– நேத்ரா
வெற்றியாளர்கள் பலரையும் கவனித்துப் பார்க்கையில் ஒன்று புலப்பட்டது. அவர்களில் பலருக்கும் இருக்கும் அபூர்வ ஒற்றுமை, விவாதங்களை ஊக்குவிக்காததுதான்.
ஓர் உரையாடலின் போக்கை அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்த உரையாடல் போகிறதா, அல்லது தங்கள் தனிப்பட்ட அபிப்பிராயங்களை அழுத்தமாகப் பதிக்க முயற்சி நடக்கிறதா என்று பார்க்கிறார்கள். முதல்வகை என்றால் மனமுவந்து பங்கேற்கிறார்கள். இரண்டாவது வகை என்றால், இடம் பொருள் ஏவல் தெரிந்து மெல்ல விலகுகிறார்கள்.
மாற விரும்பாதவர்களை மாற்ற முயற்சிப்பது நேர விரயம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. விஷயங்களைத் தெரிந்து கொள்ள விவாதங்கள் உதவும். விதண்டா வாதங்கள் உதவவே உதவாது.
அகங்காரத்தில் ஆர்ப்பாட்டமும், வெற்றுக் கூச்சலின் வேடிக்கைக்களமுமாய் இருக்கும் சூழ்நிலைகளை விட்டு மெல்ல நகர்பவர்கள் புத்திசாலிகள். இதே நேரம், ஒரு விஷயத்தை ஆரோக்கியமான கலந்துரையாடலாய்க் கொண்டு செலுத்துவது, நிச்சயம் அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல பலன்களைக் கொடுக்கும்.
கலந்துரையாடலின்போது, ஒருவர் தவறாகவே சொன்னாலும், அது தவறென்று முகத்துக்கு நேரே சொல்லாதீர்கள். அதை அவரே உணரும் விதமாய் உரையாடலை இதமாக நகர்த்துங்கள்.
நீங்கள் சொன்ன செய்தி தவறென்றால், அதை அறிவிக்கும் முதல் மனிதராக நீங்களே இருங்கள்.
இன்னொருவர் இடத்திலிருந்து ஒரு விஷயத்தைப் பார்த்துப் பழகுங்கள்.
உங்களைவிட அடுத்தவரை அதிகம் பேச விடுங்கள். இது உங்கள்மேல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்.
ஒருவரின் கருத்துக்கு எதிரான கருத்தைச் சொல்வதென்பது, அவரை எதிர்த்துப் பேசுவதாய் ஆகாது என்பதைப் புரியவையுங்கள்.
ஒரு கலந்துரையாடல் கொஞ்சம் சூடாகப் போகிறபோது சூழ்நிலையைக் குளிர்விக்க சுமூகமாகப் பேசுங்கள்.
நகைச்சுவையாகப் பேசுவதாய் நினைத்துக் கொண்டு மற்றவர்களைப் புண்படுத்தாதீர்கள்.
விவாதத்தின் மையப்புள்ளியிலிருந்து விலகி வேறு விஷயங்களை நோக்கி உரையாடல் தறி கெட்டு ஓட அனுமதிக்காதீர்கள்.
விவாதத்தில் ஒருவர் பேசும்போது, பங்கேற்கும் அனைவரும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பது அந்தக் குழுவின் மீதான நம்பகத்தன்மையைக் கெடுக்கும்.
விவாதங்களின் முடிவில், பங்கேற்ற ஒவ்வொருவரையும் மனம்விட்டுப் பாராட்டுங்கள்.
மனிதர்களோ, சூழல்களோ, … நீங்கள் எதிர் கொள்ளும் விதத்தைப் பொறுத்தே எல்லாமும் இருக்கிறது. சார்லஸ் ஸ்விண்டால் என்ற மேல் நாட்டறிஞர் ஒருமுறை சொன்னார், “வாழ்க்கையில் எனக்கென்ன நேர்கிறதோ, அது 10% தான் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மீதமுள்ள 90% அதற்கு நான் ஆற்றும் எதிர்வினையில் இருக்கிறது” என்று.
விவாதங்களை வெற்றிமிக்க கலந்துரையாடல்களாய் வளர்த்தெடுப்பதும், விதண்டாவதங்களாய் கொண்டு செலுத்துவதும் நம்மிடம்தான் இருக்கிறது.
Leave a Reply