– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம்
கம்ப இராமாயணத்தில் ஒரு காட்சி, சீதையைத் தேடிவந்த அனுமன் அசோகவனத்தை அழித்து இராவணனை மிரட்டி, வாலில் வைத்த தீயில் நகரத்தை எரித்து மீண்டபின், அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான் இராவணன்.
கூடியிருக்கும் எல்லோரும், இராவணன் மகிழுமாறு, ‘அனுமன் ஒரு குரங்கு; இராமன் ஒரு அற்ப மனிதன்; அழித்துவிடலாம் அவர்களை’ என்று பொருள்படும்படி பலவாறாகப் பேசுகிறார்கள். வீடணன் மட்டும் மாறுபட்டுப் பேசி வெளியாவதற்கு முன்னர், சற்றே வேறுபட்டு, ஆனால் கடுமையாக பேசினான் கும்பகர்ணன். ‘மானத்தைப் பற்றி பேசுகிறாய். ஆனால் மனம் நிறைய காமத்தை வைத்திருக்கிறாய்’ என்றெல்லாம் பேசியவன், “சரி! இனி பேசிப் பயனில்லை. அவர்கள் இங்கு படையுடன் வரும் முன்பாக நாம் அவர்களைப் பெரும்படை கொண்டு தாக்கி அழிப்போம்,” என்று முடித்தான்.
கும்பகர்ணன் வெறுப்பைக் காட்டித் திட்டிய போதெல்லாம் அமைதியாக இருந்த இராவணன் “உடனே பெரும் படையை திரட்டலாம்” என்று அவன் சொன்னவுடன், “நன்று சொன்னாய் குமர! நான் அது நினைந்தேன்” என்றான்.
“நீ இப்போது சொல்வதை நான் ஏற்கனவே நினைத்தேன்”, என்று சொன்னதன் வாயிலாக, சிறு ஆலோசனை சொன்ன பெருமைகூட கும்பகர்ணனுக்கு கிடைக்காமல் அடித்துவிட்டான் இராவணன்.
நம்மில் பலருக்கு இதே பழக்கமுண்டு. கவனித்திருக்கிறீர்களா? யாராவது ஒரு கருத்தை அல்லது செய்தியைச் சொன்னவுடன், ‘நான் நினைத்தேன்’ என்றோ அல்லது ‘எனக்குத் தெரியும்’, என்றோ அல்லது ‘நான் ஏற்கனவே சொன்னேன்’ என்றோ அல்லது ‘இப்படித்தான் ஆகுமென்று எனக்கு ஏற்கனவே தெரியும்’ என்றோ உடனே சொல்கிறோம்.
இப்படிச் சொல்வதன் பொருள் உண்மையாகவே இருந்தாலும் அடுத்தவர் ஏதேனும் சொன்னவுடன் இப்படி பதில் சொல்வது, சற்றே பண்பு குறைவாகப் படுகிறது அல்லவா? நம்மிடம் பேசுபவரை விட ஏதோ ஒரு விதத்தில் நம்மை உயர்ந்தவராகக் காட்டிக் கொள்ளும் முயற்சிதானே இது! இப்படிச் சொல்லாமல் ஒரு உரையாடலில் ஈடுபடும்போது தான் அது உயர்வாகவும், பெருந்தன்மையுடனும் இருக்கிறது.
நாக்கு வரை இந்தச் சொற்கள் வந்து விட்டாலும், இவற்றை நிறுத்த பழக்கிக்கொள்வது நல்லது. நினைப்பதை எல்லாம் சொல்லிவிடக் கூடாது. நினைப்பதையெல்லாம் சொல்லாமல் பழகிக்கொண்டால் காலப்போக்கில். சொல்லக் கூடியதை மட்டுமே நினைக்கும் பழக்கம் வந்து விடும்!
வெளியில் சொல்லக்கூடியனவற்றை மட்டுமே நாம் நினைக்கிறோம் என்பதே ஓர் உயர்வான நிலை அல்லவா!
“நான் வாழ்வில் உயர்ந்த நிலை அடைய வழி சொல்லுங்கள்” என்று கேட்டு, ஒரு ஞானியிடம் வந்தான் அரசன் ஒருவன். “முதலில் உன் மனம் பக்குவப்பட வேண்டும்,’ என்றார் ஞானி. “மனம் பக்குவப்படுதல் என்றால் என்ன?” என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, வேலையாள் கூட்டிக் கொண்டிருந்த குப்பையும், தூசும் பறந்து அவன் மேல் பட்டுவிட்டன.
“உங்கள் வேலையாளுக்கு அறிவே கிடையாதா?” என்று சீறினான் மன்னன்.
“உன்னிடம் பாம்புகள் நிறைய உள்ளன. முதலில் அவற்றைக் கொன்று விட்டுவா” என்றார் ஞானி. குழம்பிய மன்னன் திரும்பி விட்டான். சில மாதங்கள் கழித்து மீண்டும் ஞானியைத் தேடிவந்து அதே கேள்வியைக் கேட்டான். எதையோ எடுத்துக் கொண்டு போன வேலையாள், அரசன் மேல் எதிர்பாரா விதமாக மோதி, கையில் கொண்டு வந்ததைக் கீழே போட்டுவிட்டான். “உனக்கு எப்போதுமே பொறுமை இல்லை. ஆள் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று கோபமாக அவனிடம் கேட்ட மன்னன், ஞானியை நோக்கித் திரும்பினான். “உன்னிடம் நாய் இருக்கிறது. அதை விரட்டி விட்டு வா” என்றார் ஞானி.
வெறுப்புடன் திரும்பிய மன்னன் மீண்டும் சில மாதங்கள் கழித்து போனான். அதே வேலையாளை அழைத்து மன்னனுக்கு தேநீர் தரச் சொன்னார் ஞானி. ஏற்கனவே மன்னனிடம் திட்டுக்கள் வாங்கிய பதற்றத்தில் தேநீரைக் கைதவற விட்டுவிட்டான் வேலையாள். மன்னன் உடையில் தேநீர் பட்டு விட்டது. புன்னகைத்துக் கொண்டே, “ஏன் இந்தப் பதற்றம் உனக்கு? பரவாயில்லை. வேறு தேநீர் கொண்டு வா” என்றான் அவனிடம் மன்னன்.
“உயர்நிலை அடைவதற்கான வழி உனக்குத் திறந்துவிட்டது. இனி நான் உனக்கு சொல்லித்தர ஒன்றுமில்லை” என்றார் ஞானி. இப்படி ஒரு ஜென் கதை உண்டு.
நல்லதையே நினைப்பது வேறு; நல்லதையே நினைப்பதாக காட்டிக் கொள்வது வேறு. எது நம் இயல்பாக இருக்கிறதோ, அதுதான் எளிமையாக வெளிப்படும்; எல்லா நேரத்திலும் வெளிப்படும்.
குழந்தைப் பருவத்தில் நடை பழகுகிறோம். விழுந்து எழுகிறோம். குழந்தைப் பருவம் கடந்த பின்னர் நடத்தல் என்பது இயல்பாக மாறி விடுகிறது. எப்படி நடக்கிறோம் என்று யோசித்தபடி நடந்தால்தான் கால்கள் தடுமாறுகின்றன.
எந்த நிலையிலும் நினைப்பது உயர்வாகவே இருந்துவிட்டால், நம்முடைய உரையாடல் தொடங்கி செயல்பாடுகள் வரை அனைத்துமே இயல்பானவையாக இருக்கின்றன.
“சொல்வதா, வேண்டாமா” என்ற தயக்கத்திலேயே சொல்ல வேண்டியவையையும் சொல்லாமல் விட்டுவிடுகிறோம். வேறு யாரேனும் அதை நினைவுபடுத்தினாலோ அல்லது அவர்களே சொன்னாலோ, “நான் சொல்லணும்னு நினைச்சேன்” என்று சொல்கிறோம். இந்த நிலையும் தவிர்க்கப்பட வேண்டியதுதான்.
பல நேரங்களில் நன்றி சொல்வதற்குக்கூட கூச்சப்பட்டோ அல்லது பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்றோ விட்டுவிடுகிறோம். ‘நன்றி’ ‘வாழ்த்துக்கள்’, ‘உங்களால்தான் இந்த செயல் நிறைவேறியது’ என்ற சொற்களெல்லாம் உடனே சொல்லிவிட வேண்டியவை. இவைகளைத் தள்ளிப்போடவே கூடாது.
தயக்கமோ அல்லது மறதியோ அல்லது வேலையில் அழுத்தமோ இந்த சொற்களை நாம் சொல்லாமல் நம்மை தடுத்துவிடக்கூடாது. பல நேரங்களில் நம்மீது அடுத்தவர் வருத்தம் கொள்ள இது வழி வகுத்துவிடும்.
செய்துவிட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்பதும், உடனே நிகழ வேண்டும்! நாம் சொன்னது அல்லது செய்தது தவறு என்று உணர்ந்ததும். அடுத்த வாய்ப்புள்ள தருணத்திலேயே மன்னிப்பு கேட்டு விடவேண்டும்.
எந்த காரணத்தைக்கொண்டும் மன்னிப்பு கேட்க வேண்டியதைத் தள்ளிப் போடவே கூடாது. ஏனெனில், அது அடுத்த தவறுக்கு வழி வகுக்கும். அது என்ன தவறு தெரியுமா? “நாம் என்ன பெரிய தவறு செய்துவிட்டோம் அல்லது தவறாக சொல்லி விட்டோம், மன்னிப்பு கேட்பதற்கு?” என்ற தன்முனைப்பு தோன்றிவிடும். இந்த எண்ணம் தோன்றிவிட்டால், மன்னிப்பு கேட்கத் தோன்றாதது மட்டுமல்ல, நாளடைவில் ‘நான் சொல்வதுதான் சரி. செய்வதுதான் சரி’ என்ற எண்ணம் மனதில் குடியேறிவிடும். இதன் அடுத்த வளர்ச்சியாக “போதுமான அளவிற்கு எனக்கு புகழில்லை” என்றும், “என் திறமையை யாரும் மதிப்பதில்லை” என்றும் எண்ணங்கள் தோன்றும்.
உடனடியாக நன்றி சொல்லும் பழக்கம் தற்பெருமை வராமல் தடுக்கிறது. உடனடியாக மன்னிப்பு கேட்காத பழக்கம் “தான்” என்ற அகந்தையை வளர்க்கிறது.
நம்மை நாமே நாளும் உயர்த்திக் கொண்டே போனால்தான் வாழ்வில் மேன்மை நிலையை அடைய முடியும். இது முழுக்க முழுக்க நமது முயற்சிதான். மேன்மை நிலையை நாம் அடைந்துவிட்டால், குறுகிய நினைவில் மனம் ஆட்படுவதில்லை.
எப்போதும் மனத்தில் உயரிய நினைவுகள் இருந்தால், ஏக்கங்களும்,கவலைகளும், நோக்கங்களும் உயர்வானவையாக இருக்கும். குறுகிய மனங்களில்தான், நோக்கங்களும், கவலைகளும், ஏக்கங்களும் குறுகியனவாகத்தான் இருக்கும்.
கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களைப் பாருங்கள். அவர்கள் எப்போதும் பக்கத்தில் இருக்கும் பங்களாக்களில் வசிக்கும் பணக்காரர்களை பார்த்தோ அல்லது காரில் வந்திறங்கும் பெரிய மனிதர்களைப் பார்த்தோ பொறாமைப்படுவதில்லை. தங்களைவிட கொஞ்சம் கூடுதலாக பிச்சை கிடைக்கும் அடுத்த பிச்சைக்காரர்களைப் பார்த்துத்தான் எரிச்சலும் பொறாமையும் படுகிறார்கள்!
நம்முடைய கவலைகளும் ஏக்கங்களுமே நாம் யார் என்பதைக் காட்டிவிடும்!
“மேன்மைத் தொழில் பணியெனையே” என்றான் பாரதி. நினைப்பதும் சொல்வதும் நேர்மையானதாக இருந்தால் மேன்மைப்படுதல் எளிதாகிறது.
Guru
Dear Sir,
“கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களைப் பாருங்கள். அவர்கள் எப்போதும் பக்கத்தில் இருக்கும் பங்களாக்களில் வசிக்கும் பணக்காரர்களை பார்த்தோ அல்லது காரில் வந்திறங்கும் பெரிய மனிதர்களைப் பார்த்தோ பொறாமைப்படுவதில்லை. தங்களைவிட கொஞ்சம் கூடுதலாக பிச்சை கிடைக்கும் அடுத்த பிச்சைக்காரர்களைப் பார்த்துத்தான் எரிச்சலும் பொறாமையும் படுகிறார்கள்!
நம்முடைய கவலைகளும் ஏக்கங்களுமே நாம் யார் என்பதைக் காட்டிவிடும்!”
Its a realy touching word. We should drive with our Dream not with our Fear
Thanks you very much and Keeps up
Regards,
Guru