ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

நான் யார்?

ஹலோ ப்ரெண்ட்ஸ்,

நான் யார்? என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டவர்கள் எல்லாம் வாழ்க்கையின் உன்னதங்களை அடைந்திருக்கிறார்கள். கல்வியில் உன்னதம் தொடவும் இந்தக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.

இதற்கு அர்த்தம், நாயகன் கமலிடம் கேட்கப்பட்டது போல நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. இந்தக் கேள்விக்கான அர்த்தம் நான் வாழ்க்கையில் என்னவாகப் போகிறேன் என்பதே.

நீங்கள் டாக்டராக விரும்புகிறீர்கள் என்றால் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? டாக்டரானவுடன் எந்தப் பகுதியில் பயிற்சி செய்யப்போகிறீர்கள்? யாரிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? எதற்காக டாக்டராக விரும்புகிறீர்கள்? டாக்டரானபின் நீங்கள் அடைய விரும்பும் வெற்றிகள் என எல்லாவற்றையும் யோசித்து தெளிவாக நோட்டில் எழுதிவையுங்கள்.

உங்களுக்கு உற்சாகம் தேவைப்படும் பொழுதெல்லாம் எடுத்துப் படியுங்கள். உங்கள் கவனம் சிதறி உங்கள் குறிக்கோளையே மறந்து விட்ட தருணங்களில் இந்த நோட்டு உங்களுக்கு கடிவாளம் அமைத்து சரியான திசைக்கு அழைத்து வந்துவிடும்.

நீங்கள் யாராக வர வேண்டும் என்பதை பெற்றோரில் தொடங்கி எல்லோரும் தங்கள் எதிர்பார்ப்பை உங்களிடம் சொல்வார்கள். அதில் எதை நினைக்கும் போது உங்களுக்கு எழுச்சி வருகிறதோ. அதுதான் நீங்கள்.

நீங்கள் யார் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அல்ல. எனவே நீங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை எல்லோரிடமும் ஆலோசனையாக கேட்டுப் பெறுங்கள். ஆனால் முடிவை நீங்கள் எடுங்கள்.

நான் யார் என்று முடிவெடுப்பதும் அதை அடைந்துகாட்டுவதும் நம் முயற்சியின் தீவிரத்தில் தான் இருக்கிறது.

இந்த மாதம் உங்கள் முயற்சியை தீவிரப் படுத்த பத்து டிப்ஸ் வழக்கம்போல கொடுக்கப் பட்டிருக்கிறது. இதை அப்படியே கடைப் பிடித்தால் நிச்சயம் நீங்கள் வாங்கலாம் நூற்றுக்கு நூறு.

நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்

டாக்டர் ரமேஷ்

நீங்கள் மருத்துவம்தான் உங்கள் துறை என்று முடிவு செய்துவிட்டால் இன்று முதல் உங்கள் நோட்புக் மற்றும் புத்தகங்களில் உங்கள் பெயரை டாக்டர் ரமேஷ் என்றே போடுங்கள். (ரமேஷ் என்பது உதாரணம்தான். நீங்கள் நோட்டில் உங்கள் பெயரை போட்டுக் கொள்ளுங்கள் )

கல்லூரிக்கு செல்லுங்கள்

நாளை நீங்கள் எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறீர்களோ அந்தக் கல்லூரிக்கு வார விடுமுறை நாட்களில் சென்று வாருங்கள். நீங்கள் படிக்கப்போகும் துறையின் வகுப்பறையை விசாரித்து அங்கே சென்று பத்துநிமிடம் அமர்ந்துவிட்டு வாருங்கள். பிறகு படிப்பைத் தவிர வேறு நினைப்பே இருக்காது உங்களுக்கு.

நாளைக்கு அல்ல. இன்றே செல்லுங்கள்.

நீங்கள் மருத்துவர் என்று முடிவாகிவிட்ட பின் ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு சென்று அங்கே உள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்து உங்கள் ஹாஸ்பிடல் எப்படி இருக்க வேண்டும் என்று இப்போதே கட்டத் துவங்குங்கள் மனதில். (அட்வகேட் என்றால் கோர்ட்டுக்கு சென்று விசாரணையை பார்க்க வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமா?)

எதற்காக டாக்டராக வேண்டும் ?

மருத்துவமனைகளில் வலியோடும் வேதனையோடும் காத்திருப்பவர்களை பாருங்கள். எவ்வளவு நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டு மென்றால் இந்தத்துறையில் நான் எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டும் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் இலக்கு உணர்வுப் பூர்வமாகட்டும்.

கனவுகளை வரைந்து வையுங்கள்.

கனவுகளை காட்சிப்படுத்த தெரிந்தவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். எனவே நீங்கள் என்னவாக வர விரும்புகிறீர்களோ அந்த நிலையில் உங்களை நீங்களே ஓவியமாக வரைந்து உங்கள் படிக்கும் அறையில் மாட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் டாக்டர் என்றால் உடல் நலமற்றவரை பரிசோதிப்பது போல, நீங்கள் கலெக்டர் என்றால் ஒரு இடத்தை போய் ஆய்வு செய்வது போல வரைந்து எப்போதும் உங்கள் கண்ணில் படுகிற மாதிரி ஒட்டி வையுங்கள்.

டாக்டர்போல உட்காருங்கள்.

கிளாஸ்ரூமில்கூட உங்களை ஒரு டாக்டராக கற்பனை செய்து கொண்டு உட்காருங்கள். நீங்கள் ஒரு டாக்டர். செமினார் ஒன்றில் கலந்து கொண்டிருப்பது போல நினையுங்கள். உங்கள் கவனிக்கும் திறன் அதிகரிப்பதை அப்போது உங்களால் உணர முடியும். வீட்டில் படிக்கும் போதும் நீங்கள் ஒன்றை ரெஃபர் செய்வது போல நினைத்து படியுங்கள்.

முடிந்த அளவிற்கு தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் துறை சார்ந்த தகவல்களை முடிந்த அளவிற்கு சேகரியுங்கள். நீங்கள் டாக்டர் என்றால் மெடிக்கல் போய் மாத்திரை வாங்குகிறீர்கள் என்றால் சீட்டை காண்பித்து கொடுத்ததை வாங்கிக் கொண்டு வராமல் அது என்ன மாத்திரை? அதன் வீரியம் என்ன? என்ன விளைவை ஏற்படுத்தும்? என்பதையெல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நண்பர்களை கண்டறியுங்கள்

உங்கள் துறை சார்ந்தவர்களை சந்திக்கும் போது அவர்களோடு நன்கு பழகி அவர்களுடைய முகவரியை சேகரித்துக்கொள்ளுங்கள். அடிக்கடி தொடர்பில் இருங்கள். அவர்களின் அனுபவங்களை உங்களுக்கு பாடமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அக்கறையை பார்த்து அவர்கள் கூடுதல் உதவிகள் கூட செய்யக்கூடும்.

பாடம் தாண்டியும் படியுங்கள்.

வெற்றி பெற எப்போதும் பாடப் புத்தகங்களையே படித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. உங்கள் துறை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை இணையத்திலிருந்து சேகரியுங்கள். மருத்துவத்துறை என்றால் சமீபத்திய ஆய்வுகள் அல்லது கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்துகள் என தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள இன்னும் உங்கள் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகும்.

நிபுணர் நீங்கள்தான்.

எங்கே இருந்தாலும் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது என்று உறுதியாக இருங்கள். பள்ளியில்கூட நீங்கள் படிக்கிற பாடங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை தேடிக் கற்று ஒரு நிபுணராக இருங்கள். இப்போதே இப்படி இருந்துவிட்டால் நாளை நீங்கள் உங்கள் துறையில் உச்சத்தை தொடுவதை யாராலும் தடுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *