லிப்ட் தத்துவம்

– கிருஷ்ண வரதராஜன்

உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத எழுத்தாளர் வேலை என்னுடையது என்பதால் பெரும்பாலும் நான் லிப்ட்டை தவிர்த்து படிகளில்தான் மேலேறுவேன்.

எதிர்படும் யாராவது, ”வாங்க சார். லிப்ட்ல போகலாம். சீக்கிரம் மேலே போகலாம்” என்பார்கள். ”நான் சீக்கிரம் மேலே போக விரும்பாததால்தான் படியிலேயே செல்கிறேன்” என்பேன், இரட்டை அர்த்தத்தோடு.

ஒருமுறை நண்பர்களோடு பேசிக்கொண்டே லிப்டில் ஏறிவிட்டேன். சுவாரஸ்யமாக பேசிக் கொண்டே இருக்கிறோம். லிப்ட் நகரவேயில்லை. பிறகுதான் தெரிந்தது. நாங்கள் இன்னும் எந்த பட்டனையும் அழுத்தவில்லை.

நான் சொன்னேன். ”லிப்டில் ஏறி நின்றாலும், பட்டன் அழுத்தினால்தான் மேலே போக முடியும்”.

நண்பர் சொன்னார், ”புதிய தத்துவம் பத்தாயிரத்து பனிரெண்டு”.

இப்படிச்சொன்னதும் எனக்கு மேலும் பல புதிய தத்துவங்கள் தோன்றின. அவற்றை பார்ப்பதற்கு முன்னால், 1012ஆம் தத்துவ விளக்கம் : நீங்கள் சுலபமாக மேலே போகவேண்டும் என்றாலும்கூட, அங்கே உங்களில் சிறு முயற்சியாவது தேவைப்படுகிறது.

எங்கள் வேலைகளை முடித்துவிட்டு கீழே இறங்குவதற்காக மறுபடியும் லிப்டிற்கு வந்தோம். அந்த 8 மாடிக்கட்டிடத்தில் லிப்ட் 1வது மாடியில் நின்று கொண்டிருப்பதை லிப்ட் பட்டனுக்கு மேலே இருந்த எண் காண்பித்தது. இரண்டு பட்டன்கள் இருந்தது. மேல் நோக்கிய அம்புக் குறியுடன் ஒன்று. கீழ் நோக்கிய அம்புக்குறியுடன் ஒன்று.
ஒரு நண்பர் கீழ்நோக்கிய பட்டனை அழுத்தினார். அடுத்தவர் மேல்நோக்கிய அம்புக் குறியை அழுத்தினார். எதை அழுத்துவது? என்பது உடனே விவாதமானது.

ஒருவர் சொன்னார், ”லிப்ட் கீழே இருக்கிறது. அது மேலே வரவேண்டும். எனவே மேல்நோக்கிய அம்புக்குறியைத்தான் அழுத்த வேண்டும்”. அடுத்தவர் சொன்னார், ”லிப்ட் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டியதில்லை. நாம் போக வேண்டிய திசைக்கான பட்டனை அழுத்தினால் போதும்.”

எந்த பட்டனை அழுத்தினாலும் நாம் நிற்கும் தளத்திற்கு லிப்ட் வந்துவிடும் என்பதால் நான் அடுத்த தத்துவத்தை உதிர்த்தேன். (1013)

எப்போதும் உங்கள் விரல்கள் உயரே செல்வதற்கான பட்டனை மட்டுமே அழுத்தட்டும்.
இந்த தத்துவத்திற்கான விளக்கம் இதுதான்: லிப்ட் எங்கே இருக்கிறது என்பதை பொருட் படுத்தாதீர்கள். நீங்கள் எங்கே போக வேண்டுமோ அந்த பட்டனை அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்க்காதீர்கள். வாழ்வில் நீங்கள் எந்த உயரத்திற்கு போகவேண்டுமோ, அதை மட்டும் பாருங்கள். (1014)

எப்போதும் மேலேயும் கீழேயுமாக சென்று கொண்டிருக்கும் லிப்ட் நமக்கு சொல்லித் தரும் முக்கிய தத்துவம் இதுதான்.

வாழ்க்கையில் நீங்கள் மேலே போனாலும் கீழே போனாலும் மற்வர்களுக்கு பயனுள்ள வர்களாக இருங்கள், உதவியாக இருங்கள்.

இப்படி எதிலும் கற்கும் மனநிலை பெற்றால், உடனே உயரலாம். உங்கள் வாழ்வில் உயர்ந்த பின் நீங்களும் எழுதலாம், உற்சாக தத்துவங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *