு ஆட்டோமெட்டிக் மெஷின். பெப்ஸி, கோக் என்று நான்கைந்து நிறுவனங்களின் பெயர் பொறிக்கப்பட்ட பட்டன் இருக்கும். எடை பார்க்கும் மெஷினை போல காசை போட்டு விட்டு நமக்கு தேவையான குளிர்பான கம்பெனியின் பட்டனை தட்டினால் அந்த குளிர்பானம் வரும்.

ஒரு சின்னப்பையன் குளிர்பானம் வாங்க வருவான். காசு போடுவான் கோக் பட்டனை அழுத்துவான். ஒரு பாட்டில் வரும். அதை தரையில் வைத்துவிட்டு மறுபடியும் காசு போட்டு மறுபடியும் கோக் பாட்டில் வாங்குவான். அதையும் தரையில் வைத்து விட்டு அந்த இரண்டு பாட்டில்களின் மீது ஏறி நின்று மறுபடியும் காசு போடுவான். உயரத்தில் இருந்த பெப்ஸி பட்டனை அழுத்துவான் பெப்ஸி பாட்டில் வரும். அதை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்புவான். தரையில் இருக்கும் கோக் பாட்டில் அப்படியே இருக்கும். பெப்ஸி குடியுங்கள் என்ற எழுத்துக்கள் திரையில் வர விளம்பரம் முடியும்.

சதாசிவத்திற்கு சிலிர்த்தது. பெப்ஸி பட்டன் தனக்கு எட்டவில்லை என்பதற்காகத்தான் அந்த சின்னப்பையன் இரண்டு கோக் பாட்டில்களை வாங்கி இருக்கிறான். அதன் மேல் ஏறி பெப்ஸியை வாங்கிய பிறகு காசு கொடுத்து வாங்கிய கோக் பாட்டில்களை அலட்சியப்படுத்தி விட்டுப் போகிறான் என்றால் பெப்ஸி எந்த அளவிற்கு சுவையானது என்பதை அந்த விளம்பரம் அழகாக சொல்கிறது.

“போட்டியாளர்களை இப்படி போட்டு தாக்குகிறார்களே, இது சரியா?” என்றார் அதிர்ச்சியுடன் சதாசிவம். “பிஸினஸ்ல இப்படித்தான்” என்றார் பேராசிரியர்.

“நேற்று செய்வதையே இன்றும் செய்து கொண்டிருந்தால் நேற்று கிடைத்தது கூட இன்று கிடைக்காது.

காரணம் போட்டி. எனவே பிஸினஸ் நன்றாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது என்று எப்போதும் செய்வதையே செய்து கொண்டிருக்காமல் ஏதாவது புதிது புதிதாக செய்து கொண்டே இருக்க வேண்டும்.”

“பிஸினஸை பொறுத்தவரை வளரவில்லை என்றால் அது கூட வீழ்ச்சிதான்.”

“எனவே கைதட்டி உற்சாகப்படுத்தும் பார்வையாளர்களை விட உங்களோடு போட்டி போடும் போட்டியாளர்களை நேசியுங்கள். பாராட்டுங்கள். அப்போதுதான் சபாஷ் சரியான போட்டி என்ற எண்ணம் வரும். ஒரு கை பார்க்கலாம் என்று களம் இறங்குவோம். டென்ஷன் இல்லாமல் வெற்றி பெறமுடியும்.”

“மற்றவர்கள்தான் உங்களோடு போட்டி போட வேண்டும் என்றில்லை. நீங்களே உங்களோடு போட்டி போடலாம்.”

“இப்போது ஒரு பெயரில் பிரெட் தயாரித்து விற்கிறீர்கள். இன்னொரு கம்பெனி போட்டிக்கு வருகிறது இல்லையா?. நாளை இன்னொரு கம்பெனி கூட போட்டிக்கு வரலாம்.

எனவே, நீங்களே போட்டியாக இன்னொரு பிரெட் தயாரியுங்கள். வேறு பெயரில் வேறு விலையில் தயாரித்து விற்பனை செய்யுங்கள்.”

“உங்களுடைய இரண்டு நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்ளட்டும்.”

“செஸ்ஸில் ஒரு ஆட்டம் முடிந்து அடுத்த ஆட்டம் துவங்குவது போல பிஸினஸ்ஸில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆட்டம் போலத்தான். இந்த மாதம் நாம் தோற்றோமா? வென்றோமா? என்று பார்க்க வேண்டும். நம் உத்திகளை மாதாமாதம் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

எதேச்சையாக சதாசிவம் செஸ் போர்டு கிப்டாக வந்திருந்த பெட்டியை பார்த்தார். அதில் சதாசிவத்தை வாழ்த்தி யாரோ எழுதியிருந்த வாசகம் பளிச்சென்று கண்ணில் பட்டது.

எப்போதும் நம்பர் 1 ஆக இருக்க வாழ்த்துக்கள். போரில் கிடைத்த கீதை மாதிரி, பேராசிரியர் சொன்னது போட்டியால் கிடைத்த கீதை என்று சதாசிவத்திற்கு பட்டது. நன்றாக யோசித்து செஸ் விளையாட்டை தொடர்ந்தார்.

பேராசிரியர் சொன்னபடி ஒவ்வொரு மூவையும் எல்லா கோணங்களிலும் அலசி நிறுத்தி நிதானமாக காய்களை நகர்த்தினார். செஸ்ஸின் சூட்சுமம் பிடிபட்டது. பேராசிரியருக்கு செக் வைத்தார். பேராசிரியர் ராஜாவை நகர்த்த வழியின்றி கைகளை தூக்கி அகல விரித்தார்.

“பேராசிரியர் தோத்துட்டீங்க” என்றார் சதாசிவம் சிரித்துக்கொண்டே.

“இல்லை ஜெயிச்சிட்டேன். உங்களை ஜெயிக்க வைப்பதுதானே எனக்கு வெற்றி” என்றார் பேராசிரியர், சதாசிவத்தின் கைகளை பிடித்துக்கொண்டு. அந்த இடம் நம்பிக்கையால் நிறைந்தது.

  1. M.J. SYED ABDULRAHMAN

    Thank you
    “மற்றவர்கள்தான் உங்களோடு போட்டி போட வேண்டும் என்றில்லை. நீங்களே உங்களோடு போட்டி போடலாம்.”
    good wishes,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *