உங்களிடம் நம்பிக்கை நம்பிக்கையாய் இருக்கிறதா?

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும்

உங்களிடம் நம்பிக்கை நம்பிக்கையாய் இருக்கிறதா?

முடியும் என்பதே முதல் வெற்றி என்பதுதான் நான் ஆட்டோகிராஃப் போடும்போது எப்போதும் எழுதுகிற வாசகம்.

சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவன் கேட்டான், “எல்லோரும் முடியும் என்று நினைத்துதானே முயற்சியை துவங்குகிறார்கள். ஒருவர் தொழில் தொடங்குகிறார் என்றால் என்னால் முடியும் என்ற எண்ணத்தோடுதானே தொடங்குகிறார். ஆனால் முடியும் என்று நினைத்து தொடங்கிய பல பேர் ஒரு கட்டத்தில் இனிமேல் முடியாது என்று மூடிவிட்டு போய்விடுகிறார்களே ஏன்? அப்படியிருக்க நீங்கள் முடியும் என்பதே முதல் வெற்றி என்று எழுதுவது சரியா?” என்றான்.

அவனுக்கு நான் ஒரு கதை சொன்னேன்.

“நீங்கள் செய்த அறிவிப்பால் பாவம் பெருகப்போகிறது. ஏன் இப்படி ஓர் அறிவிப்பை செய்தீர்கள்” என்று பரமசிவனிடம் பார்வதி கோபித்துக்கொண்டார்.

சிவனே என்றிருந்த சிவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று அறிவித்து விட்டீர்கள். இதனால் நாட்டில் பாவம் பெருகிவிடாதா? ” என்றார்.

நியாயம்தானே. கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்ற தைரியத்தில் இனி பயமே இல்லாமல் பாவம் செய்வார்களே..

பரமசிவன் சிரித்துக்கொண்டே, “உன் கேள்விக்கு பதிலை கங்கைக்கரையில் சொல்கிறேன்” என்று பார்வதியை அழைத்துக்கொண்டு கங்கைக்கரைக்கு வந்தார்.

இருவரும் மாறுவேடத்தில் இருந்தார்கள். இருவரும் பேசி வைத்தபடி சிவன் மயக்கம் வந்தவர் மாதிரி நடித்து மயங்கி விழுந்தார்.

பார்வதி உதவி கேட்டு கூச்சலிட்டார். எல்லோரும் கூடிவிட்டனர். யாராவது ஒருவர் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தெளித்தால் மயக்கம் தெளியும். உதவி செய்யுங்கள் என்றார் பார்வதி. எல்லோரும் ஓடினர்.

“ஒரு நிமிஷம். உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தெளித்தால்தான் மயக்கம் தெளியும்” என்றார் பார்வதி

எல்லோரும் சட்டென்று பிரேக் போட்டது போல நின்று விட்டார்கள். காரணம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறார்கள். பத்து நிமிடம் ஆயிற்று. இருபது நிமிடம் ஆயிற்று. ஒருவர் கூட அசையவில்லை.

திடீரென்று கூட்டத்திலிருந்த ஒருவன் ஓடிப்போய் கங்கையில் குதித்தான். முங்கிக் குளித்தான். தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்து சிவன் முகத்தில் தெளித்தான்.

சிவன் மயக்கம் தெளிந்ததுபோல எழுந்திருக்க, கூட்டம் கலைந்தது. சிவன் சொன்னார், “கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒருவன் மட்டுமே நம்பினான். கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று தெரிந்தவனுக்கு எல்லாம் பாவம் போகாது. கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று நம்பியவனுக்கு மட்டும்தான் போகும்” என்றார்.

கதையைச் சொல்லி முடித்தவுடனேயே கேள்வி கேட்ட பையனுக்கு பதில் புரிந்துவிட்டது. எங்களைப் போன்றவர்களின் பேச்சை கேட்டுவிட்டோ, புத்தகத்தையோ படித்து விட்டோ என்னால் முடியும் என்று தெரிந்து வைத்திருப்பவனால் ஒன்றும் முடியாது. என்னால் முடியும் என்று நம்புகிறவனால் மட்டுமே எல்லாம் முடியும்.

அதனால்தான் கேட்கிறேன். உங்களிடம் முடியும் என்ற நம்பிக்கை தகவலாய் இருக்கிறதா? இல்லை. நம்பிக்கையாய் இருக்கிறதா ?

நம்பிக்கையாய் இருந்தால் முடியும் என்பதே முதல் வெற்றி.

என்றும் நம்பிக்கையுடன்..

கிருஷ்ண.வரதராஜன்
சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *