அறிய வேண்டிய ஆளுமைகள்

– டேவிட் ஒகில்வி

தவறு செய்ய பயப்பட்டு, எதையும் புதிதாக முயலாதவர்கள் தன்
நிறுவனத்தில் நீடிக்க லாயக்கில்லாதவர்கள் என்பதில் உறுதியாக
இருந்தார் ஒகில்வி.

அவர் பெயர் டேவிட் ஒகில்வி. கல்லூரிப் படிப்பை முடிக்காத அந்த இளைஞர், இங்கிலாந்திலிருந்து பாரீசில் கால் வைத்து, ஹோட்டல் மெஜஸ்டிக் என்ற உணவகத்தில் சமையலறை உதவியாளராக சேர்ந்தார்.

இதில் அதிகம் தாக்குப்பிடிக்காமல் இங்கிலாந்து திரும்பியவர், சமையல் ஸ்டவ் விற்பனையாளரானார். வீடு வீடாய் ஏறி இறங்கி ஸ்டவ் விற்பனை செய்த ஒகில்வி, தான் வேலை செய்த நிறுவனமாகிய அகாகுக்கர்ஸ் விற்பனையார்களுக்கான வழிகாட்டும் கையேடு ஒன்றினை 1935ல் எழுதினார்.

1938ல் அமெரிக்கா சென்ற ஒகில்வி, வெவ்வேறு வேலைகளில் இருந்துவிட்டு 1948ல் ஒகில்வி, பென்ஸன் & மேத்தர் என்னும் விளம்பர நிறுவனத்தைத் தொடங்கினார். தானே எழுதிய விளம்பரங்கள் வாயிலாக பெரிய பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களை அவர் பெற்றார்.

விளம்பர உலகின் சில அடிப்படைகளை அனாயசமாக மாற்றிப் போட்டதன் மூலமாகவே சர்வதேச விளம்பர உலகில் ஒரு முத்திரை மனிதராக வியப்புடன் பார்க்கப்பட்டார் டேவிட் ஒகில்வி. இன்றளவும் விளம்பரங்கள் படைப்புத் திறன் மிக்கவையாகவும் கலைநயத்தோடும் வருகின்றன. அவை விளம்பரங்களின் மைய நோக்கம் அல்ல என்றார் ஒகில்வி.

“எந்தத் தயாரிப்பு விளம்பரப்படுத்தப் படுகிறதோ அதை வாங்குகிற உணர்வைத் தூண்டுகிற விதமாக விளம்பரங்கள் இருக்க வேண்டும். அவையே வெற்றிகரமான விளம்பரங்கள்” என்றார் ஒகில்வி.

விளம்பரங்கள் மட்டுமல்ல. வேலை கேட்டு விண்ணப்பித்தாலும்கூட அந்த விண்ணப்பம் ஈர்ப்புத்தன்மையுடன் இருக்கிறதா என்பதே முக்கியம் என்கிறார் ஒகில்வி. சிலர் மிகவும் வித்தியாசமாக விண்ணப்பம் எழுதுவதாய் நினைத்துக் கொண்டு விசித்திரமாய் எழுதுவார்கள். வேலை தரப் போகிறவருக்கு, அதை நிதானமாகப் படித்து நயம் பாராட்ட நேரம் இருக்குமா என்று கேட்கிறார் ஒகில்வி.

வேலைக்கு ஆளெடுத்ததும், ரஷ்ய பொம்மைகள் அவருக்கு அனுப்புவார் ஒகில்வி. பார்த்தால் ஒரே பொம்மை போலிருக்கும். ஆனால் அதைத் திறந்தால் உள்ளே சிறிது சிறிதாய் அதே உருவத்தில் பொம்மைகள் ஒன்றுக்குள், ஒன்றாக இருக்கும். ஆறு பொம்மைகளை ஒன்றிலிருந்து ஒன்றாக எடுத்தால், கடைசி பொம்மைக்குள் ஒரு துண்டுச் சீட்டு இருக்கும்.

“ஒவ்வொருவரும் நம்மைவிட சிறியவர்களை வேலைக்கு எடுத்தால், நம் நிறுவனம் சிறியவர்களின் அலுவலகம் ஆகும். நம்மை விட பெரியவர்களை சேர்த்துக் கொண்டால் உலகளாவிய நிறுவனமாக வளரும்” என்று அந்தச் சீட்டில் எழுதியிருக்கும்.

பெரிய திறமைகளை உள்வாங்கும் நிறுவனமே பெரிதாக வளரக்கூடிய நிறுவனம் என்பதில் உறுதியான நம்பிக்கை ஒகில்விக்கு இருந்தது.

