நமது பார்வை

தமிழில் பொறியியல் கல்வி

தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிலும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மொழி வளர்ச்சிக்கு மட்டுமின்றி மாணவ மாணவியரின் சுயம் வளரவும் பெரிதும் துணை நிற்கும்.

மொழி அந்நியப்படும்போது எளிய சூழலில் இருந்துவரும் மாணவ மாணவியருக்கு மனத்தடை ஏற்படக்கூடும். அந்தத் தடைகள் உடைபட தாய்மொழியில் உயர்கல்வி என்பது மிகவும் அவசியம்.

பல்லாண்டுகளுக்கு முன், தமிழில் பாடத் திட்டங்களை உருவாக்கும் குழு அமைக்கப் பட்ட போது ரசிகமணி டி.கே.சி அவர்களிடம் தமிழில் பாட்டனி உண்டா, ஜுவாலஜி உண்டா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு டி.கே.சி., பாட்டனி தாவரங்களில் இருக்கிறது. ஜுவாலஜி விலங்குகளில் இருக்கிறது. இவை தமிழிலோ, ஆங்கிலத்திலோ இல்லையென்று பதிலளித்தார்.

மொழியை உயிரென்று மதித்தாலும் சரி, அல்லது வெறும் ஊடகம்தான் என்று நினைத்தாலும் சரி. அது வளர்ச்சிக்கு வாய்ப்பாய் வசப்பட்டிருக்க வேண்டும்.

மருத்துவமும் தமிழில் போதிக்கப்படும் போது இன்னும் சிறந்த மருத்துவர்களையும் பொறியாளர்களையும் நாடு சந்திக்கும் என்பதே நமது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *