யார்? தலைவர்

– ரிஷாபாரூடன்

இளமைக்காலத் தேடல்களில் ஒன்று, தலைமைக்கான தேடல், தன்னை வழிநடத்த இன்னொருவர் வேண்டுமென எண்ணும் பருவம் இது. நடிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள் வரை பலராலும் ஈர்க்கப்படும் காலமிது.

தலைவர்களைத் தேடுவதும், அவர்கள் பாதையினைப் பின் பற்றுவதும் தவறில்லை. ஆனால், தான் பின்பற்றும் தலைவர் தரமானவர்தானா என்பதை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் அனைவருக்கும் உண்டு.

தன்னல மறுப்பு, பொது வாழ்வில் பிடிப்பு, வந்து சேரும் தொண்டர்களுக்கு உரிய வழியை உணர்த்தும் முனைப்பு, இலக்கு நோக்கிய கவனக்குவிப்பு, இத்தனை தகுதிகளையும் சேர்ந்த தலைவரைத் தேர்ந்து கொள்ளும் போது தான் சாதனைகள் சாத்தியம்.

உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் உரைவீச்சு மட்டுமல்ல, தலைமையின் அடையாளம், வளர்ச்சிகளை நோக்கி வழிநடத்தும் விரிந்த பார்வையே முக்கியம். இயக்கங்களில் இணையும் போது, ஒன்றில் கவனம் வேண்டும்.

அந்த இயக்கத்திற்குத் தனிமனிதர் தலைமை தாங்குகிறாரா, கொள்கைகள் தலைமை தாங்குகின்றனவா என்பதைத் தெரிந்துணர்வது அவசியம்.

அகிம்சை என்னும் அறக்கொள்கையை மையப்படுத்தியே இயக்கம் கண்டார் காந்தியடிகள்.

கொள்கைகளை முன் நிறுத்திய இயக்கங்களில், தலைமையில் தொடங்கி கடை கோடித் தொண்டன் வரையில் கொள்கையின் வீச்சு விரியும்.

தனிமனிதர்களை மையப்படுத்திய இயக்கங்களில், கீழ்த்தரப்பிலிருந்து ஒவ்வொருவர் கவனமும் தலைவரை நோக்கியே குவியும்.

இன்று, தன்னிகரற்ற கொள்கைகளுடன் தொடங்கப்பட்ட இயக்கங்கள்கூட தனிமனித ஈர்ப்புக்கும், தன்னலத் தலைமைக்கும் தாரை வார்க்கப்பட்டுவிட்டன.

எனவே, இந்தத் தலைமுறைக்குத் தலைமை அவசியமா என்கிற கேள்விகூட எழுந்துவிட்டது. தனி மனிதர் ஒவ்வொருவருமே தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளத்தக்க கல்விச் சூழலோ, சமூகச் சூழலோ இல்லை என்பதால், தலைமைக்கான தேவை தொடர்கிறது.

ஆனால், தலைமைக்கான தரம் எத்தனை தலைவர்களிடம் இருக்கிறது என்பதை எண்ணும் போதோ ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

ஊடகங்களில் அசுர வளர்ச்சி காரணமாக மிகப் பல தலைவர்களின் முகத்திரைகள் கிழிகின்றன. சராசரிகளை விடவும் சாதாரண நிலையில் நிற்கின்றனர்.

கொள்கையைக் காற்றிலும் இலட்சியங்களை ஆற்றிலும் விட்டுவிட்டு நேற்றின் பழங்கதைகளை நீளமாய்ப் பேசியே நிறைய தலைவர்களின் காலம் கழிகிறது.

எனவே, தலைமைக்கான இலக்கணமாகவும், இலக்கியமாகவும் எழுதிய வாய்ப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது.

நல்ல தலைமை இல்லை என்பது இன்றைய தலைமுறையின் பலவீனம். முயன்றால், பலமும் அதுதான்.

உண்மையின் உந்துசக்தியை உழைப்பின் வெளிச்சத்தை, விரிந்த பார்வையின் வலிமையைத் துணையாகக் கொண்டு புதிய தலைவர்கள் புறப்படக்கூடிய காலமும் இதுதான்.

கவிழ்ந்த இருளைக் கிழித்து கதிர் முளைத்து எழுவது போல தவறான வழிகேட்டு தங்கள் தலைமுறை விழுந்து கிடக்கும் வேளையில் சாதிக்கும் ஆற்றலும் சாதனை வேட்கையுமாய் இளைஞர்கள் எழுச்சி பெற இதுவே நேரம்.

தலைமை என்பது பணம் சேர்ப்பின் உத்தியல்ல. பணிவாய்ப்பின் உத்தரவு என்னும் பணிவுள்ளம் கொண்டவர்களே நிலையான புகழோடு நின்றிருக்கிறார்கள்.

தலைமைப் பண்பை வளர்க்கும் வெற்றிக் கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு செயல்சார்ந்த அணுகுமுறையோடு வருகிற தலைமைக்காக வரலாறு காத்திருக்கிறது.

உள்ளீடுள்ள மனிதர்களை உயர்த்துவதும், தவறான பிம்பங்களைத் தகர்ப்பதும் ஊடகங்களின் குணம் என்பதை உணர்ந்தால் நல்லது.

“நீ வழி நடக்க வந்தாயா? வழி நடத்த வந்தாயா?

கேள்விக்கான விடையை உனக்குள்ளிருந்து கண்டெடுத்து வந்துவிடு. உன்னுடைய பலங்களில் உன்னை நீ வென்றுவிடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *