நீங்களும் ஜீனியஸ்தான்!

– அத்வைத் சதானந்த்

சுடோகு குறுக்கெழுத்துப்போட்டி புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது எல்லாம் மூளை இருக்கிறவர்கள் செய்கிற வேலை. நமக்கு இதெல்லாம் சரி பட்டு வராது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்.

மூளை இல்லாதவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் மூளையை உபயோகிக்கா தவர்கள் அல்லது மூளையை முழுமையாக பயன் படுத்தாதவர்கள் என்று நிறைய பேரை சொல்லலாம்.

ஆறு மாதமாக பயன்படுத்தாத நிலையில் உள்ள சைக்கிள் முதலில் தூசி ஏறி பிறகு துரு ஏறி எப்படி பயன்படுத்த முடியாத நிலைக்கு போகிறதோ, அதே போல மூளையையும் பயன் படுத்தாமலேயே வைத்திருந்து அதை துருப்பிடிக்க விடுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஜீனியஸ் என்பவர் சிறப்பான மூளைத்திறன் பெற்றவர் அல்ல. தன் மூளையை சிறப்பாக பயன் படுத்தியவர் அவ்வளவுதான்.

நம் மூளைக்கு வேலை கொடுக்கத்தான், அதாவது நம் மூளையை சிறப்பாக பயன்படுத்தத் தான் கடந்த வாரம் சில புதிர் கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்கு பதில் கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதுதான் நாம் ஜீனியஸ் ஆவது எப்படி என்று தெரிந்து கொள்வதும்.

விடையல்ல வழி கண்டுபிடியுங்கள்

கேள்வியைப் படித்தவுடன் விடை என்ன என்று யோசிக்காமல் முதலில் விடை கண்டு பிடிப்பதற்கான வழி என்ன என்று யோசியுங்கள். அதாவது பார்முலாவை கண்டுபிடியுங்கள்.

கேள்விகளே பதிலாகும்

பதிலை தேடுவதற்கு பதிலாக உங்களுக்குள் புதிய கேள்விகளை தேடுங்கள். பல நேரங்களில் கேள்விகளிலேயே பதில் கிடைப்பது பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

சரியான பதில் என்ற ஒன்று கிடையாது.

முதலில் முட்டாள்தனமாக அபத்தமாக தோன்றிய பதில்கள் எல்லாம் பிறகு சரியென ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே பதில் யோசிக்கும்போது அபத்தமான யோசனை களுக்கும் மதிப்பளியுங்கள்.

சாத்தியங்களை அதிகப்படுத்துங்கள்.

கொளுத்தும் வெயிலுக்கு பெயர் போன மே மாதத்தில் நான் வெந்நீரில் குளித்தேன். ஏன்? என்பது ஒரு புதிர் கேள்வி. அது எப்படி முடியும் ? என்று பதில் கேள்வி கேட்காமல் இதற்கான சாத்தியங்கள் என்ன என்று யோசியுங்கள்.

மே மாதத்தில் குளிர் எடுக்கும் ஊட்டியில் இருந்தால் வெந்நீரில் குளித்துத்தானே ஆக வேண்டும். எனவே சாத்தியங்களை அதிகப் படுத்துங்கள்.

பதில் கண்டுபிடிக்க கற்றுக்கொண்டீர்கள் அல்லவா? இதோ உங்களுக்காக இரண்டு புதிர்கள் :

1 ) அவனுக்கு கடுமையான தாகம். கண்ணில் பட்ட ஹோட்டலில் தண்ணீர் கேட்டான். சர்வர் கத்தி எடுத்து குத்த வந்தான். தண்ணீர் கேட்டவன் நன்றி சொல்லி வெளியே வந்தான். ஏன் ?

2) பூட்டப்பட்ட ரூமில் ரோமியோவும் ஜூலியட்டும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். காவலுக்கிருந்த செக்யூரிட்டி சாவித் துவாரம் வழியாக உள்ளே பார்க்க ரோமியோவும் ஜூலியட்டும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடித்துக் கொண்டிருந்தார்கள். கண்ணாடித் தொட்டி உடைந்து கிடந்தது. பூனை சிரித்துக் கொண்டிருந்தது. நடந்தது என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *