பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– சுவாமி தேவ ஜோதிர்மய

பாக்கெட் மணி
கொடுக்கலாமா ?

சுயமாக சம்பாதிக்கும் வயது வரும் வரை தனக்கு தேவையான ஒவ்வொன்றிற்கும் தந்தையின் முன்னால் நிற்கக்கூடாது. அவசியமான ரெகுலர் தேவைகளுக்காக கூட தந்தையின் வரவை அல்லது அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக வழங்கப்படுவதுதான் பாக்கெட் மணி.

ஆனால், இன்று எல்கேஜி குழந்தைகள் கூட பர்ஸ் வைத்திருக்கிறது. அதில் சில நூறு ரூபாய் பணமும் வைத்திருக்கிறது. எனக்கு விவரம் தெரிந்து நான் பணத்தை செலவு செய்ய ஆரம்பித்தது 8 ம் வகுப்பிற்கு பிறகுதான். ஆனால் இன்று ?

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் சம்மர் கேம்ப்பிற்கு வரும் குழந்தைகள் வெளியே செல்கையில் 100 ரூபாய் உள்ள மோட்டார் வாகனங்கள் பற்றிய மாதப் பத்திரிகையை படம் பார்ப்பதற்காக சர்வசாதாரணமாக வாங்குகிறார்கள்.

கிடைத்த பாக்கெட் மணியை இஷ்டம் போல செலவு செய்து விட்டு அவசியச் செலவுகளை அம்மாவிடம் கெஞ்சி வாங்கிக் கொள்கிறார்கள். அம்மாவிற்கு தெரியாமல் அப்பாவிடமும், அப்பாவிற்கு தெரியாமல் அம்மாவிடமும் வாங்கும் சில கில்லாடிகளும் இருக்கிறார்கள்.

பண விஷயத்தில் பெற்றோர்களுக்கு இருக்கும் அலட்சியம் அப்படியே குழந்தைகளுக்கும் படிந்து விடுவதை பல தருணங்களில் பார்த்திருக்கிறேன். எனவே பண விஷயத்தில் அலட்சியத்தை மாற்ற பாக்கெட் மணி வழங்கும் விதத்திலேயே பணத்தின் அருமை பற்றிய பாடங்களை நீங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தந்துவிடலாம்.

எதற்காக ? எவ்வளவு ? எந்த வயதிலிருந்து ?

பாக்கெட் மணி எதற்காக கொடுக்க வேண்டும்? குழந்தைகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? எந்த வயதிலிருந்து கொடுக்க வேண்டும்? என்பது பெற்றோர்களாகிய நமக்கு புரிந்து விட்டால் பிறகு குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை எளிதில் உணர்த்திவிடலாம்.

எதற்காக? என்ற கேள்விக்கான பதில் : 1) பணத்தை புரிந்து கொள்வதற்காக. 2) பணத்தை சுயமாக கையாளக் கற்றுக்கொள்வதற்காக

எவ்வளவு ? என்ற கேள்விக்கான பதில் :

5 வயது வரை சில்லறை

10 வயது வரை 10 ரூபாய்

20 வயது வரை 100 ரூபாய்

குழந்தைகளின் அன்றாடச் செலவுகளை பொறுத்து மேற்படி தொகையை நாள் ஒன்றுக்கா அல்லது வாரம் ஒன்றுக்கா என பெற்றோர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வீட்டுக்கு வரும் உறவினர்கள் பணம் கொடுத்தால் அதை சேமிக்கச்சொல்லி பழக்கப் படுத்த வேண்டும். அல்லது அந்த வார பாக்கெட் மணியை நாமே சேமிப்பில் அவர்கள் முன்னால் செலுத்தி விட வேண்டும்.

பணம் கொடுப்பதற்கு முன் செலவு செய்வதற்காக அல்ல, சேமிப்பதற்காகத்தான் பாக்கெட் மணி என்ற எண்ணத்தை குழந்தை களிடம் பதிய வைப்பது மிக முக்கியம்.

இது உன் பணம். இதை உன்னிஷ்டம் போல செலவழிக்கலாம். இந்தத்தொகைக்கான கணக்கை கொடுத்து விட்டுதான் அடுத்த முறை பணம் வாங்க வேண்டும் என்ற விதியையும் பணம் கொடுக்கும் போதே வகுத்து கொடுத்துவிட வேண்டும்.

ஹோம் ஒர்க்

எப்போது கேட்டாலும் பர்ஸில் வைத்திருக்கும் பணத்திற்கு கணக்கு வைத்திருக்க வேண்டும். குழந்தை அப்பாவிடம் கேட்கலாம். அப்பா குழந்தையிடம் கேட்கலாம். யார் அதிக சரியான விடை சொல்கிறார்களோ, அவர்களுக்கே வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *