கற்போம் கற்பிப்போம்

– ருக்மணி பன்னீர்செல்வம்

அறிவின் எல்லை வரையறுக்க இயலாதது. கற்றலின் எல்லைக்கும் வரையறை இல்லை.

பாடத்திட்டத்தின் மூலமாக படிப்பவர்கள் பள்ளிப் படிப்பிற்குப் பின் மூன்றாண்டுகளோ, ஐந்தாண்டுகளோ பயின்று பட்டம் பெற்று படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள். அதற்கு மேலும் பயில்வதென்பது தேவையைப் பொறுத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

கற்றல் என்பது பாடத்திட்டத்தின் மூலமாக கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ படித்தல் என்பது மட்டுமே பொருளாகாது.

தெரிந்ததிலிருந்து தெரியாதது, ஒன்றிலிருந்து மற்றொன்று என கற்றல் நம் வாழ்வு முழுக்க நடைபெற்றுக் கொண்டேயிருப்பது. ஒவ்வொரு சூழலிலும் நாம் புதிதாக ஒன்றை அறிகின்றோம். புதிது புதிதாய் அறிய அறிய, அறிவு விசாலமாகின்றது. பட்டறிவு என்பது படிப்பறிவை விடவும் நம் வாழ்க்கைக்கு அதிகமாய் உதவக் கூடியது.

கற்றறிதலின் பலன் நாம் அவற்றை செயல் பாட்டில் கொண்டு வருதலில்தான் அடங்கி உள்ளது. கற்றறிதலை நாம் பின்வருமாறு பிரிக்கலாம்.

எதைச் செய்தல் வேண்டும்.

எதைச் செய்தல் கூடாது.

எவற்றைப் பின்பற்ற வேண்டும்.

எவற்றைப் பின்பற்றுதல் கூடாது.

இந்த நான்கு அம்சங்களில் அனைத்தும் அடங்கிவிடுகிறது. கற்றுக் கொள்ளுதல் என்பதை இன்னாரிடத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றோ, இப்படித்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றோ வரையறை வைத்துக் கொள்ளுதல் தேவையற்றது. கற்றறிதல்தான் முக்கியமே தவிர வழிகளைப்பற்றிக் கவலைப்படுதல் கூடாது.

எங்கேயெல்லாம் நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளதோ, யாரிடத்தில் எல்லாம் நமக்குத் தேவையான அறிவு கிடைக்கின்றதோ, அவற்றை அடைவதற்கு எப்படிப்பட்ட தடைகள் இருப்பினும், தடைகளைத் தாண்டிச் சென்று கற்றுக் கொள்ள நாம் தயங்குதல் கூடாது.

காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டிய மன்னர் இரண்டாம் நரசிம்ம வர்மப் பல்லவன். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயிலைக் கட்டத் தொடங்கிய இம்மன்னர் இங்கு காலத்தால் அழியாத வண்ண ஓவியங்களைப் படைக்க எண்ணினார். அதற்காக மராட்டியத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா சிற்பங்களையும், ஓவியங்களையும் கண்டு அங்கு பயன்படுத்தப் பட்டுள்ள வண்ணக்கலவைகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். மூலிகைகளின் இரகசியங்களை வெளியிட மறுத்த காலம் என்பதால் அவற்றைமிக நுட்பமாக அறிந்து கொள்ள திட்டமிட்டார்.

ஒரு பணியாளன் போல் வேடம்பூண்டு மராட்டியத்திற்குச் சென்ற நரசிம்மவர்மப் பல்லவன் மராட்டிய மன்னனிடத்தில் ஒரு கட்டிடப் பணியாளனாக வேலைக்குச் சேர்ந்தார். ஆறு மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து தொழில் நுட்பங்களையும், ஓவியங்களுக்கு பயன்படுத்தப்படும் வண்ணக் கலவைகளையும், அதற்கான மூலிகைகளையும் அறிந்துவந்து தன்னுடைய ஆலயத்தில் பயன்படுத்தினார்.

மிகப்பெரும் அளவில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்தக்காலத்திலும் அம்மன்னர்கள் பயன்படுத்திய காலத்தால் அழியாத வண்ணக் கலவைகளைப் பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்தோ-அரேபிய எண்முறைகளை முதன் முதலில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியவர் அடிலார்ட் என்னும் கிருத்துவப் பாதிரியார். இவர் இந்தோ-அரேபிய எண்முறைகளை கற்றுக் கொள்வதற்காக தன்னை ஒரு முஸ்லீம் என்று கூறிக்கொண்டு அரேபியாவில் உள்ள கார்டோவா என்னும் பள்ளியில் சேர்ந்தார். அங்கு இந்தோ அரேபிய எண்முறையினையும் பல கணித நூல்களையும் கற்றுணர்ந்தார். அதன்பின்னர் அரேபிய கணித அறிஞர் அல்கொவாரிஸாமியின் நூல்களை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். அதற்குப் பின்னர்தான் இந்தோ அரேபிய எண்முறைகளை ஐரோப்பா அறிந்து கொண்டது.

குப்பைகளிலிருந்து விலைபோகக்கூடிய பாலீதின் பைகளையும். காகிதங்களையும் பொறுக்கி எடுப்பவர்கள் (பொறுக்குதல் என்பது தேர்ந்தெடுத்தல் என்னும் பொருள்தரும் பொருத்தமான தமிழ்ச்சொல்). அதிகாலை நேரத்திலேயே அவர்களின் பணியைத் தொடங்கி விடுகிறார்கள். தாமதமாய்ப் போனால் எதுவும் கிடைக்காது என்பதை அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

‘அதிகாலைப் பறவைக்குத்தான் இரை கிடைக்கும்’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.

தம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது எது என்பதை உணர்ந்து அதை உடைத்தெறிபவர்கள்தான் வளர்ச்சியை எட்டுகிறார்கள். நம் முன்னோர்களில் பலர் எழுதப்படிக்கவே தெரியாதபோதும் தனக்குத் தேவையான வற்றைப் படித்துக் காண்பிப்பதற்காகவே படித்தவர்களை வேலைக்கு அமர்த்தி கேட்பதன் மூலம் அறிவைப் பெற்றார்கள்.

நடைமுறைப்படுத்தும்போது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகும் செயல்பாடுகள் வெற்றியடைந்தபின் போற்றப்படுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

அமெரிக்க நாட்டின் மிகப் பிரபலமான தொழிலதிபர் ஹென்றி ஜே.கெய்கர் சொல்கிறார். “என்னைச் சுற்றி என்னைவிட புத்திசாலியான மக்களை வைத்துக்கொண்டு, அவர்களின் அறிவுரைப்படி நடந்து என் தொழிலை வளர்த்து வருகிறேன்”.

கற்றறிதல்தான் நம்மை வளர்த்தெடுக்கும். நாம் கற்றுக்கொள்வது மட்டுமே குறிக்கோளாய் இல்லாமல் நாம் கற்றதையும் பெற்றதையும் மற்றவர்களும் பெறும் வண்ணம் நம்முடைய செயல்பாடுகள் அமைதல் வேண்டுமென்பதும் மறத்தல் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *