– ஹேமா குமார்
உங்கள் தேவைகளுக்காக மட்டும் பிரார்த்தனை செய்வது சுயநலத்தின் வெளிப்பாடு. உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த மற்றவர்கள் – யார் யார் என்கிறீர்களா? அது உங்கள் கையில்தான் இருக்கிறது.
ஆமாம்! நீங்கள் யாருக்கெல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது உங்கள் கைகளில் இருக்கிறது. உங்கள் சமய மரபின் படி நீங்கள் பிரார்த்தனை வேளையில் கைகளைக் குவித்திருந்தாலும் சரி, விரித்திருந்தாலும் சரி – விரல்களை கவனியுங்கள். அதில்தான் விஷயம் இருக்கிறது. இப்படியொரு சுவாரசியமான விஷயத்தை இணையத்தில் படித்தேன்.
உங்களுக்கு நெருக்கமாக இருப்பது, கட்டைவிரல். ஆகவே, உங்களுக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் இது அடையாளம். உங்கள் குடும்பம் – உங்கள் நண்பர்கள் – உங்கள் அலுவலக சகாக்கள் – அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் – இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய உங்கள் கட்டைவிரல் நினைவுபடுத்துகிறது. நெருக்கமானவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, அவர்கள் நலம் அடைவதோடு, உங்களைக் காண்கிற போதெல்லாம் இனம்புரியாத நெகிழ்ச்சியை உணர்வார்கள்.
அடுத்தாற்போல் இருப்பது, சுட்டுவிரல், திசைதெரியாமல் தவிப்பவர்களுக்கொரு வழிகாட்டும் நல்ல செயல்களை செய்பவர்களுக்கு சுட்டுவிரல் அடையாளம். கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்கள் – நோய் தீர்க்கும் மருத்துவர்கள் – புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவந்து கொடுக்கும் விஞ்ஞானிகள் போன்றோர் பொறுப்புணர்வுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டுமென்று பிரார்த்தனை செய்வதும் நம் கடமை. அப்படிச் செய்வதன்மூலம், நம்முடைய பிரார்த்தனை பலம் தோன்றாத் துணையாக அவர்களுக்கு வேண்டிய வல்லமையை வழங்கும்.
அதற்கடுத்தது, நடுவிரல். எல்லா விரல்களையும்விட உயரமாய் நிமிர்ந்து நிற்கிற நடுவிரல் – தலைமை நிலையில் இருப்பவர்களுக்கான அடையாளம். உங்கள் பணியிடத்தில் தலைமை நிலையில் இருப்பவரிடம் தொடங்கி, சமூகத் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள், ஆளும் தலைவர்கள் என்று யாராக இருந்தாலும், அவர்கள் மனதில் நல்ல எண்ணங்களே உருவாக வேண்டுமென்றும், அவர்களின் மனதில் தோன்றும் முக்கியமான தீர்மானங்கள் மனித குலத்துக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த வேண்டுமென்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனை உங்கள் நடுவிரல் நினைவுபடுத்துகிறது.
நான்காவதாய் உங்கள் மோதிரவிரல். ஐந்து விரல்களிலேயே இதுதான் மிகவும் பலவீனமான விரல். தட்டச்சு செய்பவர்களுக்கும், பியானோ வாசிப்பவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். விரைவில் சேதமுறக்கூடிய இந்த விரல், சமூக அமைப்பில் பலவீனமானவர்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. இவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
கடைசியாய் இருப்பது சுண்டுவிரல். கடவுள் என்னும் பெரும் சக்தியின் முன் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இந்த விரல் நினைவுபடுத்துகிறது. மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்த மனநிறைவோடு, நமக்கான பிரார்த்தனையைக் கடைசியாக முன் வைக்கிறோம். ஒருவகையில் பார்த்தால் – இதுதான் பிரார்த்தனைக்கான தகுதி. யார், தன்னையும் தன் தேவைகளையும் கடைசியில் வைக்கிறாரோ, அவரே கடவுளின் பார்வையில் முதலாவதாக இருப்பார்.
ஒவ்வொரு நாளும் இப்படி பிரார்த்தனை செய்கிறபோது, இயல்பாகவே எல்லோராலும் விரும்பப்படும் மனிதராக வளர்கிறீர்கள். எல்லோரையும் நேசிக்கும் மனிதராகவும் மலர்கிறீர்கள்.
Leave a Reply