வீட்டிற்குள் வெற்றி

– கிருஷ்ண. வரதராஜன்
இனி அவர்கள் உங்கள் குழந்தைகள் இல்லை

இனி இவர்கள் எங்கள் குழந்தைகள் இல்லை. இவர்கள் மீது நாங்கள் எந்த உரிமையும் கொண்டாட மாட்டோம். இனி இவர்கள் சுதந்திரமானவர்கள். இனி இவர்கள் சுதந்திரா மாணவர்கள். என்று எழுதி பெற்றோர்கள் கையெழுத்திட்டு எங்களிடம் கொடுப்பதுதான் சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் கொடைக்கானல் மற்றும் ஊட்டி சம்மர் கேம்பின் முதல் நாள் நிகழ்ச்சி.

சில பெற்றோர்கள் தயங்குவார்கள். சில பெற்றோர்கள் எதனால் இப்படி எழுதி கையெழுத்து போடச் சொல்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் மிரண்டு போய் கையெழுத்து போடாமல் நிற்பார்கள்.

ஏற்கனவே கேம்பிற்கான கட்டணத்தை கட்டி விட்டதாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ஓரளவு என் மேல் நம்பிக்கை உள்ளதாலும் சிலர் சட்டென்று கையெழுத்து போட்டுவிடுவார்கள்.

இப்படி எழுதி வாங்கியதன் காரணத்தை கடைசி நாள்தான் விளக்குவோம். இந்தக் கட்டுரையிலும் அப்படித்தான். கட்டுரையின் முடிவில்தான் காரணத்தை விளக்கப்போகிறேன்.

கடந்த ஆண்டு சம்மர் கேம்பில் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த ஒரு குழந்தையின் அம்மா சொன்னார்கள். என் பையனை கேம்புக்கு அனுப்பி வைச்சிட்டு முதநாள் நான் வீட்டுல அழுது கொண்டே இருந்தேன். இந்த பதினைந்து வருடத்தின் அவனை விட்டுவிட்டு நான் ஒரு நாள் கூட இருந்தது கிடையாது. நிச்சயம் அவனும் அப்படித்தான் இங்கே தவித்துக்கொண்டு இருப்பான் என்று நினைத்தேன். என் பையனுக்கு நான் கல்யாணமே செய்யப்போவதில்லை. அவனை இனி மேல் என்னால் பிரிந்து இருக்க முடியாது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவன் வந்த முதல் நாள் அவன் வயதொத்த நண்பர்களுடன் ஒன்றாகிவிட்டான். போன் செய்யும் நேரத்தில் வீட்டை பற்றி நினைப்பதோடு சரி.

குழந்தைகள் வாழ்வில் சம்மர்கேம்ப் நடைபெறும் ஒருவாரம் உண்மையிலேயே சுதந்திரமான ஒருவாரம். எழுந்திரு, குளி, சாப்பிடு, விளையாடு என்று யாரும் கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டிருக்க மாட்டோம்.

நாங்கள் சீக்கிரம் எழுந்து விளையாடுவோம். அவர்களாக வந்து இணைந்து கொள்வார்கள். அவர்களாக வேண்டிய அளவிற்கு சாப்பிட்டுக் கொள்வார்கள். ஆனால் அங்கேயும் வந்து சில பெற்றோர்கள் குழந்தைகளை கத்திக்கொண்டே இருப்பார்கள். ஸ்வெட்டர் போடு. இன்னும் கொஞ்சம் சாப்பிடு. ஓடாத. சீக்கிரம் படு. இதுக்குத்தான் உன்னை எங்கேயும் கூட்டிட்டு போறதில்ல..

டென்ஷனாகி டென்ஷனாகி கொடைக் கானலில் கூட அவர்கள் ஊரில் உள்ள வெயிலை, கிளைமேட்டை கொண்டு வந்து விடுவார்கள். குழந்தைகளை வழி நடத்துவது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை உணர்ச்சிவசப்பட்டு செய்வது மட்டும்தான் தவறு. இதை மாற்றத்தான் நாங்கள் கடிதம் எழுதி வாங்குவது.

என் குழந்தை அத்வைத் சதானந்த் உங்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறான். அப்போது நீங்கள் கொடுத்த தண்ணீர் டம்ளரை கைதவற விட்டுவிட்டான். கிளாஸ் டம்ளர் உடைந்து விட்டது . என்ன செய்வீர்கள் ? அவனை முறைப்பீர்களா? இதைக்கூட ஒழுங்கா செய்யத் தெரியல என்று சொல்வீர்களா? தலையில் ஓங்கி ஒரு குட்டு வைப்பீர்களா? இல்லை. அவன் வருத்தப் பட்டால் கூட பரவாயில்லை என்று சொல்வீர்கள். சிரித்துக்கொண்டே சுத்தம் செய்வீர்கள்.

ஆனால் இதுவே உங்கள் குழந்தையாக இருந்தால் மேலே சொன்னதெல்லாம் மிகச் சிறப்பாக நிகழும். என் குழந்தை என்கிற போது நிதானமாக கையாண்ட நீங்கள் உங்கள் குழந்தை என்கிறபோது மட்டும் ஏன் உணர்ச்சி வசப்பட்டீர்கள் ?

இதே காரணத்திற்காகத்தான் நாங்கள் இனி இவர்கள் எங்கள் குழந்தைகள் இல்லை என்று எழுதிவாங்குவதும். இதை மாற்றுவதற்காக சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் சம்மர் கேம்பில் இன்னொரு வழிமுறையையும் கடைப் பிடிக்கிறோம். இரண்டு நாட்களில் எல்லாக் குழந்தையும் ஒன்றோடு ஒன்றாகிவிடும். எல்லா பெற்றோரும் ஒன்றாக ஸைட்சீயிங் செல்வது, ஒன்றாக சாப்பிடுவது என்று ஒரே குடும்பமாகி விடுவார்கள்.

அந்த நேரத்தில் ஒவ்வொரு குழந்தையையும் மற்றொரு பெற்றோரின் பொறுப்பில் விட்டு விடுவோம். இனி உங்கள் குழந்தைகளை நீங்கள் கண்டு கொள்ளவே கூடாது. அவன் சாப்பிட்டானா? குளித்தானா ? ஒழுங்காக கற்றுக் கொண்டானா? எதைப்பற்றியும் கவலைப்படக் கூடாது. உங்கள் பொறுப்பில் உள்ள குழந்தைகள் தான் இனி உங்கள் குழந்தைகள். அவர்களை மட்டுமே வழிநடத்த வேண்டும். அவர்களை மேம்படுத்துவது பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும் என்று அறிவுறுத்திவிடுவோம். தன் பொறுப்பில் உள்ள குழந்தையிடம் யாரும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். திட்ட மாட்டார்கள். முறைக்க மாட்டார்கள். நான்கே நாட்களில் இப்படி பொறுமையாக இருப்பது அவர்களின் நடைமுறையாக மாறிவிடும். அதன் பிறகு அவர்கள் குழந்தையே ஏதாவது தவறு செய்தால்கூட பொறுமையாகத்தான் சொல்வார்கள்.

பல குழந்தைகள் அதிர்ச்சியோடு பார்க்கும் நம் பெற்றோரா இவ்வளவு பொறுமையாக பேசுவது என்று.

கொடைக்கானலில் இருந்து கேம்ப் முடித்து கிளம்பும் போது பலர் தங்கள் வீட்டிற்கு கொடைக்கானலின் குளிர்ச்சியை எடுத்துக் கொண்டு கிளம்புவார்கள்.

உங்கள் வீட்டில் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நீங்களும் உணருங்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் இல்லை. கடவுள் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்த விருந்தினர்.

உங்கள் குழந்தையை உங்கள் செல்போன் உங்கள் பேனா போல உங்களுடைய உடைமையாக இல்லாமல் உங்கள் விருந்தினராக உங்களுக்கு கிடைத்த பரிசாக நினைக்கும் ஒரு மனப்பான்மையை பெறுவதே நீங்கள் வீட்டிற்குள் பெற வேண்டிய வெற்றி.

  1. கண்ணகி

    நீங்கள் சொல்வதை நான் பரிபூரணமாகப் புரிந்துகொண்டேன்…அவர்கள் மீதுள்ள அன்பினால் பெற்றொர்கள் செய்யும் கட்டுப்பாடுகள் அவர்களை இயல்பாய் இருக்க்விடுவதில்லை…அருமையான பதிவு சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *