வாஸ்கோடாகாமாவிற்கு வழிகாட்டியது யார்?

– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன்

அச்சத்தோடுதான் எழுந்தேன். என்றாலும் எனக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது. பேராசிரியர் இல.செ.கந்தசாமி அவர்களைப் பார்த்து, ”உங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுவார்கள் என்றுதான் நாங்கள் காத்துக் கிடக்கிறோம். திசை தெரியாத பறவைகளாகச் சுற்றித்திரிகிறோம். வழிகாட்டுதலுக்காக காத்துக் கிடந்து காத்துக்கிடந்து எங்களைக் கரையான் அரிக்கத் தொடங்கிவிட்டது. இனிமேல் யாருடைய வழிகாட்டுதலுக்காகவும் காத்துக்கிடக்கப் போவதில்லை.

நாங்களே எங்களது திசையைத் தேடிப் புறப்படப் போகிறோம்! வாஸ்கோட காமாவிற்கு வழிகாட்டியது யார்?” என்று உணர்ச்சி ததும்ப, அச்சம் அவசரப்படுத்த வேகமாக வார்த்தைகளை பதட்டமாக கொட்டிவிட்டு நான் அமர்ந்து விட்டேன்.

எனக்கு அந்த தைரியம் எங்கிருந்து வந்தது என்று இன்றும் தெரியவில்லை. அவமானப்படும் போது நாம் அமைதியாக இருக்கக்கூடாது. அப்பொழுது ஒரு அவதாரம் எடுக்க வேண்டும். வீழ்கின்றபோது தேம்பி அழக்கூடாது. உடனே ஒரு விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்பதை எனக்குத் தெரியாமலேயே அப்பொழுது கற்றுக் கொண்டேன் என்றுதான் இப்போது நினைக்கிறேன்.

அவமானங்கள் நம்மைச் சிதைத்து விடக் கூடாது. சீராகச் செதுக்கவேண்டும். யாராவது நம்மை அவமானப்படுத்தினால் நாம் வார்த்தைகளால் அவர்களுக்குப் பதில் சொல்லக் கூடாது. வாழ்ந்து காட்டவேண்டும். அவமானங்களையே எழுச்சியாய் உருவாக்கும் உந்து சக்தியாய் மாற்றிப் பழக வேண்டும்.

நான் அமர்ந்ததும், ”பேசுவது சுலபம் ஆனால், பேசியவாறு சாதிப்பது கடினம்; எழுச்சியை வார்த்தையில் காட்டுபவன் சாதாரண மனிதன். சாதித்துக் காட்டுபவன்தான் சாதனை மனிதன்” என்றார் இல.செ. கந்தசாமி. அதோடு, ”இதுவரையில் எனது கேள்விக்கு எவனும் எதிர் கேள்வியைப் பதிலாகச் சொல்லவில்லை, நீதான் கேட்டிருக்கிறாய். நீ சாதிப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஏனென்றால் உனக்குள் இருக்கும் அக்னி, பற்றி எரிவதை நான் உணர்கிறேன்” என்றார்.

நாம் சாதிப்பதற்கு, நாம் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைவிட மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே முக்கியமானது என்று மனோதத்துவ அறிஞர்கள் குறிப்பிடுவது உண்மைதான் என்பதை நான் உணர்ந்து வருகிறேன். விளையும் பயிர்மீது விவசாயி வைத்திருக்கும் நம்பிக்கையும், வளரும் மாணவர்கள்மீது ஆசிரியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் என்றுமே வீண்போவதில்லை. ஆகவே, யாரையும், ”நீ எல்லாம் எங்கே உருப்படப் போகிறாய்” என்று ஆசிரியர்கள் எப்பொழுதும் சொல்லக்கூடாது. ”முயற்சித்தால், தொடர்ந்து உழைத்தால் உன்னாலும் சாதிக்க முடியும்” என்ற நம்பிக்கையை வளர்ப்பவர்களே சிறந்த ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்கள்தான் என்னைச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கி இருக்கிறார்கள்.

இல.செ.கந்தசாமி அவர்கள் என்மீது அன்று வைத்த நம்பிக்கைதான் எனக்கு இன்றும் தன்னம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆம்! அன்றுதான் அக்னிக் குஞ்சு ஒன்று எனது நெஞ்சுக்குள் நுழைந்தது. அதுதான் இன்றுவரை என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது.

விழாவின் நிகழ்ச்சி முடிந்ததும் எல்லோரும் கலைந்து சென்றார்கள். எல்லோரும் சென்றபிறகு கடைசியாகத்தான் அறையை விட்டு நான் வெளியே வந்தேன். அறைக்கு வெளியில் டாக்டர். இல.செ.கந்தசாமி அவர்கள் என்னை எதிர் பார்த்துக் காத்திருந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் எனக்குள் பயம் பரவத் தொடங்கியது.

அவருடன் எங்கள் துறையின் தலைவர் டாக்டர் கே.எஸ்.பெருமாள் அவர்களும் நின்று கொண்டிருந்தார். இருவரைப் பார்த்ததும் எனது கால்கள் நடுங்கின. முகம் வியர்க்கத் தொடங்கியது. அவ்வளவு பயம் அப்போது. இப்பொழுது நினைத்தாலும எனக்கே சிரிப்பாகத் தோன்றுகிறது.

எதற்கும் நாம் அச்சப்படத் தேவையில்லை. தெரிந்ததைச் சொல்வதும், தெரியாததை தெரிந்து கொள்வதற்கும் நாம் அச்சப்படத் தேவையில்லை என்பதைப் பிறகுதான் நான் உணர்ந்து கொண்டேன்.

மாணவர்களின் கூட்டத்தோடு கூட்டமாக நுழைந்து அவர்களைக் கடந்து சென்றுவிட முயன்றேன். ஆனால், அவர் என்னை விடுவதாக இல்லை. ”தம்பி இங்கே வா, உனக்காகத்தான் நான் இங்கே நிற்கிறேன்” என்றார் இல.செ.கந்தசாமி. அச்சத்தோடு அவர்களின் அருகில் சென்றவன், ”ஏதாவது நான் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்றேன். நாங்கள் மூவரும் தான் இருந்தோம்.

”அப்படி நீ எதுவும் தவறுதலாகப் பேசி விடவில்லை. பயப்படாதே” என்று எனது தோளில் தட்டிக் கொடுத்தார். என்றாலும் எனக்கு பயமாகத் தான்இருந்தது. எனது துறைத்தலைவர் வேறு என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். நான் அப்பொழுது மவுனமாகவே தலை குனிந்தவாறு நின்றுகொண்டிருந்தேன்.

”நீ எங்கிருந்து வருகிறாய்?” என்றார் பேராசிரியர் பெருமாள். ”கந்தேகவுண்டன் சாவடியில் இருந்து வருகிறேன் சார்”. ”உனது பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்?” ”விவசாயம் செய்கிறார்கள்”. ”ஓ! விவசாயியின் மகனா நீ” என்றார். உடனே, ”நன்றாகப் படித்து முன்னேறு” என்று சொன்னார், பேராசிரியர் இல.செ. கந்தசாமி. ”சரி சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து எனது வகுப்பறைக்குச் சென்றுவிட்டேன். என்றாலும் அந்த நொடிகளில் என் இதயம் எல்லை மீறித் துடித்தது. உடல் முழுக்க வியர்த்தது. கைகால்கள் நடுங்கிக் கொண்டுதான் இருந்தன என்றாலும் உடல்முழுக்க இலேசாக மின்சாரம் பாய்ந்ததைப் போல ஓர் உணர்வு.

தகுதியான இடத்தில் உரசுகின்றபோதுதான் உள்ளிருக்கும் நெருப்பை உமிழ்கிறது தீக்குச்சி. சூரியனின் சுடரொளி படும்போதுதான் மவுனமாக இருந்த தாமரை மொட்டு அவிழ்கிறது. அதுபோல தகுதியான மனிதர்களைச் சந்திக்கும்போதுதான் நமது மனம் மலர்கின்றது. பின்னர்தான் நம்மை நாமே உணரத் தொடங்குகிறோம். நமக்குள் விதையாகக் கிடந்த திறமைகள் விழிக்கத் தொடங்குகின்றன. உறக்கம் கலைந்து நாம் உழைக்கத் தொடங்குகிறோம் என்பதை மெய்ப் பிப்பதாக அந்த நொடிகள் ஓடிக்கொண்டிருந்தன.

அந்தக் காலகட்டத்தில் எனக்குள் தாழ்வு மனப்பான்மையும் அச்சமும் அஸ்திவாரம் போட்டு குடியிருந்து கொண்டிருந்தன. யாரைப் பார்த்தாலும் நான் பயந்துவிடுவேன். எதிரில் யாராவது வந்தால் குனிந்ததலை நிமிராது அவர்களைக் கடந்து வேகமாகச் சென்றுவிடுவேன். இதுதான் எனது சுபாவம்.

இது உண்மைதானா? என்ற ஆச்சரியம் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்குந்தான் ஏற்படுகின்றது. எல்லாச் சிலைகளும் பலநாட்கள் கல்லாகக் கிடந்திருக்கின்றன.
எல்லா விருட்சங்களும் பல நாட்கள் விதைகளாகத்தான் இருந்திருக்கின்றன. எல்லா விடியல்களும் இரவைக் கடந்து பின்னர்தான் பிறந்திருக்கின்றன. விடியலில் பிறந்தவனுக்கு இரவைப் பார்த்ததும் பயம்வரும். ஆனால் இரவிலே பிறந்து இருளைக் கடந்து எழுந்தவனுக்கு எதைப் பார்த்தாலும துணிவுதான் வரும். அச்சம் அவனைப் பார்த்து அச்சப்படும்.

கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. தாழ்வு மனப் பான்மை இருக்கின்றதே எனத் தலைகுனியத் தேவையில்லை. என்னாலேயே என்னை மாற்றிக் கொண்டு உயர்ந்து வருகின்றபோது உங்களால் ஏன் முடியாது. முயன்று பாருங்கள்.

முற்றுப்புள்ளிகளை முயற்சிப்புள்ளி களாக்கினால் நீங்களே ஒரு முக்கியப்புள்ளி ஆவீர்கள். எனக்கு ஒன்றும் தெரியாது. மற்றவர்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றபோது நமக்கு தாழ்வு மனப்பான்மை (ஐசஊஉதஐஞதஐபவ இஞஙடகஉல) உண்டாகிறது. நமக்குத்தான் எல்லாம் தெரியும் அடுத்தவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கும்போது நமக்கு உயர்வு மனப் பான்மை (நமடஉதஐஞதஐபவ இஞஙடகஉல) ஏற்படுகின்றது. இந்த இரண்டு வகையான மனப் பான்மையும் நமது முன்னேற்றத்திற்கு தடைக்கற்களாகவே இருக்கின்றன. ஆகவே, சமநோக்கு மனநிலைதான் (ஞடஉச ஙஐசஈஉஈசஉநந) சிறந்ததாகும்.

ஏனென்றால் எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை! எதுவுமே தெரியாதவர் யாருமில்லை.
ஆகவே, உங்களுக்கு தெரிந்த வற்றைக் கொண்டு முயலுங்கள். முன்னேறுங்கள். மயிலுக்கு அழகாக ஆடத் தெரியும். குயிலுக்கு இனிமையாகப் பாடத் தெரியும். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புத் திறமை இருக்கும். ஆகவே நமக்குள் இருக்கும் சிறப்புத் திறமையைக் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டுமே தவிர, இல்லாதது குறித்து கவலைப்படக்கூடாது.

அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் சில சிறப்புத் திறமைகள் இருக்கும் என்பதை உணர்ந்து அவர்களையும் மதிக்கவேண்டும். அவ்வாறாகத் தான் நமது மனநிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை என் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், அப்பொழுது இதுவெல்லாம் எனக்குத் தெரியாது. திசை தெரியாத ஒரு கிராமத்து மாணவன் எப்படி இருப்பானோ, அப்படித்தான் நான் அன்று இருந்தேன்.
பேராசிரியர் இல.செ. கந்தசாமியின் மின்னல் வார்த்தைகள் எனக்குள் உஷ்ணத்தை உருவாக்கி இருந்தது. ”சோம்பேறியாக சுற்றித் திரிவது உனக்கு அவமானமாக இல்லை? காதலாவது கத்திரிக் காயாவது? பெற்றோர்களின் கனவுகளைத் தகர்த்து விடாதே” என்று அவர் மேடையில் பேசும்போது தூவிய அக்னிச் சொற்கள் எனக்குள் திரும்பத் திரும்ப சூடுபோட்டுக் கொண்டே இருந்தன.

அதனால் வேறு எதைப் பற்றியும் என்னால் நினைக்கக்கூட முடியவில்லை. அவ்வார்த்தைகளே பல்கிப் பெருகி மனம் முழுக்க உஷ்ண உணர்வுகளாக ஆக்கிரமித்து இருந்தது.

அன்று இரவு முழுக்க நான் என்ன செய்து கொண்டு இருந்தேன். தெரியுமா?
……. திசைகள் விரியும்.

  1. sekar kovai

    //அவமானங்கள் நம்மைச் சிதைத்து விடக் கூடாது. சீராகச் செதுக்கவேண்டும். யாராவது நம்மை அவமானப்படுத்தினால் நாம் வார்த்தைகளால் அவர்களுக்குப் பதில் சொல்லக் கூடாது. வாழ்ந்து காட்டவேண்டும். அவமானங்களையே எழுச்சியாய் உருவாக்கும் உந்து சக்தியாய் மாற்றிப் பழக வேண்டும்.//

    supper , nan en valvel kadai pedekum mugeymana vesayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *