கல்யாணப் பரிசு

– கிருஷ்ண வரதராஜன்

கணவன் மனைவி புரிதல் பற்றிய புத்துணர்ச்சித் தொடர்

திருமணமான ஓர் ஆணும் பெண்ணும், ஒருவரை ஒருவர் மிகச்சரியாக புரிந்துகொள்ள பத்து ஆண்டுகள் ஆகும்’ என்று, என் திருமணத்திற்கு முன்பே ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

திருமணமாகி பனிரெண்டு ஆண்டுகள் ஆன என் நண்பரிடம் இதைச்சொன்னதற்கு, ”பத்து என்று தெரியாமல் சொல்கிறீர்கள். இருபதாக இருக்கும்” என்றார்.

சக மனிதர்களை புரிந்து கொள்வது என்பது ஒரு கலை. இது வருடங்களோடு சம்பந்தப்பட்டது இல்லை. வாழும் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டது.
கணவன் மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் மன்னிப்பு கேட்பதில்லை என்று பழைய உபநிஷதத்தில் இருக்கிறதாம். ஒருவரை ஒருவர் ஆழ்ந்து புரிந்து கொண்டிருப்பதால் அங்கே மன்னிப்பே தேவைப்படுவதில்லை என்கிறார்கள்.

இப்படி ஒரு வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
திருமணமான பத்தே நாளில் விவகாரத்து செய்து விடுகிற ஃபாஸ்ட் லைப் உலகத்தில் பத்து வருஷத்திற்கு பிறகுதான் புரிந்து கொள்வார்கள் என்றால் இதெல்லாம் நடக்கிற கதையா?

காலை மிதித்துவிட்டு ஒரு ஸாரிகூட சொல்லவில்லை என்பதுதான் விவாகரத்திற்கு காரணம். இந்த உலகத்தில் உபநிஷத வாழ்க்கை சாத்தியமா?

எல்லாமே சாத்தியம்தான் என்பதைத்தான் இந்தத் தொடரில் பேசப்போகிறோம். திருமணத்தின் மேன்மை பற்றி, கணவன் மனைவியிடையே இருக்க வேண்டிய புரிதல் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமாக பேசப்போகிறோம்.

திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத்துடிக்கிற காலம் இது. எனவே இந்தத் தொடரில் கணவன் மனைவி பற்றி மட்டுமல்ல. அதற்கு முன்னால் உள்ள ஆண் பெண் நட்பு வரை எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசப் போகிறோம். திருமணத்திற்கு முன்பே ஆண் ஒரு பெண்ணையும், பெண் ஓர் ஆணையும் புரிந்து கொள்ளவேண்டும். எதிர்பாலினத்தின் மன இயல்புகள் புரிந்துகொண்டால்தான் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஒருமுறை என் நண்பனின் சகோதரி, தன் கணவருடன், என்னிடம் கவுன்சிலிங் வந்திருந்தாள். அவள் கணவரும் எனக்கு நண்பர்தான். மணமாகி ஆறுமாதம்கூட ஆகவில்லை.

கணவன்மேல் குறையான குறை சொன்ன அவளுக்கு, அவள் சொன்ன ஒரு குறையிலிருந்தே பிரச்சனையை சரியாகப் புரிந்துகொள்ள உதவி செய்தேன்.
ஒருமுறை தன் சகோதரி வீட்டிற்கு என் நண்பர் சென்றிருக்கிறார். எல்லோருமாக சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டிருக் கிறார்கள். சாப்பிட்ட பிறகு தட்டிலேயே கை கழுவிவிட்டு, சாப்பிட்ட இடத்திற்கு அருகிலேயே தலையணையை எடுத்துவைத்துக்கொண்டு அப்படியே அவள் கணவர் படுத்துவிட்டார். அண்ணனோ, தங்கச்சிக்கு உதவியாக சாப்பிட்ட இடத்திலிருந்து எல்லாவற்ûயும் எடுத்து வைத்திருக்கிறார்.

உடனே தங்கை கிண்டலாக கணவரை பார்த்து, ”பார்த்தீங்களா என் அண்ணனை, எவ்வளவு உதவியாக இருக்கிறார்?” என்று சொல்ல அண்ணன் கிளம்பியதும் தொட்டதெற்கெல்லாம் அண்ணனுடன் ஒப்பிட்டு பேசுவது பற்றி சண்டை ஆரம்பமாகிவிட்டது.

அவள் கணவர், அவளது சகோதரன் இருவருமே என்னுடன் பள்ளியில் படித்தவர்கள், இருவர் வீட்டிற்கும் நான் அதிகம் சென்றிருக்கிறேன் என்பதால் அவர்கள் குடும்ப பின்னணியை வைத்தே விளக்கினேன்.

அவளுடைய கணவர் வீட்டில், பள்ளியில் படிக்கிற காலத்தில் இருந்தே, அவன் சமையல் அறைக்குள் அனுமதிக்கப்பட்டது கிடையாது.
எதையாவது எடுக்க உள்ளே போனாலும், ”ஆம்பளைப் பசங்களுக்கு கிச்சன்ல என்ன வேலை” என்று அவன் அம்மா என் நண்பனை சத்தம் போட்டு வெளியே அனுப்பி விடுவார். ஆண்கள் வீட்டுவேலை செய்யக்கூடாது என்பது அவர் கருத்து.

இதுவே அவள் வீட்டில், அவர்கள் அம்மா ஆண்களும் எல்லா குடும்ப வேலைகளிலும் பங்கெடுக்க வேண்டும் என்று கருத்து உள்ளவர். அதனால் அவளின் அண்ணன் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்வான். வீடு பெருக்குவான், தோசை சுடுவான், ரேஷனுக்குப் போவான்.

இந்த பழக்கங்கள் அவள் திருமணத்திற்கு பிறகும் தொடர்கின்றன.
தன் கணவன் வளர்ந்த சூழலை அறியாதவள் என்பதால், அண்ணன் நல்லவர், பெண்கள் கஷ்டத்தை புரிந்தவர், கணவர் சரியில்லை. பெண்கள் கஷ்டம் புரியாதவர் என்று முடிவு செய்து விட்டாள்.

இப்போது சொல்லுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள பத்து ஆண்டுகளாவது ஆகும் இல்லையா?

அடுத்தவர் நிலையில் தன்னைப்பொருத்தி அவர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து பேசுவதற்கு எம்பதி கம்யூனிகேஷன் என்று பெயர். அது மட்டும் வாய்த்துவிட்டால் பத்து ஆண்டுகள் வேண்டாம். பத்து நாட்கள் போதும்.

பாய்ந்தோடும் நதி கடலைத்தொட்டவுடன், அதோடு கலந்து விடுவதில்லை. ஓடிவந்த வேகத்திற்கு சில கிலோ மீட்டர்கள், கடலுக்குள், நதியாகவே ஓடுகிறது. அதன் பிறகுதான் கடலோடு தன்னை கரைத்துக்கொள்கிறது. பெண்களும்கூட நதிபோலத்தான். ஓரிடத்தில் பிறந்து, ஓடி, தாவி விளையாடி, குதித்து கடைசியில் இன்னொரு இடத்தில் போய் கலக்கிறார்கள்.

கடலோடு கரையிலேயே கலந்துவிடாத நதிபோல திருமணமான உடனே தங்கள் இயல்பிலிருந்து முற்றிலுமாக மாறி மற்றவரோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு விட முடியாது. ஆனால் எம்பதி கம்யூனிகேஷன் அதிகமாக அதிகமாக, கண்கள் கலந்தன, கருத்தொருமித்தனர் என்கிற நிலையை அடைந்து விடுவார்கள்.

இல்வாழ்க்கை இனிக்க இன்னும் பேசுவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *