அன்று அவமானம்! இன்று வெகுமானம்!

– தூரிகா

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள்,

அந்தச் சிறுவனை அவமானப்படுத்தினர். துளசி கண்டறிந்த அறிவியல் கூறுகள் அனைத்தும் போலியானவை என்றனர். துளசி தெரிவித்த அறிவியல் தகவல்கள் அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்பிக்கப்பட்டவை என்று கூறி அவன் சாதனை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குன்றிப்போய் வெளியேறிய அந்தச் சிறுவன், இன்று குன்றென நிமிரும் இளைஞராய் சாதனை படைத்துள்ளார்.

ஒன்பது வயதில் மேல் நிலை பள்ளிப்படிப்பு, 10வயதில் B.Sc பட்டம், 12 வயதில் M.Sc பட்டம், 21 வயதில் குவான்டம் கம்ப்யுடேஷன் (QUANTUM COMPUTATION) துறையில் முனைவர் பட்டம் பெற்ற இளைஞர் துளசிதான் அந்த இளைஞர்… உலகின் முதல் ஏழு இளம் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் “தக்கத் அவ்தார் துளசி”யின் வெற்றிக்கு வெகுமானமாய் உலகின் பல மூலைகளில் இருந்தும் வேலைக்கான அழைப்புகள் குவிகின்றன. கண்ணை மறைக்கும் கவர்ச்சிகரமான உயர்ந்த சம்பளம், வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை என எதுவும் தேவையில்லை என்பது இந்த இலட்சிய இளைஞரின் முடிவு. குவான்டம் கம்ப்யுடேணன் துறையில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டு வருவதும் அதன் வளர்ச்சிக்காக ஒரு மாபெரும் ஆய்வுக் கூடம் எழுப்ப வேண்டும் என்பதுதான் துளசியின் தற்போதைய கனவாம்.

மூத்து முதிர்ந்த அனுபவசாலிகள் பலரும் தங்கள் வெற்றியின் அடித்தளமாய் விவரிப்பதென்னவோ அவமானங்களையும், மறுக்கப்பட்ட வாய்ப்புகளையும்தான். இவை இரண்மையுமே மூலதனமாக்கி துள்ளித் திரியும் இளம் வயதில் பாம்பே ஐஐடியின் துணைப் பேராசிரியராக முன்னேறியிருக்கிறார் துளசி. இந்தியாவில் இருபத்தி இரண்டு வயதில் முனைவர் பட்டம் பெற்று புகழ்பெற்ற பாம்பே ஐஐடியின் இயற்பியல் துறை துணைப் பேராசிரியராக உயர்ந்திருக்கும் துளசியிடம் இந்த சாதனை எப்படி சாத்தியப்பட்டது என்ற கேள்விக்கு…

“அவமானங்களைப் புறம் தள்ளி விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, இலக்கில் மட்டுமே என் கவனத்தை குவித்திருந்தேன். அதுதான் இன்று பல வெற்றிகளை எனக்குக் குவித்திருக்கிறது. கற்பதன் மூலமும் கற்பிப்பதன் மூலமும் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும்” என்று உற்சாகமாக கூறுகிறார் துளசி. எதிர்ப்புகளையும் ஏமாற்றங்களையும் தாண்டி வெற்றி சிகரத்தை எட்டிப்பிடித்திருக்கும் சாதனை இளைஞர் பாராட்டப்பட வேண்டியவர் மட்டுமல்ல… பின்பற்றப்பட வேண்டியவரும் கூட!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *