நமது பார்வை

சென்னையில் இன்னொரு சமுத்திரம்

நூலகங்களுக்கு அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கிராமம் தோறும் நூலகங்கள், பேருந்து நிலையம் தோறும் புத்தக விற்பனை மையங்கள் என்று, தமிழக அரசு, வாசிப்பின் தரத்தையும் பழக்கத்தையும் மேம்படுத்த எத்தனையோ திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இவற்றுக்கு

சிகரம் வைத்தாற்போல் சென்னை கோட்டூர்புரத்தில் எழுந்துள்ளது அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். சர்வதேச நூலகங்களின் சீரிய ஒழுங்கமைப்புக்கு ஈடுசொல்லும் விதமாய், ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அமர்ந்து படிக்கக்கூடிய வசதிகளுடன், இலட்சக்கணக்கான நூல்களுடன், குழந்தைகளுக்கான தனிப்பிரிவுடன் இன்னும் ஏராளமான வசதிகளுடன் இந்நூலகம் உருவாகியுள்ளது. புத்தகங்களின் காதலரான மாண்புமிகு தமிழக முதல்வரும், இந்தப் பெரும் பணியை முழு ஈடுபாட்டுடன் முன்னின்று நிறைவு செய்துள்ள மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் இந்த அறிவுப்புரட்சியின் அடித்தளங்கள். தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு, விதம்விதமான புத்தகங்களை வசீகரமான சூழலில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு சென்னைவாசிகளுக்குக் கிடைத்துள்ளது. ‘Ðடிப்பவர்களே ஜெயிப்பவர்கள், ஜெயிப்பவர்களே படிப்பவர்கள்’ என்னும் உண்மையை உணர்ந்து பெற்றோர்கள் வீட்டுக்கு வீடு வெற்றியாளர்களை உருவாக்க வேண்டும்.

சென்னையில் இன்னொரு சமுத்திரமாய் உருவாகியுள்ள இந்த நூலகம் மக்களின் பெரும் பயன்பாட்டுக்கு ஆளாக நம் நல்வாழ்த்துக்கள்.

இத்தகைய நூலகங்களை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் உருவாக்குவதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு நமது நம்பிக்கை வேண்டுகோள் விடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *