– கிருஷ்ண.வரதராஜன்
கவுனசிலிங் கலையை கற்றுத்தரும் தொடர். இனி நீங்களும் கவுன்சிலிங் வழங்கலாம்.
இந்தக் கட்டுரை படிக்கிறவர்களை எல்லாம் தொழில்முறையில் கவுன்சிலர்களாக்கும் நோக்கம் எனக்கு இல்லை.
ஹாஸ்பிடல் போவதற்கு முன்னால் வீட்டிலேயே கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என்றெல்லாம் முன்முயற்சிகள் எடுக்கிற மாதிரி, பிரச்சனை பெரிதாவதற்குமுன் சில முன் முயற்சிகள் எடுப்பதற்கான வழிகாட்டல் தொடர் தான் இது.
இதைப் படித்துவிட்டு உடனடியாக இரண்டு பேருக்காவது கவுன்சிலிங் செய்து விடுவது என்று, களத்தில் இறங்கி யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை.
இன்றைய அவசர யுகத்தில் மனஅழுத்தத்தின் உச்சத்தில்தான் பலரும் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இந்தக்கலையை கற்றுக்கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு உதவுகிறீர்களோ இல்லையோ, உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள முடியும், சுய மருத்துவம் போல.
சரி. பிரச்சனைகளிலிருந்து எல்லோரையும் காக்க, மீட்பராவோம் வாருங்கள்.
கவுன்சிலிங் செய்பவர்களுக்கு தேவையான தகுதி என்ன ?
1) சக மனிதர்கள் மீதான எல்லையில்லா பிரியம். 2) நாம் கவுன்சிலிங் கொடுக்கப்போகும் துறை குறித்த ஆழமான அறிவு. இந்த இரண்டும் தான் முக்கியமான தகுதிகள். இதில் எந்த ஒன்று குறைந்தாலும் நீங்கள் செய்கிற முயற்சியால் எந்த ஒரு பயனும் இல்லை.
பெரும்பாலும் எனக்கு கவுன்சிலிங் வேண்டும் என்று விரும்பி யாரும் வருவதில்லை. ஆனால் என் குழந்தைக்கு வேண்டும் என்று பெற்றோரோ, என் மனைவி அல்லது கணவருக்கு வேண்டும் என்று மற்றொருவரோதான் அழைத்து வருகிறார்கள். அதனால் கவுன்சிலிங்கின் தேவையையும் அதைச் செய்வதற்கு நமக்கு இருக்கும் தகுதியையும் கவுன்சிலிங் தேவைப் படுபவருக்கு முதலில் உணர்த்த வேண்டும். அப்போதுதான் நாம் சொல்பவற்றை கேட்க காதுகளை திறந்து வைப்பார்கள்.
கவுன்சிலிங் பெற வந்திருப்பவர் மனதில் இடம் பிடிப்பதுதான் முதல் நிலைச்செயல். ஏனென்றால் உங்களை ஏற்றுக்கொண்டால்தான் நீங்கள் சொல்வதையும் ஏற்றுக்கொள்வார்கள்.
மற்றவர்களின் இதயத்தில் இடம்பிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. இதயத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் காதுகள் வழியாகவே செல்கின்றன என்பார்கள். எனவே உங்கள் காதுகளை நன்றாகத் திறந்து வையுங்கள்.
சொல்வதை அக்கறையுடன் கேளுங்கள். நன்றாகக் கவனியுங்கள், கேட்பது என்று மட்டும் குறிப்பிடவில்லை. அக்கறையுடன் கேட்டல் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் கூறும் விஷயங்களை கேட்பதில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு உண்மையிலேயே அவர்மீது உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். அதனால்தான் சொன்னேன். கவுன்சிலிங் செய்வதற்கான தகுதி: சக மனிதர்கள்மீது எல்லையில்லா பிரியம்.
உங்கள் முகமே, ஆர்வமாக கவனிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டும். இது உள்ளுணர்விலிருந்து வரவேண்டுமே, தவிர நடிப்பாக இல்லை. அப்படி வரவும் வராது. உண்மையிலேயே உங்களுக்கு சக மனிதர்கள்மீது அக்கறையில்லை என்றால் எதிரே பேசிக் கொண்டிருப்பவர்களிடம் உங்களையும் அறியாமல் ஒரு கொட்டாவி விட்டோ அல்லது வேறு எதாவது ஒரு அலட்சிய பாவனை செய்தோ உங்கள் அக்கறையின்மையை நீங்களே வெளிப் படுத்திவிடுவீர்கள்.
எதிரே உள்ளவர் பேசிக்கொண்டிருக்கும் போது நீங்கள் பேச முற்படக்கூடாது . அது நீங்கள் பேசத்தான் ஆர்வமாக இருக்கிறீர்கள். கேட்பதில் அக்கறையற்றவர்களாக இருக்கிறீர்கள் என்பதாகக் காட்டிவிடும். அவரை மேலும் மனம்திறந்து பேசுவதற்கு தூண்டுவதற்காக மட்டுமே ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களை மேலும் பேசத்தூண்டுவதாக அமைய வேண்டுமேயன்றி பேசுவதை தடை செய்து விடக்கூடாது.
உங்களிடம் பிரச்சனையை பகிர்ந்து கொண்டிருந்தவர் திடீரென்று அமைதியாக விட்டார். அப்போது அப்புறம் என்னாச்சு? என்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு இவர் நம்மை புரிந்து கொள்கிறார். இவரிடம் இன்னும் மனம் திறந்து பேசலாம் என்கிற எண்ணம் ஏற்படும்.
எளிய கேள்விகளை கேட்டு மேலும் அவர்களைப் பேச வையுங்கள். சில நேரங்களில் பேசிக் கொண்டிருக்கும்போதே, ‘நாம் அதிகம் பேசிவிட்டோமோ?’ என்று தோன்றி சொல்லத் தோன்றும் விஷயங்களைக்கூட சிலர் சொல்லாமல் நிறுத்திக் கொள்வார்கள்.
மேடைப்பேச்சில் ஆர்வம் உள்ள புதியவர்கள் மைக்கைப்பார்த்தால் விட மாட்டார்கள். பேசிக்கொண்டே இருப்பார்கள். நான் அதிக நேரம் பேசிவிட்டேனோ? என்று கேட்டுவிட்டு அதன் பிறகும் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக்கதை ஆகிவிடக் கூடாது. அவர்கள் பேசி முடிக்காதவரை நீங்கள் பேசக்கூடாது என்பதை ஒரு விதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டுச்சமையலுக்கும் ஹோட்டல் சமையலுக்கும் உள்ள வேறுபாடு வீட்டில் சமைப்பவருக்கு, சாப்பிடுபவர்மீதுள்ள அக்கறை ஹோட்டலில் இருக்காது என்பதுதான். அங்கே சுவைக்காக எதை வேண்டுமானாலும் சேர்ப்பார்கள். ஆனால் வீட்டில் ஆரோக்கியத்திற்காக எதை வேண்டுமானாலும் தவிர்ப்பார்கள்.
எனவே, கவுன்சிலிங்கில் உங்களின் அக்கறையே பாதிக்கப்பட்டவருக்கு பாதி ஆறுதலை தந்துவிடும்.
நீங்கள் அக்கறையாக கேட்பதை உணர்ந்தால்தான் பலரும் மனம்திறப்பார்கள். அப்படி அவர்கள் அதிகம் பேசி மனம் திறந்தால் தான் நீங்கள் பிரச்சனையை கண்டறியமுடியும்.
எவ்வளவுதான் உங்களுக்கு நெருக்கமானவர் களாக இருந்தாலும் அவர்கள் மனதில் இருப்பதை உங்களால் கண்டறியமுடியாது. இதைப் புரிந்து கொள்ள சின்ன ஒரு பயிற்சி செய்துவிடுவோம். அப்போதுதான் உங்களுக்கு இந்த அக்கறையுடன் கவனித்தல் என்பதன் முக்கியத்துவம் புரியும். யாரையெல்லாம் நான் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்கள் முக்கியத்துவம் தரும் மூன்று விஷயங்களை பட்டியலிடுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் மனைவியின் அல்லது கணவரின் வாழ்க்கையில் அவர் முக்கியத்துவம் தரும் மூன்று விஷயங்கள் 1 வேலை 2 குடும்பம் 3 ரோட்டரி கிளப் என்று நினைத்தால் இதை ஒரு பட்டியலாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அல்லது உங்கள் மனைவியை பொறுத்தவரை, 1. குடும்பம் 2. வேலை 3. டிவி என்பதாக இருக்கலாம் என்று நீங்கள் கணிக்கிறீர்கள் என்றால் அதை எழுதி விட்டு அவர்களை விட்டும் இதே கேள்விக்குப் பதில் எழுதச் சொல்லி ஒப்பிட்டு பாருங்கள்.
பிறகு உங்களுக்கே புரியும், மற்றவர்களின் மனதைப் புரிந்து கொள்வது என்பது வேறு. மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது வேறு.
கவுன்சிலிங்கில் மற்றவர்கள் மனதில் நினைப்பதை சொல்லவைக்க வேண்டும். அப்படி சொல்லும்போது உங்கள் மனதை நான் புரிந்து கொண்டேன் என்று உணர்த்த வேண்டும்.
“ஸ்கூலில் டிராமா. தாத்தா வேஷம், என் பையனுக்கு. நாங்கள் வேஷ்டி சட்டை எல்லாம் கொடுத்து போடு என்றால் போட மாட்டேன் என்கிறான். பேண்ட் சர்ட்தான் போடுவேன் என்று ஒரே அடம். காரணம் என் அப்பா பேண்ட் சர்ட்தான் போடுவார். என்ன சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் அவன் பள்ளி ஆசிரியர் கூப்பிட்டு பத்து நிமிடம் பேசினார். சட்டென்று போட்டுக் கொண்டு வந்துவிட்டான். ஏன் இப்படி?” என்றார், என் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒருவர்.
பெற்றோர்கள் சொன்னால் ஏன் குழந்தைகள் கேட்பதில்லை? இப்படி இருக்கையில் பெற்றோர்களே, குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடியுமா? அதை அடுத்த இதழில் பார்ப்போம்.
fathima
we need more i like to study others mind thank you varathan sir