நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி

சுவாரசியமான கதை வடிவில் ஒரு பாடம்

நீங்கள் பிஸினஸ் வெற்றியை உறுதிப் படுத்தும் கதை வடிவ தொடர்

பணியாளர்களை கையாள்வது தொடர்பாக படிக்க வேண்டிய எம்.பி.ஏ பாடங்கள்.

சதாசிவம் மொட்டை மாடியில் ஊஞ்சலில் ஆடியபடி நிலவை ரசித்துக்கொண்டிருந்தார். பலவருடம் ஆகிவிட்டது இப்படி ஒய்வாக உட்கார்ந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.

பேராசிரியரின் சந்திப்பிற்குப்பின் தான் புது சதாசிவமாக மாறிவிட்டதாக தோன்றியது. வாழ்க்கையும் தன் வணிகமும்கூட சதுரங்க ஆட்டம்தான். ராஜா ராணி மந்திரி குதிரை எல்லாம் ரெடி. சிப்பாய்களைத்தான் இன்னும் சிறப்பாக மாற்றவேண்டும்.

அவருடைய பிரட் பேக்டரியில் 60 சிப்பாய்கள். அதில் உள்ள ஒவ்வொரு சிப்பாயும் வேலைக்கு வந்தால்தான் அவன் வேலையில் இருக்கிறான் என்பதே நிச்சயம்.

கூரை மேல சோத்த வைச்சா ஆயிரம் காக்கா என்பதெல்லாம் பழைய நிலை. இன்று சோறு என்ன விருந்தே கொடுக்கிறேன் என்றால்கூட எட்டிப்பார்க்க ஆள் இல்லை.

ஆட்கள் பற்றாக்குறை என்பதை விட திறமையான ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்லலாம். ஒன்றும் தெரியாமல் வேலைக்கு வருகிறார்கள். தொழிலை கற்றுக்கொண்டு உடனே இடம் மாறிவிடுகிறார்கள். நூறு ரூபாய்கூட கிடைக்கிறதென்றால் கடவுளை மாற்றிக்கொள்கிற காலத்தில் கம்பெனியை மாற்றிக்கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது.

எவ்வளவுதான் ஆட்கள் பற்றாக்குறை இருந்தாலும் சதாசிவம் தயாரிப்பு நிற்காமல் பார்த்துக்கொள்வார். தேவைப்பட்டால் ஓவர் டைம் கொடுத்து பெரும்பாலும் அன்றைய ஆர்டர்களை அன்றே முடித்து விடுவார். என்றாலும் தினமும் அரக்கப் பரக்க வேலை செய்து வாழ்க்கை டென்ஷனிலேயே கழிவதாக தோன்றியது சதாசிவத்திற்கு.

அங்கே இங்கே அலைந்து நாலைந்து வேலை பார்த்து ஒன்றிலும் நிலையாய் இல்லாமல் கடைசியில் யாராவது ஒரு உறவினர் சிபாரிசோடு சதாசிவத்திடம் வந்து வேலைக்கு சேர்வார்கள். நான்கு நாட்கள் ஒழுங்காக இருப்பார்கள். பிறகு வேலைக்கு வருவதில் காலதாமதம் அதிகமாகும். லீவு அதிகமாகும். வேலைக்கு சேர்ந்தவுடன் வேலையை கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ வேலையில் இருந்து டிமிக்கியடிக்க கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் கூட சில நேரங்களில் இப்படி நடந்து கொள்வது தான் சதாசிவத்திற்கு நீங்காத வருத்தம். எவ்வளவு தான் பொறுத்துப்போனாலும் என்றாவது ஒருநாள் எல்லை மீறி கத்தும்படியாக ஆகி விடுகிறது. அவ்வளவுதான். இதையே சாக்காக வைத்துக் கொண்டு மேலும் இரண்டு நாள் லீவு போட்டு விடுகிறார்கள்.

ஒரு நிறுவனம் எந்த ஒரு பணியாளரையும் நம்பி இயங்கக்கூடாது. ஏன் நிர்வாகியை கூட நிறுவனம் சார்ந்து இருக்கக்கூடாது. யார் இல்லை யென்றாலும் நிறுவனம் நடக்க வேண்டும். செஸ் விளையாடிவிட்டு கிளம்பும்போது பேராசிரியர் சொன்ன வார்த்தைகள் சதாசிவத்தின் காதுக்குள் ரீங்காரித்துகொண்டிருந்தது.

படித்தவர்களை வேலைக்கு வைத்தால் அவர்களை வேலை வாங்க முடியுமா? சொல்வதை கேட்டு சுறுசுறுப்பாக நடப்பார்களா? இறங்கி வேலை செய்வார்களா? என்றார் சதாசிவம் பேராசிரியரை நோக்கி.

குதிரையை பூட்டினால் கையாள்வது சற்று கடினம்தான். ஆனால் அந்த வித்தையை பழகி விட்டால் போக வேண்டிய இடத்தை பற்றி மட்டும் யோசித்தால் போதும். கையாள சுலபம் என கழுதையை வண்டியில் பூட்டினால் கழுதையை நகர வைக்கவே நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். என்ன நான் சொல்வது புரிகிறதா ?

சதாசிவம் இதுநாள் வரை விசுவாசத்தை அடிப்படையாக கொண்டே ஆட்களை தேர்வு செய்வார். ஆனால் பேராசிரியரோ விசுவாசத்தை விடவும் திறமையே முக்கியம் என்றார்.

பிஸினஸ் இஸ் பீப்பிள். மக்களை கையாளத் தெரிந்தால் நீங்கள் வியாபாரத்தை கையாளத் தெரிந்தவர்கள் ஆகிறீர்கள். நிறுவன நிர்வாகம் என்பது மனிதர்களை நிர்வாகம் செய்வதுதான்.

உலகத்தின் 3 வது பணக்காரர் நம்ம நாட்டு முகேஷ் அம்பானி. அவர் ஒரு ஹிந்தி படத்தைக் கூட விட்டு வைக்காமல் பார்க்கிறார். தான் விலைக்கு வாங்கிய கிரிக்கெட் அணி விளையாடும் போது நேரில் பார்த்து ரசிக்கிறார்.

காரணம் என்ன? திறமையான ஆட்களை தன் கம்பெனியில் வைத்திருப்பதால்தான் அவரால் ஓய்வாக இயங்க முடிகிறது.

நம் நிறுவனத்திலும் திறமையான பணியாளர்கள் வேண்டுமென்றால், திறமை யானவர்களை தேர்ந்தெடுத்து வேலை வழங்குவது ஒரு வகை. வேலை செய்து கொண்டிருப்பவர் களுக்கு பயிற்சி கொடுத்து திறமையானவர்களாக மாற்றுவது மற்றொரு வகை. நாம் இரண்டையும் செய்வோம் என்றார் பேராசிரியர்.

பணியாளர்களை அவர்களின் செயல் பாடுகளை வைத்து நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

திறமை உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்கள்

திறமை உள்ளவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள்

திறமை இல்லாதவர்கள் ஆர்வம் உள்ளவர்கள்

திறமை இல்லாதவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள்.

திறமையும் இருந்து ஆர்வமும் இருந்தால் அவர்களுக்கு பதவி உயர்வோ சம்பள உயர்வோ கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

திறமை இருந்து ஆர்வமின்றி இருந்தால், அவர் ஆதங்கத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். அவர் ஆதங்கத்தை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். ஆர்வம் இருக்கிறது, திறமை இல்லை என்றால் அவருக்கு தொழில் பற்றிய பயிற்சி அளிக்க வேண்டும். ஆர்வமும் இல்லை திறமையும் இல்லை என்றால் அவரை உடனடியாக வேலையிருந்து நீக்க வேண்டும்.

இதில் முதல் மூன்று நிலைகளிலும் உள்ளவர்களுக்கு மனித வள மேம்பாட்டு பயிற்சிகள் அளித்து மேலும் சிறந்தவர்களாக மாற்ற முடியும்.

பணியாளர்களை கையாளும் விதத்திலும் அவர்களை சிறப்பாக செயல்பட வைக்க முடியும்.

உதாரணத்திற்கு ஒரு பேக்டரியின் திறப்பு விழாவை முன்னிட்டு கட்டுமான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்குள் முடித்தாக வேண்டும். உணவு இடைவேளை கிடையாது. எல்லோரும் டீ வடையை சாப்பிட்டு வேலையை பாருங்கள் என்றால் இது டாஸ்க் ஒரியன்டடு. அதாவது வேலைதான் முக்கியம் என்ற மனோபாவம்.

சாப்பாட்டுக்குத்தானே இவ்வளவு கஷ்டப் படறோம். போய் முதல்ல சாப்பிட்டு வாங்கப்பா என்றால் பீப்பிள் ஒரியன்டடு. அதாவது மனிதர்கள்தான் முக்கியம் என்ற மனோபாவம்.

வேலையும் நிற்கக்கூடாது. யாரும் சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. அதுனால ஒவ்வொருத்தர போய் சாப்பிட்டு வாங்க என்று சொன்னால் டாஸ்க் & பீப்பிள் ஒரியன்டடு. இதுதான் சரி. அதாவது வேலை, மனிதர்கள் இரண்டுமே முக்கியம் என்ற மனோபாவம்.

பேராசிரியர் பேசப்பேச சதாசிவம் தன் பணியாளர்களை எப்படி நடத்தினோம் என்று யோசிக்க ஆரம்பித்தார். பல நேரங்களில் வேலைதான் முக்கியம் என்ற மனோபாவத்தில் தான் நடத்தியிருக்கிறோம் என்பது அவருக்கு இப்போது வேதனை அளித்தது.

பிஸினஸ் டென்ஷனோடு நம்மாள் பணியாளர்களை சிறப்பாக கையாள முடியாது. இதற்கென்று தனியாக யாராவது வேலையில் வைத்தால்தான் இனி நிறுவனத்தை சிறப்பாக நடத்த முடியும் என்று சதாசிவத்திற்கு உறுதியாக தோன்றியது.

பணியாளர்களை கையாளும் பணிக்கு சிறப்பான ஆட்கள் தேவை. ஏன் எல்லா வேலைக்குமே புதிய சிந்தனை கொண்ட புதிய நபர்களை போடக்கூடாது.

தன் பக்கத்தில் இருந்த டைரியை எடுத்து விறுவிறுவென்று வித்தியாசமான வார்த்தைகளை கோர்த்து விளம்பர வாசகங்களை எழுத ஆரம்பித்தார் சதாசிவம்

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

தமிழகத்தின் முன்னணி பிரட் தயாரிப்பு நிறுவனத்திற்கு நிறுவனத்துடன் இணைந்து முன்னேறக் கூடியவர்கள் தேவை.
தொழில் அனுபவத்துடன் உற்சாகமும் வாழ்வில் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் தேவை.

பணியிடங்கள்
மேலாளர்
பேக்கரி மாஸ்டர்
புரடக்ஷன் ஹெல்பர்
சிறப்பம்சங்கள்

ஆண்கள் பெண்கள் தனித்தனி ஹாஸ்டல் வசதி

வாழ்வில் முன்னேற வழிகாட்டும் சுயமுன்னேற்ற பயிற்சி வகுப்புகள்

வாடிக்கையாளர்களை போல பணியாளர்களை மதிக்கும் நிறுவனம்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

பிரிட்டிஷ் பேக்கரி புராடக்ட்ஸ்
மேட்டுப்பாளையம் ரோடு,
கோயமுத்தூர் 20
தொலைபேசி : 94875 32893.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *