சாதிக்கும் உத்வேகம்… உங்களிடமிருந்தே…

– ஹாசினி

” நான் சரியான பாதையில் செல்கிறேன். தீவிரமாக செயல்படுகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்”.

இந்த வார்த்தைகளை எப்பொழுதும் உங்களால் சொல்ல முடியுமா? “சில நேரங்களில் முடியும். பல நேரங்களில் முடியாது” என்பதே பலரின் பதிலாக இருக்கும்.

நீங்கள் இன்று சாதித்திருக்கும் செயலில் நேற்று தோல்வியைத் தழுவியிருக்கக் கூடும். ஆறு மாதத்திற்கு முன் நீங்கள் பெரும் லாபம் கண்ட உங்கள் தொழில் ஒரு வருடம் முன்பு நீங்கள் நஷ்டமடைந்திருக்கக்கூடும். வாழ்வில் ஆங்காங்கே ஒருமுறை வெற்றி பெறுவது வெகு சுலபம். தொடர் வெற்றிகள் மட்டுமே நம்மை சாதனையாளனாக்கி நம் தனித்துவத்தை கூட்டுகிறது. தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற நாம் கடந்து வந்த பாதைகளை நாமே சீர்தூக்கி பார்க்க வேண்டும். நாம் தவறவிட்ட இடங்களைக் கண்டு கொண்டு, நமக்கு நாமே சரியான பின்னூட்டத்தை அளித்துக் கொள்வதன் மூலம் நம்மை வெற்றியின் விளிம்பில் எப்போதும் தக்கவைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் என்றோ பெற்ற வெற்றிக்காக, எப்போதும் பாராட்டுவிழா நடத்திக் கொண்டேயிருப்பார்கள் என்று காத்திருக்கக் கூடாது. உங்கள் நண்பர்களும், வழிகாட்டிகளும் எல்லா நேரமும் உங்களை உச்சி முகர்ந்து பெருமை பேசி கொண்டேயிருப்பார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. உங்கள் ஆளுமையை உணர்ந்த உங்களுக்கு நீங்களே உத்வேகம் ஊட்டிக் கொள்ள வேண்டும்.

எந்தத் துறையில் சாதிக்கத் துடிக்கிறீர்களோ, அதன் உச்சபட்ச உயரத்தை நோக்கியே திட்டமிடுங்கள். உதாரணமாக, இரண்டாம் உலகப்போரின் போது ஆயிரக் கணக்கான பாராசூட்டுகள் தேவைப்பட்டன. அதைத் தைப்பது மிகவும் கடினமான செயல். அந்த காலத்தில் ஒரு பாராசூட் தைப்பதற்கு ஒரு நாளில் எட்டு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் பிடிக்கும். இடைவெளியின்று அயராது உழைத்து களைத்த தொழிலாளர்களுக்கு நினைவு படுத்தப்பட்ட நம்பிக்கை வாசகம் இதுவே…

“நீங்கள் செலவிடுகின்ற பல மணி நேரங்கள் இனி வரும் காலத்தில் ஏதோ ஒரு உயிரைக் காக்க விருக்கிறது. நீங்கள் இதை தைக்கும் போது இந்த பாராசூட்டை உங்கள், கணவர், மனைவி, குழந்தைகள், பெற்றோர் அணிவதாக எண்ணிக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டனர்.

கடுமையான வேலைப்பளு, மற்றும் பல மணி நேரம் ஓய்வில்லா உழைப்பும் இவை அனைத்தையும் தாண்டி, செய்யும் செயலின் தேவை அறிந்து உண்மையாக செயல்பட்ட அந்த தொழிலாளிகள் பெரிதும் பாராட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் குறிப்பிட்டதைப் போல், நாம் எந்தத் துறையில் இருப்பினும், அதன் மூலம் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பயன் பெறப் போகிறார்கள். அதன் தேவையறிந்து செயல்படுகிற போது பாராட்டுக்கள் தேடி வரும்.

பிறருக்காக உழைப்பதன் தேவை உணர்த்தப் பட்ட அடுத்த நொடி அந்தத் தொழிலாளர்களுக்கு இயற்கையாகவே நம்பிக்கையும், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பும் அதிகரித்துள்ளது. அதுபோல்தான் நமக்கு ஏதோ ஒரு வகையில் கிடைக்கிற நற்சிந்தனைகள் எப்பேர்ப்பட்ட தடைகளையும் தாண்டி வெற்றி பெறும் ஆற்றலை நமக்குள் இயற்கையாகவே வளர்த்து விடுகிறது.

நல்ல பழக்கங்கள் நமக்கு ஒழுக்கத்தை மாத்திரம் தருவதில்லை. ஒப்பற்ற வெற்றியையும் தேடித் தருகிறது.

தீர்வில்லாத பிரச்சனைகளையும் பிளந்து முன்னேற, நற்பழக்கங்களையும் வளர்ப்பதுதான் சிறந்த வழி.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் செயல்திறனை வெளிக்கொணர்ந்து உங்களை சாதனை யாளனாக்கும் கருவி நீங்கள். நீங்கள் மட்டுமே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *