ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உருவாக்குவதே இலட்சியம்

– கனகலட்சுமி

பேராசிரியர் கனகராஜ் நேர்காணல்

உங்களுடைய சொந்த ஊர் எது? நீங்கள் எங்கு படித்தீர்கள்?

என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் போவாடிப்பட்டி என்கிற ஊர். பள்ளிப்படிப்பை தஞ்சாவூரிலும், கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும் படித்தேன். M.A., M.Phil., Phd. போன்ற பட்டங்களை டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தேன். நான் 12ஆம் வகுப்பு

பயிலும்போது மருத்துவத் துறையில்தான் என் ஆர்வம் இருந்தது. ஆனால் சில மதிப்பெண் வித்தியாசங்களினால் நான் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை தவற விட்டேன். பின்னர் ஐ.ஏ.எஸ்., படிக்கலாம் என்று முடிவு செய்தேன். பின்னர்தான் சென்னையிலும் டெல்லியிலும் என் கல்லூரிப் படிப்பை தொடர்ந்தேன்.

உங்கள் குடும்ப சூழ்நிலை அப்போது எப்படி இருந்தது?

எனது பெற்றோர்கள் விவசாயம் செய்து வந்தார்கள். என்னுடைய அண்ணன் ஒருவர் இருந்தார். நான் படிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் அண்ணனும் அப்பாவும்தான்.

1990-ல் டெல்லிக்குச் சென்றேன். 1998 வரை டெல்லியில் இருந்தேன். சிவில் சர்வீஸ் (Civil Service) தேர்வு எழுதினேன். இரண்டு முறை நேர்முகத்தேர்வுக்குச் சென்றும் நான் அந்தத் நேர்முகத் தேர்வுகளில் தேர்வாகவில்லை. அதற்குப் பின்தான் 1998-ல் சென்னையில் – அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக எனது பணியைத் துவங்கினேன். ஒரு 4 வருடம் வரை எனது பணி சாதாரணமாக தொடர்ந்து கொண்டிருந்தது. அதற்குபின்தான் நான் டெல்லியில் படித்ததைக் கேள்விப்பட்டு ஒவ்வொரு மாணவராக வந்து என்னிடம் ஐ.ஏ.எஸ்.துறை சம்பந்தமான சந்தேகங்களை கேட்க முற்பட்டார்கள். நானும் ஒரு பொழுதுபோக்கு போல் அவர்களைப் பயிற்றுவிக்க ஆரம்பித்தேன்.

முதன்முதலில் பயனடைந்த மாணவர்கள் பற்றி?

2004ல் என்னுடைய மாணவரும் நெருங்கிய நண்பருமான சதீஸ் பாலா, கோவையைச் சேர்ந்தவர், ஐ.பி.எஸ்-ஆக தேர்வடைந்தார். இப்பொழுது ஹரியானாவில் எஸ்.பி.ஆக உள்ளார். பிரபாகரன் என்ற ஒரு மாணவர் இப்போது ஐ.ஆர்.எஸ்-ல் தேர்வடைந்து டெல்லியில் உள்ளார். 2007-ல் அருண்குமார் என்ற ஒரு மாணவர் ஐ.ஏ.எஸ் தேர்வானார். ஆனால் அவருக்கு ஐ.பி.எஸ். துறையில் ஆர்வமிருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்து இப்பொழுது ஹமாச்சல பிரதேசத்தில் வேலை பார்க்கிறார். இன்னொரு மாணவியும் இருக்கிறார். அவர் பெயர் அஜிதா பேகம். அவர்தான் முதல் முதலில் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்வுபெற்ற தென்னிந்தியாவின் முதல் இஸ்லாமியப் பெண். அவரும் என்னுடைய மாணவிதான். அவருக்கு ஐ.பி.எஸ் கிடைத்தது. இப்போது ஸ்ரீநகரில் வேலை பார்க்கிறார். அவர்களை நிறைய பத்திரிகைகள் பேட்டி கண்டன. அவர்கள், “எங்களை பயிற்றுவித்தவர் கனகராஜ் அவர்கள்தான்” என்று சொல்ல நிறைய மாணவர்களுக்கு என்னைத் தெரியவந்தது. பின் நிறைய மாணவர்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தார்கள். “தி ஹிந்து” பத்திரிகையில் “Personality of the week” என்ற செய்தியைப் பார்த்து 100 மாணவர்களுக்கு மேல் என்னைத் தேடி வந்தார்கள். இனி பொழுதுபோக்காக சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வகுப்புகள் நடத்த முடிவெடுத்தேன்.

தேர்முகத் தேர்வு பயிற்சிகளை எப்படித் தருகிறீர்கள்?

கேள்விகள் எப்படி இருக்கும். அதற்கு பதில் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைப் பற்றிய வகுப்பு மூன்று மணி தொடர்ச்சியாக எடுக்கப்படும். நாங்கள் மாதிரி நேர்முகத் தேர்வு நடத்துவது இந்தியா முழுவதிலும் ஒரு வித்தியாசமான முயற்சியாக அங்கீகரிக்கப்பட்டது. டெல்லியில்கூட இதுபோன்ற பயிற்சிகளை நடத்துகின்றனர். ஆனால் அவர்கள் இந்த மாதிரி நேர்முகத் தேர்வினை ஒரு மாணவருக்கு 20 நிமிடங்கள்தான் நடத்துகின்றார்கள். தேர்வை நடத்துகிறவர்களும் இரண்டிலிருந்து மூன்று பேர்தான் இருப்பார்கள். ஆனால் நாங்கள் இங்கு நகரத்தில் உள்ள அதிகாரிகளை இணைத்து நேர்முகத் தேர்வினை நடத்துகின்றோம். இப்போது நடந்த நேர்முகத் தேர்வில் கிட்டத்தட்ட 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வந்து நடத்திக் கொடுத்தார்கள்.

நாங்கள் செய்த மற்றொரு விஷயம் என்னவென்றால் நாங்கள் தேர்முகத் தேர்வு நடத்துவதை படம் பிடிக்க ஆரம்பித்தோம். ஒரு மாணவர் உள்ளே வருவதில் இருந்து அவர் நேர்முகத் தேர்வு முடித்து வெளியே செல்லும் வரை நடைபெறும் அனைத்தையும் பதிவு செய்தோம். பின்னர் அந்த மாணவரை மீண்டும் அழைத்து அந்த நேர்முகத் தேர்வில் அவர் நடந்து கொண்ட முறைப்படி அவருடைய பலம் பலவீனங்களை அவருக்கு சொல்லித் தருவோம். பின் இரண்டு நாட்கள் கழித்து அந்த ஒளித்தட்டை (CD) அவர்களிடமே தந்துவிடுவோம். இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் காவல்துறைஆணையர் திரு. சைலேந்திர பாபு அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது. எல்லா அதிகாரிகளும் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டனர். இந்த அனுபவம் மாணவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது. ஒரு மாணவர் நேர்முகத்தேர்வு டெல்லியில் முடித்ததும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் சொன்ன வரிகள், “சார், நீங்க செய்த நேர்முகத் தேர்வு போலவே இங்கு எனக்கு நிகழ்ந்தது. நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அப்படியே இங்கு நேர்முகத்தேர்வில் கேட்டார்கள்’ என்று. மற்றொரு மாணவர், “எப்போதும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது ஒரு பயமிருக்கும். ஆனால் இப்போது எனக்கு எந்தப் பயமும் இல்லை” என்று சொன்னார். என்னுடைய மாணவர்கள் எல்லோருமே நேர்முகத் தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்றனர். பொதுவாக 300 மதிப்பெண்களுக்கு 170 அல்லது 160 தருவார்கள். ஆனால், என்னுடைய மாணவர்களுக்கு 180-லிருந்து 200 மதிப்பெண்கள்வரை கிடைத்தது.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இது முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதில் எங்களுடைய நோக்கம் தனிப்பட்ட முறையில் நான் படித்த படிப்பை இந்த சமூகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது. இரண்டாவதாக, எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது நாங்கள் சொல்வது, “இது நாம் நட்புக்காக செய்கிறோம். சமுதாயத்திற்காக செய்கிறோம். இந்த நட்பு இத்துடன் முடியாது என்றும் தொடரவேண்டும்.”

இந்திய ஆட்சிப்பணியில் ஏறபட்டுவரும் மாற்றங்கள் என்ன?

இந்திய ஆட்சியைப் பொறுத்தவரை மூன்று வகையான வரலாற்று கால கட்டங்களைப் பார்க்கலாம். தொடக்கத்தில் இதில் தேர்வு அடைந்தவர்களில் அதிகமான சதவீதத்தைச் சார்ந்தவர்கள் வங்காளத்தைச் சேர்ந்த மாணவர்கள். காரணம் அங்குதான் முதன் முதலாக ஆங்கிலேயர் வந்தனர். அங்குதான் நவீன கல்வியை, வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

அந்தக் காலத்தில் “Collector” என்ற பெயர் எதற்கு வந்ததென்றால், அவர்கள் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வருமானத்தை Collect செய்பவர்கள் என்பதால்தான். வருமானத்தை சேகரிப்பதைவிட அவர்களுடைய முக்கியமான வேலை அரசாங்கத்தை மேம்படுத்துதல். இதை எங்கள் சமூக அறிவியலில் – Welfare Administration என்று சொல்கிறோம். மக்களை முன்னேற்றுவதுதான் இந்த வேலையின் முக்கியமான அம்சம். இரண்டாம் காலகட்டத்தில் தென்னிந்தியாவைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் அதிகமாக தேர்வாகினர். தஞ்சை, திருநெல்வேலி, பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் ‘ஐயர்’ என்ற குலத்தவர் அதிகமாக தேர்வானார்கள். மூன்றாம் கட்டம் 1990-ல் ஆரம்பமானது. ஓர் அறிக்கை விட்டார்கள். இதர பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற் தருவதற்காக, வி.பி.சிங் பிரதமராக இருக்கும்போது மண்டல் கமிஷன் பரிந்துரைகளைக் கொண்டு வந்தார்கள். அந்த அறிக்கை அமலாக்கத்திற்குப் பிறகு, ஆட்சிப் பணித்துறையில் வரக்கூடிய மாணவர்களின் சமூகப்பின்னணி மாற ஆரம்பித்தது. இப்போது, சிறிய நகரங்களில் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் தேர்வாகின்றனர்.

இதில் தமிழகத்தின் பங்களிப்பு எப்படி உள்ளது?

இந்தியாவிலேயே அதிகமான IAS, IPS அதிகாரிகள் வருவது நம் மாநிலத்தில் இருந்து தான். இந்தியாவில் முதன்முதலாக தனிநாடு கோரிக்கை வைத்தவர்கள் தமிழர்கள், திராவிட நாடு என்று. இன்று தமிழ்நாட்டில் பிரிவினை வாதமே இல்லாததற்கு மிக முக்கிய காரணம் இதுதான். இந்தியாவின் ஆணிவேர் ஆட்சிப்பணி. இதில் ஐந்தில் ஒரு பங்கு தமிழகத்திலிருந்து புறப்படுகிறது.

IAS தேர்வுகள் எவ்வாறு இருக்கும்?

மூன்று கட்டமாக தேர்வுகள் நடக்கும். முதல் கட்டம் (Priliminary Tests) “பூர்வாங்கத் தேர்வு”. இந்தத் தேர்வு நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கும். இதற்கு சில தகுதிகள் வேண்டும். 21 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே இந்தத் தேர்வு எழுத முடியும். உச்ச வயது வரம்பு என்று பார்த்தால் பொது வகுப்பைச் சார்ந்தவர்கள் 30 வயது. இதர பிற்படுத்தப் பட்டவர்கள் 33 வயது (BC, MBC), (ST, SC) என சொல்லப்படும் மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் 35 வயது வரை எழுதலாம். மாற்றுத் திறனாளிகளுகென்று இன்னும் வயது வரம்பில் சில சலுகைகள் உண்டு.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்:
பொது வகப்பினர் – 4 முறை
இதர வகுப்னிர் – 4 முறை
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 7 முறை
ST, SC – 14 முறை

கல்வித் தகுதி:

இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வு எழுத அதிக செலவு செய்யவேண்டியதில்லை. ஏனென்றால் நம்நாடு ஒரு ஜனநாயக நாடு. இங்கு அனைத்து வாய்ப்புகளும் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இதை நடத்தக் கூடியவர்கள் “மத்திய அரசாங்க பணியாளர் தேர்வு ஆணையம்” (Union Public Service Commission) முதல் கட்ட தேர்வில் இரண்டு பிரிவுகள் உண்டு. முதல் பிரிவு பொது அறிவு. இரண்டாவது பிரிவு தேர்வுப்பாடம்.. அவங்க குடுக்கக்கூடிய பாடங்களில் இருந்து ஒரு பாடத்தை எடுத்து தேர்வு எழுத வேண்டும். இதில் மொத்தம் 450 மதிப்பெண்கள் அதில் 320 மதிப்பெண் பெற்றால் தேர்ந்துவிடலாம்.

தமிழ்நாட்டில் இந்த முதல் கட்ட தேர்வு சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்வு “முதன்மைத் தேர்வு”. முதன்மைத் தேர்வுக்கு மொத்தம் 9 தாள்கள் இருக்கும். அதன் மொத்த மதிப்பெண் 2600 மதிப்பெண்கள். அதில் முதல் இரண்டு தாள்கள் பொது ஆங்கிலம், பொது இந்திய மொழி என்று இருக்கும். நாம பொதுத் தமிழ் எடுத்துக்கலாம். இந்த இரண்டு தாள்களிலும் தேர்ந்தால் போதும் நிறைய மதிப்பெண் எடுக்கத் தேவையில்லை. மற்ற7 தாள்களிலும் 2000 மதிப்பெண்கள் உள்ளன. இந்த இரண்டாயிரம் மதிப்பெண்கள்தான் மிகவும் முக்கியமானவை.

General Studies – I – 300 மதிப்பெண்கள்
General Studies – II – 300 மதிப்பெண்கள்
Essay – 200 மதிப்பெண்கள்
அதற்குப் பின் 2 பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
முதல் பாடம் தாள் – I – 300 மதிப்பெண்கள்
முதல் பாடம் தாள் – II – 300 மதிப்பெண்கள்
இரண்டாம் பாடம் தாள் – I – 300 மதிப்பெண்கள்
இரண்டாம் பாடம் தாள் – II – 300 மதிப்பெண்கள்
———————–
2000 மதிப்பெண்கள்
———————–
அடுத்தக் கட்ட தேர்வு நேர்முகத்தேர்வு மெடல்லியில்தான் நடைபெறும், நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்கள்.

இறுதிக்கட்டமாக மொத்தம் 2300 மதிப்பெண்களுக்கு 1310 மதிப்பெண்கள் பெற்றால் அதிகாரி ஆகிவிடலாம். ஆனால் அந்த மதிப்பெண் பெறவே மிகுந்த முயற்சிகள் தேவைப்படம்.

இதற்கு தயாரிப்பது எப்படி?

முதல் கட்ட தேர்வுக்கு பல புத்தகங்களை ஒருமுறைபடிக்க வேண்டும். இரண்டாம் கட்ட தேர்வுக்கு ஒரு புத்தகத்தை பலமுறைபடிக்க வேண்டும். இதன் பாடத்திட்டத்திற்கு என்று ஒரு எல்லையே கிடையாது. வானம் கூட எல்லை இல்லை.

“Civil Service preparation is a vast ocean. In this ocean you cannot sail without the aid of Navigation Technoloty” எனவே நல்ல ஆசிரியருடைய வரிகாட்டுதல் தேவை. பொது அறிவு என்பது மிகவும் முக்கியம், பொது அறிவு எல்லா கட்டத்திலும் வரும். மாணவர்கள் முதல் கட்ட தேர்வுககும் இரண்டாம் கட்ட தேர்வுக்கும் பொது அறிவு சம்மந்தப்பட்டதை தனித்தனியே படிக்க வேண்டியதில்லை. சின்ன மீன், இருக்கு பெரிய மீன் இரண்டும் கடலில் உண்டு. ஒரு வலையை விரித்தால் எல்லாமே சிக்கும். சின்ன மீனுக்கு சின்ன வரை பெரிய மீனுக்கு பெரிய வலையை விரிக்கிறது புத்திசாலித்தனமில்லை. அடுத்து நேர்முகத்தேர்வு. அதுதான் மிக முக்கியமான ஒரு கட்டம் “Make or break” போன்றஒரு சூழ்நிலை உருவாகும். இதில் 70 மதிப்பெண் வாங்குபவர்களும் உண்டு. ஆனால் 10 மதிப்பெண் வித்தியாசம் வந்தால் 300 rank வித்தியாசம் வரும். ஒவ்வொரு மதிப்பெண்ணும் ரொம்ப முக்கியம். அதனால் நேர்முகத்தேர்வு தனிச்சிறப்பு மிக்கது. இந்தத் தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி தோற்றவர்ளும் உள்ளனா. சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லி வென்றவர்களும் உள்ளனர். அவர்கள் நம் அறிவாற்றலை பார்க்கவில்லை. நம்முடைய மனநிலை எவ்வாறு இருக்கிறது. நம்முடைய Basic Personality பொது நலத்துடன் இருக்கிறோமா, சுயநலமாக சிந்திக்கிறோமா, ஜாதி மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா ஒரு குழப்பமான சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது என்று பார்க்கிறார்கள்.

உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

எங்களுடைய நோக்கம் குறைந்தது 25 பேரையாவது ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றிபெறவைக்கணும் என்பதுதான்.

எங்களுடைய அடுத்த கட்ட நோக்கம் தேசிய அளவில் நடத்தக்கூடிய Higher Studies examination, CAT (Common Adminssion Test) by IIM (Indian Institute of Management), Joint Engineering Entrance Exam by IIT போன்ற தேர்வுகளில் மாணவர்களை வெற்றி பெற வைப்பது. இதில் எந்த லாப நோக்கும் இல்லாமல் சமூக நோக்குடன் நடத்தவேண்டும் என்பது எங்களுடைய ஆசை. இது இன்னும் 3லிருந்து 4 வருடங்களுக்குள் நிறைவேற்றப்படம். இதுவரை 14 பேவை உருவாக்கியுள்ளோம். இதில் மிகவும் முக்கியமான விஷயம் ஐ.ஏ.எ.ஸ தேர்வை தமிழில் எழுதலாம். ஐ.ஏ.எஸ்., தோவுகளில் தமிழிற்கு மூன்று விதங்களில் முக்கியத்துவம் உள்ளது. ஒன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முதல் தேர்வில் பொதுத் தமிழ் என்ற தேர்வை எழுத வேண்டும். முதன்மைத் தேர்வில் விருப்பப் பாடங்களில் ஒன்றாக தமிழ் இலக்கியத்தை எடுக்கலாம். மூன்றாம் கட்டத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுகள் அனைத்தையுமே தமிழிலேயே எழுதலாம். தமிழில் எழுதும் போது நிறைய புத்தகங்களைப் டித்து தமிழாக்கம் செய்யக்கூடிய திறமை நமக்கு இருக்கவேண்டும். கேள்விகள் ஆங்கிலம் ஹிந்தியில் மட்டுமே இருக்கும் அந்தக் கேள்விகளை புரிந்துகொண்டு பதில் வடிக்கும் திறமை இருக்கவேண்டும்.

தேர்முகத் தேர்வுகூட தமிழில் செய்யலாம். அதற்காக ஒரு மொழிப்பெயர்ப்பாளரை அவர்களே ஏற்பாடு செய்வார்கள்.

எந்தத் துறையில் இருப்பவர்கள் IAS எழுதலாம்?

சமூகப் பாடங்களைப் படிப்பவர்கள், உதாரணத்திற்கு புவியியல், இரசியல் அறிவியல் பொது நிர்வாகவியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, போன்றவற்றை படிப்பவர்கள் இந்தத் தேர்வை மிக சுலபமாக கையாளலாம்.

அறிவியல், பொறியியல் எடுப்பவர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் பொறியில் மாணவர்கள் நிறைய பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த தேர்வு எழுத நாட்டு நடப்புகள் தெளிவாக தொந்துகொள்ள வேண்டும். 60% நாளிதழ் 40% பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம் என்று வேடிக்கையாக சொல்வார்கள். நாம் தினமும் தரமான செய்தித்தாள்கள் வாசிக்க வேண்டும்.

செய்தி சேனல்களில் NDTV 24×7, CNN IBM, NEWS TODAY போன்றவை பார்க்கவேண்டும். அதுல தான் விவாதங்கள் நிறைய நடக்கும். Magazines India Today, Outlook போன்றவற்றையும், CBSE புத்தகங்களையும் படிக்க வேண்டும். பெற்றோர்கள் நண்பர்களுடைய பங்கு ரொம்ப முக்கியம். இந்தத் தேர்வுக்கு கல்லூரி மூன்றாமாண்டிலிருந்து படிக்கலாம். ஆனால் 10ஆம் வகுப்பிலிருந்துகூட ஆரம்பிக்கலாம். பெற்றோர்கள் மாணவர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கக்கூடாது. எது படிக்கவேண்டும் என்பதை உணர்ந்து நிதானமாகப் படிக்க வேண்டும். இந்தத் தேர்வில் தோல்வியடைந்தால் நேரடியாக எந்தப் பயனும் இல்லை. மூன்று கட்டத்திலும் ஜெயிக்க வேண்டும். 90% கிணற்றைத் தாண்டினாலம் பயனில்லை முழுதாகத் தாண்டியே ஆக வேண்டும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் உலக அறிவை வைத்துக்கொண்டு வேறு துறைகளில் நாம் வெற்றிபெறலாம். இந்தத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். வெற்றியை இலக்காக்குங்கள். தோல்விகள் வந்தால் தாங்கிக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *