– பிரதாபன்
ஒரு நாளை திட்டமிடுவது மிகவும் சாதாரண வேலை என்று அதைப் பலரும் செய்வதில்லை. ஆனால், அந்த சாதாரண வேலையை செய்பவர்கள்தான் அசாதாரணமான சாதனைகளை அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறார்கள்.
ஒரு நாளின் முதுகில் எத்தனை சுமைகளை ஏற்றலாம் என்பது முக்கியமான கேள்வி. முன்கூட்டியே திட்டமிடுதல் முன்னேற்றத்திற்கு நிச்சயம் வழிவகுக்கும். ஆனால், அந்த “முன் கூட்டி” சமாச்சாரத்தின் அளவை கூட்டிக் கொண்டே போவதன் மூலம் அந்த அனுபவமும் அவதியாகலாம். வேலையும் அரைகுறையாகலாம்.
குறுகிய காலத்தில் எவ்வளவு வேலைகள் முடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. செய்யும் வேலையின் தரம்தான் முக்கியம். ஒருநாள் முழுமைக்குமான சமையலை காலையிலேயே முடித்துவிட்டால் இரவு வருவதற்குள் உணவு கெட வாய்ப்பிருக்கிறது.
சமையல் மட்டுமல்ல. சம்பவங்களும் அப்படித்தான். ஒரு நாளை அதற்குரிய தீவிரத்துடன் எதிர்கொள்கிற போதுதான் வாழ்க்கையை அதன் அகல நீளங்களுடன் நீங்கள் வாழ்கிறீர்கள்.
அதே நேரம், ஒருநாளின் மணி நேரங்களை நீங்கள் கணக்கிட்டுப் பார்க்கிறபோது சின்ன சின்னதாய் என்னென்னவோ செய்து முடிக்க முடியும். அதுவே படிப்படியான வளர்ச்சிகளைப் பரிசளிக்கும்.
ஒரு நாளை திட்டமிடுவது மிகவும் சாதாரண வேலை என்று அதைப் பலரும் செய்வதில்லை. ஆனால், அந்த சாதாரண வேலையை செய்பவர்கள்தான் அசாதாரணமான சாதனைகளை அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறார்கள். ஏனென்றால், வெற்றி வெறும் அதிர்ஷ்டத்தின் விளைவாக வருவதில்லை. திட்டமிடுவதன் மூலம் வெற்றிக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும். திட்டமிடுவதன் மூலம் எண்ணிய இலக்கை எட்டிப் பிடிக்க முடியும்.
உணவோ தண்ணீரோ மண்ணில் கிடைக்கும் என்றால், வானில் பறக்கிற பறவைகள் அந்த இடத்திற்கு மேலே வட்டமிடும். படிப் படியாக இறங்கி வந்து அந்த இடத்தை எட்டி விடும். அந்த இடத்தை வட்டமிடுகிறபோது, இலக்கைத் தொட பறவை திட்டமிடுகிறது.
சின்னச் சின்ன வேலைகளைக்கூட சீராகச் செய்து முடிக்க முடியாத வகையில் அந்த வேலைகளை விடவும் அளவில் சிறிய ஆனால் வேண்டாத விஷயங்கள் உங்களைத் திசை திருப்பி விட முடியும். என்ன ஆனாலும் அந்த நாளின் முக்கியமான வேலைகளை முடித்தே தீருவது என்பதில் உறுதி காட்டினால் போதும்.
முன்கூட்டியே முடிப்பது என்கிற பெயரில் நாளின் முதுகிலும் உங்கள் மனதிலும் எக்கச் சக்கமான சுமைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள். அதே நேரம், வெகு விரைவாக முடிப்பதாய் நினைத்து வேலையின் தரத்தையும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.
வேலைகளைச் செய்யுங்கள்….. விரைவாகவும்! நிறைவாகவும்!
Leave a Reply