ஒரு நிறுவனத்தில் யாரையெல்லாம் வேலைக்குச் சேர்க்கலாம் என்று ஒகில்வியிடம் கேட்டபோது, நான்கு குணாதிசயங்கள் கொண்டவர்களை சேர்க்கலாம் என்றார். ஆராய்ந்தறியும் மனப்பான்மை கொண்டவர்கள், கற்பனைத்திறன் மிகுந்தவர்கள், யதார்த்தத்தை உணர்ந்தவர்கள், எல்லாவற்றையும் வேறொரு கோணத்தில் பார்க்கக் கூடியவர்கள். அதே போல, யாரையெல்லாம் சேர்க்கக்கூடாது என்பதும் அவருடைய பார்வையில் ஒரு பட்டியலாக வெளியிடப்பட்டது.

“உங்கள் நண்பர்களை வேலைக்குச் சேர்க்காதீர்கள். அவர்கள் அலுவலகத்திலிருந்தும் உங்கள் நட்பு வட்டத்திலிருந்தும் விலகிச் செல்ல நேரும்.

உங்கள் வாடிக்கையாளரின் பிள்ளைகளை சேர்க்காதீர்கள்! அவர்களை விலக்க நேரும்போது வாடிக்கையாளரையும் இழக்க நேரும்.

பங்குதாரர் நிறுவனமாக இருந்தால், உங்கள் பிள்ளைகளையோ உங்கள் பங்குதாரரின் பிள்ளைகளையோ சேர்க்காதீர்கள்” என்றார் டேவிட் ஒகில்வி.

அதேபோல அலுவலகம் நடக்கும்போது, உள்ளே குழு அரசியல் வருவதை – வளர்வதை அனுமதிக்கவே கூடாது என்பார் ஒகில்வி. கருத்து வேறுபாடுகளை எழுத்துப்பூர்வமாய் பதிவு செய்வதையும் அவர் விரும்பியதில்லை.

ஒருவராக செய்ய வேண்டிய வேலையை இருவர் செய்ய அனுமதிக்காதீர்கள் என்பார் அவர். தரமான மனிதர்களுடன் தரமான வணிகம் மேற் கொள்வதே தன் குறிக்கோள் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

சர்வே எனப்படும் கள ஆய்வில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒகில்வி. ஒரு தயாரிப்பின் தரத்தை மேம்படுத்தவும், விளம்பரங்களை சுவாரசியம் மிக்கதாய் ஆக்கவும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது அவசியம் என்பார் அவர்.

வளர்ச்சிக்கு எவையெல்லாம் தடை என்று ஓர் அலுவலர் கேட்டதற்கு ஒகில்வி அனுப்பிய பதில் கடிதம் மிக முக்கியமானது.

1. செயல்திறன் குறைவு – சோம்பல் இரண்டும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

2. முக்கியமில்லாத வேலைக்கு அதிக நேரம் செலவழிப்பதும் அனாவசியம்.

3. பழைய விஷயங்களையே பேசுவதும் நேர விரயம்.

என்பவை அவர் குறிப்பிட்ட முக்கிய விஷயங்கள்.

தவறு செய்ய பயப்பட்டு, எதையும் புதிதாக முயலாதவர்கள் தன் நிறுவனத்தில் நீடிக்க லாயக்கில்லாதவர்கள் என்பதில் உறுதியாக இருந்தார் ஒகில்வி.

மற்றவர்கள் செய்வதையே பார்த்து தானும் செய்பவர்கள் பற்றி ஒகில்வி சொல்லும் சுவாரசியமாக சம்பவம் ஒன்றுண்டு. சர் ஆண்டனி களோஸ்டர் என்ற வணிகர், தன் போட்டியாளர் களைப் பற்றி, தன் மரணப்படுக்கையில் மகன்களிடம் சொன்னாராம். “நான் செய்வதை யெல்லாம் அவர்கள் காப்பியடித்தார்கள். என் மூளையை காப்பியடிக்க அவர்களால் முடியவில்லை. எனவே, வளர்ச்சியிலும் என்னை காப்பி அடிப்பதிலும் ஒன்றரை ஆண்டுகள் பின் தங்கியே இருந்தார்கள்” என்று.

1911ல் பிறந்த ஒகில்வி, 1973ல் ஓய்வு பெற்றார். ஆனாலும், தன் நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தார். ஞ&ங என்பது விளம்பர உலகில் ஒரு சர்வதேச சாம்ராஜ்யமாகவே வளர்ந்தது. பிரான்சில் இருந்து கடிதங்களாக அவர் எழுதித் தள்ளியதில் அந்தத் தபால் நிலையம், தர உயர்வு பெற்றது என்றால், எவ்வளவு கடிதங்களை தினமும் எழுதியிருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.

1980ல், ஒகில்வி இந்தியாவின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றார். 1999 ஜுலை 21ல் மறைந்தார் டேவிட் ஒகில்வி.

விளம்பரம் – விற்பனை – நிர்வாகம் – பணிகளைப் பிரித்தளித்தல் என்று பற்பல துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிய ஒகில்வி, அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர்.

(அறிமுகங்கள் தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *