வீட்டிற்குள் வெற்றி

மாணவர் பகுதி

– கிருஷ்ண. வரதராஜன்

பெற்றோரில் நீங்கள் எந்த வகை?

பெற்றோர்களுக்காக சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் மூலமாக நாங்கள் நடத்தும், ‘சாதனையாளர்களை உருவாக்குவோம்’ பயிற்சி நிகழ்ச்சியில் பெற்றோர்களை அவர்களின் செயல்பாடுகளை வைத்து ஐந்து வகையாகப் பிரித்து அறிமுகப் படுத்துவோம்.

நிகழ்ச்சியின் சுவராஸ்யத்தை கூட்டும் அந்த ஐந்து வகைகளை இங்கே தருகிறேன். இதில் நீங்கள் எந்த வகை என்று கண்டறியுங்கள்.

அவசர பெற்றோர்கள்

பிறந்தவுடனேயே தங்கள் குழந்தைகள் அஹிம்சையில் காந்தியைப்போலவும் அன்பு காட்டுவதில் அன்னை தெரசா போலவும் செஸ் விளையாடுவதில் விஸ்வநாத் ஆனந்த் போலவும் இருக்க வேண்டும் எதிர்பார்ப்பார்கள்.

தங்கள் குழந்தை நாளையே சாதிக்க வேண்டும் என்பதற்காக இன்றைய நாள் முழுவதையும் குழந்தைக்காக அர்ப்பணிக்கும் பெற்றோர்கள் இவர்கள். இவர்களின் குழந்தைகளை வைத்தே இவர்களைக் கண்டுபிடித்து விடலாம். இவர்களின் குழந்தைகள் 6 மணிக்கு கராத்தே கிளாஸ் போகும். 7 மணிக்கு நீச்சல் கிளாஸ் போகும். 8 மணிக்கு கம்ப்யூட்டர் கிளாஸ். பிறகு ஸ்கூல் , டியூசன், மாலை டான்ஸ் கிளாஸ் யோகா கிளாஸ் என்று ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே இருக்கும். இன்னும் என்னவெல்லாம் கற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளவே ஒரு கிளாஸ் போகும்.

காரணம், இவ்வகை பெற்றோர்களைப் பொறுத்தவரை குழந்தைகள் என்பது அவர்களின் பாக்கெட்டில் குத்திக்கொள்கிற பதக்கம். இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் வெற்றியை எதிர்பார்ப்பதால் இந்த வகை பெற்றோர்களை அவசர பெற்றோர்கள் என்கிறோம். இந்த வகை பெற்றோர்களை நாங்கள் கோ-கோ பெற்றோர்கள் என்றும் சொல்வதுண்டு.

கோ-கோ விளையாட்டு உங்களுக்கு தெரிந்திருக்கும். அனைவரும் வட்டமாக உட்கார்ந்திருப்பார்கள். ஒருவர் ஓடுவார். ஒருவர் துரத்துவார். ஓடுகிறவர் அவரால் முடியாத போது உட்கார்ந்திருக்கும் ஒருவர் முதுகில் தட்டி கோ என்பார். அவர் எழுந்து ஓட, இதுவரை ஓடியவர் அந்த இடத்தில் உட்கார்ந்து கொள்வார்.

இந்த வகை பெற்றோர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையில் டாக்டராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள். முடிந்திருக்காது. இனி ஓட முடியாது என்பதால் தங்கள் மகன் அல்லது மகளின் முதுகில் தட்டி, ஓடு ஓடு என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். எனவே இவ்வகை பெற்றோர்களுக்கு கோ-கோ பெற்றோர்கள் என்ற காரணப்பெயரும் உண்டு.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தங்களைப் பற்றிய அதிக பெருமையுடனே வளர்வார்கள்.

அன்பு பெற்றோர்

நாம்தான் வாழ்க்கையில் கஷ்டப் பட்டோம். நம் குழந்தைகள் எந்தக் கஷ்டமும் படக்கூடாது என்று நினைப்பவர்கள் இவ்வகை பெற்றோர்கள். குழந்தைகளின் மனம் வாடக் கூடாது என்று எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் கேட்பதற்கு முன்னாலே வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் அவர்கள் அன்பு பெற்றோர்களாக இருந்து விடுவது உண்டு. தாங்கள் சம்பாதிப்பது எல்லாமே குழந்தைகளுக்குத்தானே என்ற கருத்தில் அவர்கள் கேட்பது எதையும் தட்டாமல் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். மேலும் குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாத இயலாமையை மறைப்பதற்காகவும் இப்படி எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கும் உத்தி இவர்களுக்கு உதவும்.

இளம் மனங்கள் எதற்காகவும் வாடக் கூடாது என்பது இவர்களின் கொள்கையாக இருக்கும். அன்பை வெளிப்படுத்துவதற்கான வழி எதையாவது வாங்கித்தருவது என்பது இவர்களின் பிரதான செய்கையாக இருக்கும்.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் பெரும்பாலும் பிடிவாதம் பிடிப்பவர்களாகவே வளர்கிறார்கள்.

அடிதடி பெற்றோர்

என்ன ஆச்சு? குழந்தை அழுதது. இரண்டு சாத்து சாத்து . நீ குழந்தையா இருக்கிறச்ச. அதான் செஞ்சேன். என்ன ஆச்சு ? குழந்தை அழுதது. இரண்டு உதை உதை. நீ குழந்தையா இருக்கிறச்ச. அதான் செஞ்சேன்.

என்ன வூட்வர்ஸ் கிரேப் வாட்டர் விளம்பரம் மாதிரி இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா?

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான். அடியாத மாடு படியாது. அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகரும். இப்படி அடிப்பதற்கு மட்டும் இவர்கள் ஆயிரம் தத்துவ முத்துக்களை தன் வசம் வைத்திருப்பார்கள். வழிகாட்ட வேண்டிய வயதில் குழந்தைகளை கண்டிப்பதன் மூலமாக மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்புகிறவர்கள் இவர்கள்.

அடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளை எங்கள் நிகழ்ச்சிகளில் நாங்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும்  எங்களை எங்க அப்பா அம்மா அடிச்சுதானே வளர்த்தாங்க. நாங்க இன்னிக்கு நல்லா இல்லையா? என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.

அடித்து வளர்த்தே நீங்கள் இவ்வளவு வளர்ந்திருக்கிறீர்களே? அடிக்காமல் வளர்த்திருந்தால் இன்னும் எவ்வளவு வளர்ந்திருப்பீர்கள் என்றுதான் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையுடனேயே வளர்வார்கள்.

இராமன் இராவணன் பெற்றோர்

பெயர் சொன்னால் போதும். தரம் எளிதில் விளங்கும் என்பதைப்போல, இந்தத் தலைப்பை பார்த்தவுடனே நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இராமன் ஆண்டால் என்ன ? இராவணன் ஆண்டால் என்ன ? என்பதைப்போல குழந்தை படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன என்று இருப்பவர்கள் இவ்வகை பெற்றோர்கள்.

இந்த வகை பெற்றோரை ஓர் எளிய கேள்வியின் மூலம் கண்டறிந்துவிடலாம். உங்கள் குழந்தை என்ன வகுப்பு படிக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். ஆறாவதோ ஏழாவதோ படிக்கிறான் என்பார்கள் தடுமாறியபடியே. நான் கிண்டலாக சொல்வதுண்டு. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டுப்பாருங்கள். இரண்டோ மூன்றோ என்பார்கள்.

சில அதிஷ்டசாலி குழந்தைகளுக்கு மட்டும் பெற்றோரில் குறிப்பாக தந்தை இராமன் இராவணன் பெற்றோர் வகையை சேர்ந்தவராக இருந்தாலும் தாய் அன்பு பெற்றோர் இனத்தை சேர்ந்தவராக அமைந்து விடுவதுண்டு. இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தன்னம்பிக்கை யையும் சுயமதிப்பையும் வளர்த்துக் கொள்ள முடியாமல் தடுமாறுவார்கள்.

என் நிகழ்ச்சியில் இப்படி நான் பெற்றோர்களை வகைப்படுத்தும்போது, சில பெற்றோர்கள் தாங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வகைகளில் வருவதாக சொல்லி வருத்தப் படுவதுண்டு. சரி இதெல்லாம் எப்படி இருக்கக் கூடாது என்ற வகைகள். இனி பார்க்கப்போகும் ஐந்தாவது வகைப் பெற்றோர்தான், பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வகை.

குழந்தை மையப்பெற்றோர்

யார் குழந்தையுடைய கண்களிலிருந்து இந்த உலகத்தை பார்க்கிறார்களோ, யார் குழந்தை யுடைய காதுகளிலிருந்து இந்த உலகத்தை கேட்கிறார்களோ, யார் குழந்தைகளுடைய இதயத்திலிருந்து இந்த உலகத்தை புரிந்து கொள்கிறார்களோ, அவர்களே குழந்தை மைய பெற்றோர்கள்.

ஓர் உதாரணம் சொன்னால், எல்லா வகை பெற்றோர்களையும் நீங்கள் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

வீட்டிற்கு வந்த விருந்தினர் தண்ணீர் கேட்கிறார். ஒன்றாவது படிக்கும் உங்கள் குழந்தை ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வருகிறது. ஈரக்கையில் கிளாஸ் டம்ளர் வழுக்கி கீழே விழுந்து உடைந்துவிடுகிறது.

ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று ஓங்கி ஓர் அறை வைத்தால் நீங்கள் அடிதடி பெற்றோர். ஐயோ டம்ளர் விழுந்துடுச்சு. கால்ல அடிபட்டிடுச்சு. பிராக்சர் ஆகியிருக்கும். டாக்டருக்கு போன் பண்ணுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தால் நீங்கள் அன்பு பெற்றோர். டம்ளர் விழுந்த சத்தம்கூட கேட்காத மாதிரி உட்கார்ந்திருந்தால் நீங்கள் இராமன் இராவணன் பெற்றோர்.

சரி. இனி பெற்றோர்களில் சிறந்த வகையான குழந்தை மைய பெற்றோர்கள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.

எல்லார் முன்னிலையிலும் டம்ளர் போட்டு உடைத்துவிட்டதால் குழந்தை பதட்டத்தில் இருக்கும். இதைக்கூட செய்யத் தெரியவில்லை என்று குற்ற உணர்ச்சியில் இருக்கும் என்று புரிந்து கொண்டு குழந்தைகளிடம் ஆறுதலாகப் பேசுபவர்கள் குழந்தை மையப்பெற்றோர்கள்.

பயப்படாத. கலங்காத. நீ என்ன வேணும்னா போட்டு உடைச்ச. எதிர்பாராமதான இப்படி நடந்தது. நான் கூட ஒன்றிரண்டு முறை கவனக்குறைவா இப்படி உடைச்சிருக்கேன்.

எப்போதுமே தப்பு நடந்த அழதா. அதை எப்படி சரி செய்யறதுன்னு பதட்டப்படாம யோசி. சரி. இப்ப பெரிய கிளாஸ் பீஸ் எல்லாத்தையும் நீ எடு. சின்ன கிளாஸ் பீஸ் எல்லாத்தையும் நான் எடுக்கிறேன். நான் எப்படி எடுக்கிறேன்னு பாரு. நாளைக்கு நான் இல்லாத போது இப்படி நடந்தால் நீயே சுத்தம் செய்து கொள்ளலாம். சரியா? என்பார்கள்.

இப்படி பேசுவதால் என்ன ஆகும் என்கிறீர்களா ? வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள் எதற்குமே துவண்டு போகாது. தோல்விகள் வந்தால் துவளாது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசிக்கும். அதாவது குழந்தை மையப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள். இதைக் கற்றுக் கொடுக்கத்தானே பெற்றோர்கள் ?

இப்படி வளரும் குழந்தைகள் சாதனை யாளர்களாக, துணிச்சல்மிக்கவர்களாக  தன்னம்பிக்கை மிக்கவர்களாக வளர்வார்கள்.

இப்போது சொல்லுங்கள். நீங்கள் எந்த வகை பெற்றோர்களாக இருக்க விரும்புகிறீர்கள் ?

2 Responses

  1. சிவா

    சிறந்த வழிகாட்டுதல் மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *