ஒரு கேள்வியோ சவாலோ எதிரே மலை போல் நிற்கிறது. அதனை எப்படியெல்லாம் கடந்து வரலாம் என்று பல கோணங்களில் பார்த்து வரும் போது அந்த சவாலை எல்லாக் கோணங்களிலுமே பார்த்துவிட முடிகிறது.
கயிலாய மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற இராவணனை கால் கட்டைவிரலால் சிவ பெருமான் அழுத்த, அவன் சிக்கிக் கொண்டதாக புராணங்கள் பேசுகின்றன. சில பெரிய பெரிய பிரச்சினைகள் அப்படித்தான். அசைக்கமுடியாத அளவு ஆழமாக இருக்கும். அவற்றின் பாதிப்புக்கு ஆளாகாமல் கடந்து செல்வதன் மூலம் அந்த மலைகளையும் நம்பாதையில் இடையூறு செய்யாத விதமாக நகர்த்திவிடுகிறோம்.
அந்த மலை அங்கிருந்து நகரவில்லைதான். ஆனால் நம்முடைய அணுகுமுறை, நம் பாதையில் அது தடையாய் இருக்கிறது என்கிற எண்ணத்தையே நகர்த்தி வைத்து விடுகிறது.
சிக்கல்களையும், சவால்களையும் மலைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதில் இன்னொரு பொருளும் இருக்கிறது. சமஸ்கிருதத்தில், மலையை அசலம் என்று சொல்வார்கள். திருவண்ணா மலையை அருணாச்சலம் என்றும் திருப்பதியை வெங்கடாசலம் என்றும், மருதமலையை மருதாசலம் என்றும் சொல்வது இதனால்தான்.
அசலம் என்றால் அசைவற்றது. நாம் எதிர் கொள்ள வேண்டிய சவால்களைத் தாண்ட நாம் தொடர்ந்து முயல்வதே பாதி வெற்றி. ஏனென்றால் பெரும்பாலான சிக்கல்கள், பதிலுக்கு நம்மை வெற்றி கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பதில்லை.
ஒரு சவாலை அணுகுகிற முறையே தலைகீழ் மாற்றத்தைத் தந்துவிட முடியும். தமிழ் சினிமாக்களில், “நான் ஒரு மலை! என்கிட்டே மோதாதே” என்ற வசனத்தை வெகு தடவை கேட்டிருக்கிறோம். ஆனால் மலையுடன் முட்டி மோதியவர்கள்தான் மலைகளில் சாலை அமைத்திருக்கிறார்கள். மாளிகைகள் கட்டியிருக்கிறார்கள். நான் பள்ளி மாணவனாக இருந்த போது, “பாம்பு பார்த்தசாரதி” என்று ஒருவர் இருந்தார். பாம்புகளுடன் குடியிருப்பது, பின்னோக்கி நடப்பது என்று ஏதேதோ செய்து கொண்டிருப்பார்.
ஒருமுறை, ஊட்டி மலையின்மீது, ஒரு பட்டாணியை மூக்கால் தள்ளிக்கொண்டே ஏறுவது என்று புதிய சாதனை ஒன்றை அறிவித்தார். முயற்சியும் செய்தார். செய்து முடித்தாரா என்று தெரியவில்லை.
ஆனால், ஒரு மலையுடன் தன் மூக்கால் மோதி ஜெயிக்க வேண்டும் என்கிற அவருடைய ஆசையும், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த அணுகு முறையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவரை இன்றும் நினைத்துப் பார்க்க விரும்புகின்றன.
ஜப்பானியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் வந்ததேகூட அவர்களுடைய அணுகுமுறையின் அடிப்படையில் மிகப்பெரிய மாற்றம் வந்தபோதுதான் என்பது, மிகச் சமீபத்தில் எழுதப்பட்ட சரித்திரம்.
முன்பெல்லாம், ஜப்பானியர்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் ஓய்வு பெறும்வரை அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை பார்ப்பார்கள். “வாழ்நாள் முழுவதும் ஒரே நிறுவனத்தில் வேலை” என்கிற நிலைப்பாடு மாறி, “தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப தேவைப்பட்டால் நிறுவனங்கள் மாறுவது” என்கிற வழக்கம் வந்த பிறகு ஜப்பானில் மனிதவளம் பெரும் வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கண்டது.
விரும்பும் விதமாய் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, ஒரு மனிதனுக்குள்ள வாய்ப்பு மட்டுமல்ல. அது ஒரு மனிதனின் உரிமையும் கூட!! விரும்பும் வேலையில் இருப்பது, விரும்பும் அளவு வருமானம் சேர்ப்பது, விரும்பும் அளவு திறமைகளை வெளிப்படுத்துவது, விரும்பும் அளவு ஆரோக்கியம் பேணுவது இவையெல்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகள்.
தன்னுடைய சக்தி இன்னதென உணர்ந்த ஒவ்வொருவருமே இந்த உரிமைகளை எட்டும் உத்வேத்துடன்தான் இருப்பார்கள். அவர்களுக்கு, வழியை மறித்து வளர்ந்து நிற்கும் மலைகள் ஒரு பொருட்டேயில்லை.
மலைகளைக் கடந்து தங்கள் வழிகளை அடைந்துவிடவே அவர்கள் எப்போதும் முயல்வார்கள். வழிமறிக்கும் எதையும் விடவும் பெரியது எது தெரியுமா? உங்களை வழி நடந்தும் உந்து சக்தி. வழி நடத்துகிற உத்வேகம் வலிமையாய் இருந்தால் வழி மறிக்கும் எதுவும் நம்மை தடுத்து நிறுத்தப் போவதில்லை.
உதாரணமாக, எதிர்மறை எண்ணங்களாலும், பதட்டங்களாலும் எந்தப் பயனும் கிடையாது என்று நீங்கள் திடமாக நம்பும் போது அந்த எண்ணங்களைவிட்டு முழு விழிப்புணர்வோடு வெளிவருகிறீர்கள். மலை போல் உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருந்த அந்த எண்ணங்கள் சட்டென்று காணாமல் போகின்றன. அந்த நிமிடத்தில் இருந்து வழிமறித்த ஒன்று முற்றாகக் கரைகிறது. வழிநடத்தும் சக்தி தான் வேகவேகமாய் விரைகிறது.
மனதின் வலிமை மிகவும் பெரியது. நாம் நினைப்பதைவிட நம் மனம் பல மடங்குகள் கூடுதல் வலிமை கொண்டது. தன்னைத்தானே நொந்து கொள்பவர்களும், தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டுக் கொள்பவர்களும் தங்கள் எல்லைகளைத் தாங்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.
பெரிய உயரங்களைக் கடந்து போக விரும்புகிறவர்கள், தங்களுடைய மனத் தடைகளைக் கடந்து வருவதே மலைகளைக் கடந்து வருவது போலத்தான்.
பலராலும் கொண்டாடப்பட்ட விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்க்ளின் தன் முதுமைக் காலத்தில் அதிகம் பேசுவதாலேயே பலரால் புறக்கணிக்கப்பட்டார். பலரும் அவரை வியந்து பாராட்டும் விஷயமே அவருக்குத் தெரியவில்லை. பலர் விலகி நிற்பதைப் பார்த்து, விஷயம் புரிந்து தன் பேச்சைக் கட்டுப்படுத்தினார். மீண்டும் அவரை எல்லோரும் விருப்பத்துடன் நாடி வரத் தொடங்கிவிட்டார்கள்.
தடைகளைத் தாண்டிவர முயல்பவர்கள் மறக்கவே கூடாத மந்திர வாசகமும் ஒன்றுண்டு. ஏதோ சில தடைகள் எதிரே இருக்கும். அவற்றைத் தாண்டவும் முடியும். உடனே தாண்ட வேண்டியது, உள்ளே இருக்கும் தடைகளைத் தான்!!
(மலைகள் நகரும்)
Leave a Reply