– லக்ஷணா
புகழ்பெற்ற பெண் விமானி ஒருவர் தன் சுய சரிதையில் எழுதியிருந்தார். “வாழ்க்கை என்பது விமானப்பயணம். சிலருக்கான ஓடுதளங்களை அவர்களுடைய குடும்பமோ முன்னோர்களோ உருவாக்கியிருப்பார்கள். உங்களுக்கான ஓடுதளம் முன்னமே உருவாக்கப்பட்டிருந்தால், அதில் ஓடத் தொடங்கி உயரப்பறங்கள். இல்லையென்றால், உங்கள் ஓடுதளங்களை நீங்களே உருவாக்குங்கள்”.
யோசித்துப் பார்த்தால், சில விஷயங்கள் இல்லையென்பதற்காகவே பலவற்றை செய்யாமல் விட்டு விடுகிறோம். போதிய கல்வி இல்லை, போதிய வசதி இல்லை என்பவையெல்லாம் காரணங்கள்தான். ஆனால் கடக்க முடியாத காரணங்களில்லை. பிறந்த சூழலிலும் வளர்ந்த சூழலிலும் இருக்கிற பின்னடைவுகள், புதிய இலக்குகள் நோக்கிப் புறப்பட உத்வேகம் தர வேண்டும். தகுதியின்மைதான் தகுதிகளைத் தேடிச் செல்வதற்கான அடிப்படைத் தகுதி.
உங்கள் கனவை எட்டும் தகுதி உங்களுக்கு உண்டு என்கிற நம்பிக்கையை உறுதியாக உருவாக்கிக் கொண்டால், தகுதிக் குறைவுகளை எல்லாம் நிறைவு செய்கிற வழிகள் தாமாகவே புலப்படத் தொடங்கும்.
சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்கிற கனவு, ஒருவருக்கு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கனவு, அவருக்குள் தோன்றிய ஆசையா, அல்லது நிர்ப்பந்தங்கள் காரணமாய் அப்படி ஓர் இலக்கை வகுத்துக் கொண்டாரா என்று முதலில் பார்க்க வேண்டும்.
உடன் பணிபுரிபவர்கள் எல்லாம் சொந்தமாக வீடுகட்டிக் கொண்டு போனதால் தானும் வீடுகட்ட நினைப்பாரென்றால் அது நிர்ப்பந்தம். சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்கிற தீவிரம் அவருக்குள் ஏற்பட்டால் அது அவருடைய கனவு.
இப்போது இவருக்கு ஏற்பட வேண்டிய நம்பிக்கை ஒன்றே ஒன்றுதான். “என்னுடைய கனவை என்னால் எட்ட முடியும்” என்கிற துணிவுதான் அது.
அதன்பிறகு அதற்காக விதிமுறைகள் மள மளவென்று புலப்படும். வங்கியில் கடன் வாங்குவது, மாலை நேரங்களில் டியூஷன் எடுப்பது, புதிதாக வீடு கட்டும்போதே கீழே சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவது என்று விதம் விதமான வாசல்களைத் திறந்து கொண்டு போய் சொந்த வீட்டுக்கு நிலைவாசல் வைத்து விடலாம்.
ஒன்றை எட்டவேண்டும் என்கிற கனவு உங்களுடையதாக இருந்தால் அதனை எட்டுகிற உத்திகள், வழிகள், வாய்ப்புகள் எல்லாவற்றையும் உங்களின் தீவிரமே உருவாக்கித் தந்துவிடும்.
தயக்கம் படர்ந்த கனவுகள் தேங்கிப் போக வைக்கின்றன. தெளிவில்லாத இலக்குகள் குழப்பத்தையே உருவாக்குகின்றன. எந்தவோர் இலக்கைத் தொடுவதன்றாலும், முதலில் பேச வேண்டியது உங்கள் உள்ளுணர்வோடுதான்.
ஒரு விருப்பத்தை எட்ட முடியுமா என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால் ஓரமாகக் கண் மூடி அமருங்கள். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியேற்றுங்கள். உங்கள் கனவை தெளிவான காட்சியாக மனக்கண்ணில் நிறுத்துங்கள். அந்தக் கனவை, தூரத்தில் தெரிகிற மாளிகையாகக் கற்பனை செய்து கொண்டு அதைச் சென்றடைவதற்கான வழிமுறைகள் யோசியுங்கள்.
அந்தக் கனவை எட்டத் தேவையான அடிப்படை வழிகள், எடுக்க வேண்டிய முயற்சிகள் அதற்கென ஆகக்கூடிய காலம் என்று பலவற்றையும் மனதில் பட்டியலிடுங்கள். இந்த வழிகளை பலப்படுத்திக் கொண்டால் இலக்கை உறுதியாக எட்ட முடியுமா என்று உங்கள் உள்ளுணர்வைக் கேளுங்கள்.
அதன்பின் அசாத்தியமான நம்பிக்கையுடன் உங்கள் கனவை எட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் முழு மனதோடு ஈடுபடுங்கள்.
இன்றைய உள்ளுணர்வில் எது துல்லியமாகத் தெரிகிறதோ, அதுதான் நாளைய நிஜம். உள்ளுணர்வு சில நேரம் தானாக சில காட்சிகளை வெளிப்படுத்தும். அதே போல நீங்களாக உருவாக்கிக் கொள்கிற காட்சிகளையும் பலப்படுத்தும்.
வீடு கட்டுவது பற்றிய உதாரணத்தை இந்தக் கட்டுரையில் பார்த்தோம். உண்மையில் ஒவ்வோர் இலக்குமே ஒரு கட்டிடம் கட்டுவது போலத்தான். எட்ட வேண்டிய உயரத்தை நோக்கி, படிப்படியாய் முயல்வதன் மூலம் மிக உறுதியாய் மெல்ல மெல்ல முன்னேறுகிறீர்கள் என்று பொருள்.
சிறந்த எழுத்தாளராக வரவேண்டுமா? தினமும் பல பக்கங்கள் படிக்க வேண்டும். சில பக்கங்கள் எழுத வேண்டும். சிறந்த பாடகராக வேண்டுமா? தினமும் குறிப்பிட்ட நேரம் பயிற்சி செய்ய வேண்டும். இப்படி படிப்படியாய் மேற் கொள்கிற முயற்சிகள் முன்னேற்றம் நோக்கி நகர்த்திக் கொண்டேயிருக்கும்.
ஒவ்வொரு நாளும், நீங்கள் எடுத்த முயற்சிகள் என்னென்ன, அந்த முயற்சிகளால் மலர்ந்த முன்னேற்றம் எவ்வளவு என்பதை ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொண்டே வாருங்கள்.
கடந்து வந்த தூரத்தையும் சென்று சேர வேண்டிய எல்லையையும் ஒருங்கே பார்ப்பது மாதிரி உற்சாகமான விஷயம் ஒன்றுமே கிடையாது.
மனதில் தொடங்கி செயலில் முடிவதே மிக நல்ல கனவு. பலரும், மனதில் ஒரு கனவு மலர்கிற போதே, அதை எட்டுவது ஏன் முடியாது என்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் முதலில் கண்டு பிடித்துவிட்டார்கள். அதன்பின் எவ்வளவு தான் சூழ்நிலை சாதகமாக இருந்தாலும், நம்மால் முடியாது என்கிற எண்ணம்தான் ஆழமாகி விடுகிறது.
நீங்கள் எட்ட நினைக்கும் இலக்கைத் தொடுவதென்று முடிவு செய்துவிட்டால், உங்கள் முன்னேற்றம் எதற்காகவும் நிற்பதில்லை….. நீங்களாகவே வலிந்து நிறுத்தினாலே தவிர!!
Leave a Reply