ஆரகிள் நிறுவனர் லேரி எல்லிஸன்

ஆரகிள். உலகின் முன்னணி டேடாபேஸ் நிறுவனம். தகவல் தொடர்பு யுகத்தின் தாய்வீடு என்று ஆரகிள் நிறுவனத்தை அவசியம் சொல்லலாம்.

வித்தியாசமான அணுகுமுறை, வழக்கமான நடைமுறைகளுக்கு எதிரான மனோபாவம், இளமைப் பருவத்தில் மனரீதியான போராட்டம் என்று கலவை வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதரின் உருவாக்கம் தான் ஆரகிள்.தகவல்களைக் கையாள்வதற்குத் தேவையான தொழில் நுட்பம் தருவதில் உலகளாவிய நிலையில் முதலிடம் வகிக்கும் ஆரகிள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைக் கடந்து செல்லும் குறிக்கோளோடு தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.

அதன் நிறுவனர், லேரி எல்லிஸனின் வாழ்க்கை, வித்தியாசமானது, சுவாரசியமானது. கல்லூரி மாணவராக விளங்கிய காலகட்டத்திலேயே கம்ப்யூட்டர் துறையில் கண்பதித்த எல்லிஸன், பகுதி நேரமாக, புரோகிராமிங் எழுதும் பணியை மேற்கொண்டார். பதின்பருவத்தில் இருந்த எல்லிஸனின் பகுதி நேர வருமானம், சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்களின் வருமானத்தை விட அதிகமாக இருந்தது!

அது மட்டுமல்ல! புரோகிராம் எழுதுவது புதிர்களுடன் விளையாடுவது போல் மகிழ்ச்சியாய் இருந்தது எல்லிஸனுக்கு. ஆதாயகரமாய் இருந்ததுடன், படைப்பாக்கத்துக்கு வாய்ப்பாகவும் விளங்கிய அந்தப் பணியை எல்லிஸன் மிக உற்சாகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதன்பிறகு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டே உள்ளூர் தொழிலதிபர் களுக்கு ஆலோசகராகவும் விளங்கினார் அவர்.இப்படி எல்லிஸன் வளர வளர அவருக்குள் இருந்த தொலைநோக்கு விரிந்தது. ஆரகிள் நிறுவனம் பிறந்தது.

லேரி எல்லிஸனின் இளமைப்பருவம் வித்தியாசமானது. அவர் பிறந்தபோது, அவருடைய தாய்க்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. பத்தொன்பதே வயது நிரம்பிய அந்தப் பெண்மணி, தன் மகனை ஒன்பது மாதங்கள் வரைதான் வளர்த்தார். பிறகு, எல்லிஸனை அவரது தாய்மாமன் தத்தெடுத்துக் கொண்டார்.தான் தத்தெடுக்கப்பட்ட விவகாரம், 12 வயது வரை எல்லிஸனுக்குத் தெரியாது. எல்லிஸனின் தந்தை, இரண்டாம் உலகயுத்தத்தின் போது போர் விமானியாக விளங்கியவர். தேசம், நிர்வாகம், அரசாங்கம் போன்றவை என்ன செய்தாலும் எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது என்று திடமாக நம்பியவர் அவர். எனவே, எல்லிஸனின் மனதில் அதற்கு எதிரான சிந்தனைகள் அரும்பியதில் ஆச்சரியமில்லை.

எல்லிஸனுக்குக் கிடைத்த ஆசிரியர்கள் சிலரும், மாணவர்கள் சுயமாக சிந்திக்காமல் படித்ததை மட்டுமே திரும்பச் சொன்னால் போதும் என்று சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்கள். அதுதான் புத்திசாலித்தனம் என்றும் போதித்தார்கள்.இதற்கு முற்றிலும் எதிரான சூழலில், எதையும் எதிர்த்துக் கேள்வி கேட்கிற இயல்போடு எல்லிஸன் வளர்ந்தார்.

சுயமாக சிந்திப்பது, சுயமாக முடிவெடுப்பது என்பதைக் கடந்து வழக்கமான பாணியில் உடை உடுத்துவதைக் கூட எல்லிஸன் மறுதலிக்கும் அளவு அவருக்குள் எதிர்ப்புணர்ச்சி வளர்ந்தது.

இந்த எதிர்ப்புணர்ச்சியே அவரை புதுமைகளைத் தேடும் மனிதராக செதுக்கியது.
ஆரகிள் நிறுவனத்தில் அவரது அணுகுமுறை பெரிதும் விமர்சிக்கப்பட்டபோது எல்லிஸன் சொன்னார்,”சில பதில்களை எதிர்பார்த்தே சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவர்கள் எதிர்பார்ப்பது போல் இல்லாமல், சுயமான பதிலை நாம் தருகிறபோது கேள்வி கேட்பவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம், நாம் கொடுத்த பதில் அல்ல. அவர்கள் எதிர்பார்த்த சராசரி பதில் கிடைக்காததுதான்”.

போட்டியாளர்கள் மீது ஆரகிள் நிறுவனம் கடும் விமர்சனங்களை வைத்தது. “ஏன் இப்படி செய்கிறீர்கள்” என்றபோது எல்லிஸன் சொன்னார், “அமெரிக்கா ஈராக்கை நடத்திய முறையில் உங்களுக்கு எந்த அதிர்ச்சியும் கிடையாதல்லவா. அப்படித்தான் நான் என் போட்டியாளர்களை நடத்துகிறேன். என் தயாரிப்பை, என் போட்டியாளர்களின் தயாரிப்போடு ஒப்பிடுகிறேன். எங்களால் இவையெல்லாம் முடியும் அவர்களால் முடியாது என்று ஆதாரங்களுடன் சொல்கிறேன். பெயர் சொல்லியே சொல்கிறேன். இதை, கடுமையான அணுகுமுறை என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியல்ல! எங்கள் போட்டியாளர்கள் பற்றியும் எங்களைப் பற்றியும் சரியான விவரங்களைச் சொல்லி, அதன் மூலம் வாடிக்கையாளர்கள் சரியான முடிவெடுக்க உதவுகிறேன் என்றார் எல்லிஸன். அமெரிக்காவில் நிலவுகிற ஒரு பொன்மொழி பற்றி எல்லிஸன் வைக்கிற விமர்சனத்தைப் பார்த்தாலே அவரது போர்க்குணம் நமக்குப் புரியும். “ஏன் மலை மேல் ஏறினாய் என்று கேட்டால், மலை இருக்கிறது அதனால் ஏறினேன் என்று பதில் சொல்வதாய் ஒரு பொன்மொழி இந்த நாட்டில் நிலவுகிறது. இது அபத்தமான பதில். மலை இருப்பதால் மலையில் நான் ஏறவில்லை, “நான்” இருப்பதால் மலை மீது ஏறினேன். அது எப்படி இருக்குமென்று தெரிந்துகொள்ள ஏறினேன், என்னுடைய ஆர்வம்தான் என்னை செலுத்தியது. மலை எப்போதும் இருப்பதுதான். மலை மீது நான் ஏற நான்தான் காரணம் மலையல்ல”. சாஃப்ட்வோர் தகவல் தொழில்நுட்பத்தில் முக்கிய இடத்தை ஆரகிள் தொடுவதற்கு இந்த அணுகுமுறை காரணம்.

1990களில், ஆரகிள் நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. 20 ஆண்டுகளில் இல்லாத கடினமான சூழலைக் கடந்து வர நேர்ந்தது. அத்தனை காலமும் தன்னோடு சேர்ந்து ஆரகிள் நிறுவனத்தைக் கட்டமைத்தவர்களில் பலரை வெளியேற்ற வேண்டிய அவசியத்தை எல்லிஸன் உணர்ந்தார். மிகுந்த வருத்தத்துடன் அதனைச் செய்தார்.

எல்லிஸனைப் பொறுத்தவரை, பெரும் சாதனையாளர்களை இயக்குவது, வெற்றி பெறவேண்டும் என்கிற வேகம் அல்ல. தோற்றுவிடுவோமோ என்கிற அச்சம்தான். “தோல்விக்கான அபாயம் நெருங்குவதாகத் தெரிந்தால், அப்போதுதான் நான் கடுமையாக உழைக்கிறேன்” என்று சொல்கிற எல்லிஸன், அச்சம் மிகுந்து காணப்படும் நேரங்களில் எல்லாம் மனதில் ஒரு மெல்லிய பரவசம் படர்கிறது. அந்த அச்சத்தைக் கடந்து வர நேர்கையில் நம்பிக்கை அதிகரிக்கிறது என்கிறார்.

வாழ்வின் சோகங்களையே வாய்ப்பாக்கிக் கொண்டு வெற்றியாளராக மலர்ந்த லேரி எல்லிஸன் ஆரகிள் என்கிற சகாப்தத்தின் அதிசயக் கதாநாயகன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *