கவுன்சிலிங் யாருக்கு தேவை

கவுன்சிலிங் கலையை கைப் பிடித்து சொல்லித் தரப்போகும் கட்டுரை
தொடர். இனி உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே வழிகாட்டலாம்.

– கிருஷ்ண. வரதராஜன்

கவுன்சிலிங் என்றாலே மக்கள் பயப்பட்ட காலம் ஒன்று உண்டு.

மனநல மருத்துவராக இருக்கும் என் நண்பர் வருத்தத்தோடு முன்பு ஒருமுறை சொன்னார். எனக்கு யாரும் திருமண அழைப்பிதழ் தருவதில்லை. அப்படியே தந்தாலும் நாசுக்காக வரவேண்டாம் என்று உணர்த்தி விடுகிறார்கள். உறவுக்காரர்கள்கூட என் வருகையை

தவிர்க்கிறார்கள். காரணம், அங்கே யாராவது இந்த டாக்டர் இங்கே எதற்கு வந்திருக்கிறார்? பெண்ணிற்கு எதுவும் மன நல வைத்தியம் பார்த்திருப்பார்களோ? என்ற சந்தேகம் வரும் என்பதால்தான் தன்னை தவிர்க்கிறார்கள் என்றார்.

கவுன்சிலிங்கிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்கிறோம் என்றால் பக்கத்துவீட்டுக்காரர்கள் உன் குழந்தை நல்லாத்தானே இருக்கிறது. எதற்கு கவுன்சிலிங் என்கிறார்கள் என்றார், என்னைச் சந்திக்க வந்திருந்த ஒருவர்.

இப்போது அந்த அளவிற்கு நிலைமை இல்லை. கவுன்சிலிங் என்கிற வார்த்தை இயல்பாகி விட்டது. எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாக மாறி வருகிறது.

என் நிகழ்ச்சிகள் முடிந்தபின் என்னிடம் பேசுகிறவர்கள் என் பையனுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் தேவை. உங்கள் நேரம் வேண்டும் என்று மற்றவர்கள் முன்னிலையில் இயல்பாக கேட்கிறார்கள்.

என்னிடம் குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்களுத்தான் பல நேரங்களில் கவுன்சிலிங் தேவைப்படும் . ஆனால் அதை சொல்ல முடியாது. சொன்னால் அடுத்த முறை வரமாட்டார்கள். அதனால் குழந்தையிடம் உன் பெற்றோர்களுக்குத் தான் கவுன்சிலிங் என்றும் பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைக்குத்தான் கவுன்சிலிங் என்றும் சொல்லி இருவரையும் தொடர்ந்து வரச் செய்து சமாளித்திருக்கிறேன்.

கவுன்சிலிங் என்று சொன்னால் என்னோடு சண்டை போடுவான். அதனால் என்னுடைய ப்ரெண்டை பார்க்கப் போகிறோம் என்று சொல்லி அழைத்து வருகிறேன். நீங்கள்தான் எப்படியாவது நாசூக்காக பேசி அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று வந்தவர்கள் இருக்கிறார்கள்.

அவன் லவ் பண்றான். ஆன நான் இத சொன்னேன்னு தெரிஞ்சா ரகளையே பண்ணிடுவான். நீங்களா கண்டுபிடிச்ச மாதரி பேசி எப்படியாவது அவனை சரி பண்ணிடுங்க என்றவர்கள் இருக்கிறார்கள்.

கறுப்பாக இருப்பதால் எல்லோரும் என்னை புறக்கணிக்கிறார்கள். எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று கல்லூரி படிக்கும் மாணவி தனியாக வந்து கவுன்சிலிங் கேட்டிருக்கிறாள்.

கவுன்சிலிங்கிற்காகவே கோவாவில் இருந்து வந்திருந்த கலைச்செல்வன் என்கிற பையனின் தந்தை, அவனுக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை என்றும் பெயரை மாற்றச் சொல்லி ரகளை செய்கிறான். ஒன்று அவன் எண்ணத்தை மாற்றுங்கள் அல்லது நீங்களே அவன் பெயரை மாற்றுங்கள் என்றார்.

மகன் அல்லது மகள் படிக்கவில்லை என்பதற்காக கவுன்சிலிங் வரும் பல பேர் கோபமாகத்தான் பேசுவார்கள். படிப்பில அக்கறையே இல்லை. திங்கச்சொல்லுங்க. விளையாடச் சொல்லுங்க. நேரம் காலம் பாக்காம செய்வாங்க. ஆனா படிக்கச்சொல்லுங்க… எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாருங்க..

உள்ளக்கொதிப்பு முகத்தில் தெரியும்.

இவன் உருப்படவே மாட்டான் சார். படிக்கணும்ங்கிற அக்கறை இருந்தாதானே என்று சட்டென்று தீர்ப்பு சொல்வார்கள்.

ஓட்டப் பந்தயம் நடக்கிற இடத்தில் ஒருவன் ஓடவில்லை என்றால் ஓட விரும்பவில்லை என்று மட்டும் அர்த்தமில்லை. ஓட முடியவில்லை. ஓடத் தெரியவில்லை. விழுந்துவிடுவோமோ என்ற பயம் இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஏன் காலில் முள் கூட குத்தியிருக்கலாம்.

என்ன பிரச்சனை என்பதை பாதிக்கப் பட்டவர்களிடமே பேசி கண்டுபிடிப்பதும், அதில் இருந்து மீள வழி சொல்லித்தருவதும்தான் கவுன்சிலிங்கில் என் வேலை.

கவுன்சிலிங்கிற்கு வந்தவர்கள் நான் சொன்னவற்றை தங்கள் வாழ்க்கையில் கடைப் பிடிக்கவேண்டும். இதற்கு அவர்களோடு இருப்பவர்களின் உதவி வேண்டும். எப்படி சில மருந்துகள் சாப்பிடும்போது பத்தியம் இருக்கிறார்களோ அதாவது சில உணவுகளை விலக்க வேண்டியிருக்கிறதோ அது போல இந்தக் கவுன்சிலிங் காலத்தில் சில எதிர் மறை எண்ணங்களை முற்றிலுமாக விலக்க வேண்டும். புதிதாக எதிர்மறை எண்ணங்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் சில பெற்றோர்கள் நான் ஏதோ வேப்பிலை வைத்து குழந்தைக்கு மந்திரித்து எல்லாவற்றையும் சரி செய்துவிடுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். என்னை சந்தித்தாலே தங்கள் குழந்தைகளுக்கு சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை அழைத்து வரச் சொன்னால் அதன் அவசியத்தை புரிந்து கொள்வதில்லை.

பல வருடமாக அவனிடம் வேரூன்றி இருக்கும் பழக்கத்தை பத்து நிமிடம் பேசி மாற்றி விட முடியாது. சில குழந்தைகளோடு நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவே சில மணி நேரங்கள் ஆகிவிடும்.

நீ அட்வைஸ்தான சொல்லப்போற சொல்லு என்று வடிவேலு பாணியில் உட்கார்ந்திருப் பவர்களை நான் அவனில்லை என்று புரிய வைத்த பிறகுதான் லேசாக புன்முறுவல் பூப்பார்கள்.

எல்லோரும் குறைசொல்லி குறைசொல்லி நீ ஒண்ணுக்கும் லாயக்கில்லை என்று நம்ப வைத்திருப்பார்கள். தாழ்ந்து கிடக்கும் அவர்களின் சுயமதிப்பை உயர்த்தி நம்பிக்கையோடு நிமிர்ந்து உட்காரச்செய்யும் போதெல்லாம் எனக்கு தோன்றும். இதை பெற்றோர்களே செய்தால் என்ன?

கவுன்சிலிங் முடித்தபின் பெரும்பாலான பெற்றோர்கள் என்னிடம் கேட்பதுண்டு. நாங்க சொன்னால் மட்டும் ஏன் எங்கள் குழந்தைகள் கேட்பதில்லை ?

அப்போதெல்லாம் நான் ஒரு கதை சொல்வேன்.

அக்பர் பீர்பாலை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கே சென்றிருந்தார். அவரை பணிவோடு வரவேற்ற பீர்பாலின் மனைவி சற்று அமருங்கள். அவர் தியானத்தில் இருக்கிறார் இப்போது வந்து விடுவார் என்றார்

அக்பருக்கு வருத்தமாகிவிட்டது. நான் ஒரு சக்ரவர்த்தி இருந்தாலும் மந்திரியை மதித்து வீடு தேடி வந்திருக்கிறேன். என்னைப்போய் காக்க வைப்பதா? அரசரை விட தியானம் அவ்வளவு முக்கியமா? என்று

தியானம் முடித்து வந்த பீர்பாலை பார்த்து அரசர் கேட்டார், பீர்பால் தியானம் என்றால் என்ன? எனக்கும் சொல்லிக் கொடு.

பீர்பால் அடக்கத்தோடு சொன்னார். சக்ரவர்த்தி தியானம் என்பதை ஒரு குருதான் சொல்லிக் கொடுக்க முடியும். நான் சொல்லிக் கொடுக்கக்கூடாது.

அக்பருக்கு கோபம் தலைக்கேறி விட்டது. எதுவும் பேசாமல் உடனே அரண்மனைக்கு வந்து விட்டார். வந்தவுடன் அறிவிப்பு செய்தார். யாருக்கெல்லாம் தியானம் தெரியுமோ அவர்கள் அனைவரும் நாளை அரண்மனையில் கூட வேண்டும் என்று.

மறுநாள் அரண்மனைக்கு வந்த அனைவரிடமும் தியானம் என்றால் என்ன ? அதை எப்படி செய்ய வேண்டும்? என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். பீர்பாலை பார்த்து கேலியாகச் சிரித்தார்.

பார்த்தாயா பீர்பால், நீ சொல்லிக் கொடுக்காவிட்டால் என்ன? எனக்கு தியானம் என்றால் என்ன என்று இப்போது நன்றாக புரிந்துவிட்டது என்றார்.

உடனே காவலாளிகளை பார்த்து பீர்பால் கத்தினார், யாரங்கே இந்த முட்டாளை கைது செய்யுங்கள். அக்பரை காட்டி கட்டளை இட்டார்.

காவலாளிகளுக்கு வெலவெலத்து போய் விட்டது. பீர்பால் சொன்னால் எதையும் செய்யலாம். ஏனென்றால் மகா மந்திரி. ஆனால் அரசனைப் பார்த்து கைது செய்யச்சொன்னால் ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றார்கள்.

அக்பருக்கு கோபம் வந்துவிட்டது. ஆனாலும் இந்த பீர்பாலுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து விட்டோம். அதனால்தான் என்னையே கைது செய்யச் சொல்லுகிற அளவுக்கு தைரியம் வந்துவிட்டது என்று கோபத்தோடு காவலாளிகளை பார்த்து கத்தினார், முதலில் இந்த முட்டாளை கைது செய்யுங்கள் என்று.

அடுத்த நொடி காவலாளிகள் பாய்ந்து பீர்பாலை கைது செய்தார்கள்.

பீர்பால் சிரித்தார். அரசே! நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நானும் சொன்னேன். ஆனால் நான் சொன்னது பலிக்கவில்லை. இப்போது புரிகிறதா, யார் வாயிலிருந்து வருகிறது என்பதை பொறுத்துத்தான் எந்த ஒரு வார்த்தையும் பலிக்கும்.

உங்களுக்கு தியானம் பலிக்க வேண்டும் என்றால் அது ஒரு குருவின் வாயிலிருந்து வரவேண்டும் என்றார் அடக்கமாக.

இந்தக்கதையை படித்ததும் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அப்போது கிருஷ்ண. வரதராஜனில் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தான் பலிக்குமா? பெற்றோர்கள் வார்த்தை பலிக்காதா ?

பல பெற்றோர்களும் இதை என்னிடம் கேட்பது உண்டு. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு அறிவுரைகள் பிடிப்பதில்லையே ஏன் ?

அவர்களுக்கு என் பதில் இதுதான்: அறிவுரைகள் யாருக்கும் பிடிக்காமலில்லை. அறிவுரைகள் சொல்லப்படும் விதம்தான் பிடிக்கவில்லை.

என்னிடம் கவுன்சிலிங் வருபவர்களுக்கு நான் அறிவுரைகளே சொல்வதில்லை. பிறகு எப்படி அவர்களை மாற்றுகிறேன் என்கிறீர்களா? அவரசப்படாதீர்கள். அதை சொல்லித்தரத்தான் இந்தத் தொடர்.

எத்தனை விதமான பிரச்சனைகளை என்னிடம் சொன்னாலும் என்னிடம் ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது. எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் அந்த மருந்தைத்தான் நான் கொடுப்பேன். அதன் பெயர் அன்பு.

என் நிகழ்ச்சிகளில் எல்லாம் நான் ஒரு பன்ச் டயலாக் சொல்வேன்.

அன்புதான் எனது வழி

அன்புதான் எனது மொழி

என்னிடம் கவுன்சிலிங் வருபவர்கள் இந்த மருந்தை சாப்பிட்டவுடன் குணமாகிறார்களோ இல்லையோ இந்த மருந்து சாப்பிட்ட மயக்கத்தில் அன்றிலிருந்து எங்கள் வீட்டில் ஒருவராக மாறி விடுவார்கள்.

என் வார்த்தை மகுடிக்கு இந்தக்குழந்தைகள் எப்படி மயங்குகிறார்கள் என்பது பல பெற்றோருக்கு புரியாத புதிர். அதை புரிய வைக்கத் தான் இந்த பிராக்டிகல் தொடர்.

பயிற்சி வகுப்புகளில் எப்போதும் என் கொள்கை இதுதான். என்னை முதலில் அவர்களுக்கு பிடிக்க வேண்டும். அப்படி பிடித்து விட்டால் நான் என்ன சொன்னாலும் பிடிக்கும்.

கவுன்சிலிங் கலையை இந்தக்கட்டுரைத் தொடரில் நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம். இதைக் கற்று கவுன்சிலிங் செய்வதற்கு முன்னால் உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். உங்களை உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்குமா ?

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *