பொருளோடு வாழ்கிறீர்களா?

– ருக்மணி பன்னீர்செல்வம்

இந்தக் கேள்வியானது இருபொருள்பட அமைந்ததுதான்.
உங்களுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய், பொருள்பொதிந்ததாய் கட்டமைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பது ஒன்று.

இன்றைய தேவை மட்டுமல்லாது எதிர் காலத்திற்கான தேவைகளுக்கும் பணத்தட்டுப்பாடு ஏற்படாதவண்ணம் முன்னேற்பாடுகள் செய்து வைத்து செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கி றீர்களா? என்பது மற்றொன்று.

>மேலும்…” />

‘பொருளில்லாதோர் வாழ்க்கை பொருளற்றது’ என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை. இதனை நாம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியிலும் உணர்ந்தாலும் விழித்துக்கொண்டு செயல்படுவோர் நம்மில் எத்தனைபேர் என்பதுதான் கேள்வி.

பணத்தின் தேவையானது நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறதே தவிர யாருக்குமே பணத்தேவை இல்லாத நாள் என்று ஒருநாளும் இல்லை.
பணமா? பாசமா? என்று பட்டிமன்றம் வைக்கின்றபோது தீர்ப்பு பெரும்பாலும் பாசத்தின் பக்கம்தான் இருக்கும்.

ஆனால் அது எப்படி சொல்லப்படும் என்றால் ஒரு திரைப்படத்தில் எண்பது சதவீதக் காட்சிகள் வில்லன்கள் செய்யும் தீமைகளையும் இருபது சதவீதக் காட்சிகள் கதாநாயகன் செய்யும் நன்மைகளையும் காட்டுவது போல் பணத்தின் தேவையை மணிக்கணக்காக பேசிவிட்டு இறுதியில் பாசத்தின் முக்கியத்துவத்தை கூறுவதாக அமைந்திருக்கும்.

ஆனால் பாசமென்பதெல்லாம் பணமில்லாத இடத்தில் குறைந்துபோகிறதென்பதும் சில நேரங்களில் உறவுகளையே ஒட்டுறவில்லாமல் செய்துவிடுகிறது என்பதும்தானே பலரின் அனுபவங்களாக இருக்கிறது.
வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.
குதிரையை யாரும் பலி கொடுப்பதில்லை
யானையை யாரும் பலி கொடுப்பதில்லை
புலியையோ, சிங்கத்தையோ பலி கொடுப்பதில்லை

தெய்வங்களுக்குக்கூட பலவீனமான ஆட்டையோ, கோழியையோ தான் பலி கொடுக்கிறார்கள்.

இதிலிருந்து தெரியவருவது வேறொன்று மில்லை. டார்வின் அவர்களின் புகழ்பெற்ற வாசகமான ‘வலுத்தவன் வாழ்வான்’ என்பதுதான்.

இன்றைய சமூகத்தில் பெரும்பாலான துன்பங்களுக்கு பலியாகி விடுபவர்கள் செல்வ மற்ற பலவீனமானவர்கள்தான்.

எங்குப் போனாலும் மனிதர்கள் மற்றவர் களைச் சந்திக்கும் போது பார்வையென்னும் தெர்மா மீட்டரை வைத்தே அவர்கள் வளத்தின் வெப்பத்தை அளந்து விடுகிறார்கள். அதற்குப் பின்னர் அவர்களின் அறிவாற்றலுக்கும் செல்வத்திற்கும் ஏற்றவாறு அவர்களை அணுகும் அல்லது நடத்தும் விதத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.

‘கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்

எல்லோரும் சென்றங்கு எதிர் கொள்வர்

இல்லானை இல்லாளும் வேண்டாள்-மற்று

ஈன்றெடுத்த தாய் வேண்டாள்

செல்லாது அவன் வாய்ச் சொல்’

என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய ஔவை பாடிய ‘நல்வழி’ பாடல்.

இன்றைய சமூகம் வலுத்தவர்களிடம்தான் உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். அந்த வலுவினை எப்படி உருவாக்கிக் கொள்வது என்பதில்தான் நம்முடைய போராட்டம் அடங்கி உள்ளது.

எத்தனை அவசரமாக சென்று கொண்டிருப் பவரும் கீழே ரூபாய்த் தாள் விழுந்து கிடப்பதைப் பார்க்க நேர்ந்தால் அது தன்னுடையது இல்லை என்றாலும் குனிந்து எடுக்கத் தவறுவதில்லை.

பணம் என்னும் கருவிதான் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவும் செய்கிறது. மற்றொரு அரசாங்கத்தை வீழ்த்தவும் செய்கிறது. இதில் பணத்தையும் அறிவையும் எப்படி பயன் படுத்து கிறார்களோ அதைப்பொறுத்து வெற்றி தோல்வி அமைந்துவிடுகிறது.

பணத்தை பெரிதாக நினைக்காதீர்கள் என்று எத்தனை தத்துவத்தை நாம் படித்தாலும் அல்லது கேட்க நேர்ந்தாலும் ஒன்றை மறந்து விடாதீர்கள். பணம் சேர்த்தல் என்னும் சிந்தனைதான் பெரும் பாலானவர்களை முன்னுக்கு புரட்டித் தள்ளும் நெம்புகோலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பணத்தின் தேவையென்பது ஒரு குழந்தை பிறக்கும்போதே தொடங்கி விடுகின்றது. அரசாங்க மருத்துவமனையில் பிறந்தால் கூட அங்கேயும் பணத்தை செலவுசெய்த பின்னர்தான் பிறந்த குழந்தையை வீட்டிற்கு அழைத்துவர முடியும் என்ற நிலைதான்.

மனிதன் பிறந்தது முதல் இறக்கின்றவரை, இறந்தபின் புதைப்பதோ, எரிப்பதோ வரை பணம் தன்னுடைய அத்தியாவசியத்தை ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிகழ்விலும் மனிதனுக்கு உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது.

நம்முடைய ஞானிகள், முனிவர்கள் எத்தனைதான் தத்துவங்களைத் தந்திருந்தாலும், ஆசையே அழிவிற்குக் காரணம் (தேவை என்பது வேறு, ஆசை, பேராசை என்பவை வேறு) என்று போதித்த புத்தராயிருந்தாலும் அவர் வாழும்வரை அவரைப் பராமரிப்ப வருக்கும், முற்றும் துறந்துவிட்டு திருவோடு ஏந்தி அன்னம் கேட்டுவரும் முனிவர்களாயிருந்தாலும் அவர்களின் பசியைப் போக்க தானமளிக்கவும் பொருள் தேவை என்பதுதான் காலங்காலமாய் உள்ள நிதர்சனம்.

தேவைப்படும் பணமில்லாமல் போவதால்,

எத்தனைபேரின் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன.

எத்தனைபேரின் திருமணங்கள் தடைப்பட்டு நிற்கின்றன.

எத்தனைபேரின் வீடுகள், நிறுவனங்கள் கடைக்கால் போடப்பட்டதோடும், பாதி கட்டிய நிலையிலும் நின்றுபோயுள்ளன.

எத்தனை பேருடைய உயர்கல்வி, கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் கனவாகிப் போயுள்ளது.

எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

எத்தனை நோயாளிகள் மருத்துவம் பார்த்துக் கொள்ள இயலாமல் மரணத்திற்கு ஆட்பட்டுள்ளார்கள். எத்தனை இளைஞர்கள் வேலை பெறவோ, தொழில் தொடங்கவோ இயலாமல் வாழ்வின் முடிவிற்குச் சென்று உள்ளார்கள்.

எத்தனை பேர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இன்னும் இன்னும் எத்தனையோக்கள் நிரம்பிய சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எனவேதான் மிக அழுத்தமாய் பணத்தின் அருமையை சொல்ல வேண்டியதிருக்கிறது.

தொடர்ந்து பொருளீட்டுதலும், சேமித்தலும், சிக்கனமாய் வாழ்தலும் தனித் தனிக் கலையாகும். இம்மூன்றும் ஒருவருக்கு கைவரப் பெற்றால் அவரை விட மகிழ்ச்சியாய் வாழ்பவரை எங்கேயும் காண முடியாது.

பொருள் பெருகினால் படையும் நட்பும் பெருகும். அதைப் பார்த்து பகைவர்கள் தாமாகவே அடங்கிப் போவார்கள்.

பகைவரை வீழ்த்தக்கூடிய கூரிய ஆயுதம் என்பது நாம் படைக்கும் மிகுந்த செல்வம்தான். எனவே எப்பாடுபட்டாவது பொருளைச் சேர்த்துக் கொண்டு பொருளோடு வாழுங்கள் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லுகின்றார்.

“செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃகதனில் கூரியது இல்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *