இரண்டு மகுடங்கள் இவருக்கு

மிகவும் ரசனைகளைத் தான் கொண்டிருக்கும் காரணத்தால் அந்த ரசனையின் உயரத்திற்கு ஈடுதரும் நிகழ்ச்சிகளை சமூகம் முழுமைக்கும் சம்ப்பிப்பதுதான் இவரது கலை இலக்கியப் பணிகளின் அடித்தளம்

இந்தியத் தொழில் வர்த்தக சங்கத்தின் கோவைக்கிளை தலைவராய் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.ம.கிருஷ்ணன். அதே நேரம் மலேசிய கம்பன் கழகம் வழங்கும் சடையப்ப வள்ளல் விருதும் இவருக்கு அக்டோபரில் வழங்கப்படுகிறது.

பன்னாட்டு அரிமா சங்கம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, சுழற்சங்கம் வழங்கிய பன்முகப் பெருமாண்பு விருது ((ஊர்ழ் ற்ட்ங் ள்ட்ஹந்ங் ர்ச் ஏர்ய்ர்ன்ழ் அஜ்ஹழ்க்)) துறைமாண்புச் செம்மல் விருது (யர்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் உஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ஸ்ரீங் அஜ்ஹழ்க்) ஜேசீஸ் இயக்கம் வழங்கிய தலைசிறந்த தொழில் மேம்பாட்டு களுக்கான தேசியவிருது, சென்னை வேலாண்மை சங்கம் வழங்கிய தொழில் மைசூர்பா – கோவையின் சுவை விருது, நியூயார்க்கில் உள்ள இந்திய – அமெரிக்க தொழில் கூட்டமைப்பு வழங்கிய தலைசிறந்த தொழிலதிபருக்கான விருது, வடஅமெரிக்கா தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கிய ஃபெட்னா விருது ஆகியவை இவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.

1948ல், திரு.ம.கிருஷ்ணன் அவர்களின் தந்தை அமரர் என்.கே.மகாதேவ அய்யர் அவர்களால் சின்னஞ்சிறிய கடையாக நிறுவப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இன்று அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஐக்கிய நாடுகள் உட்பட 75 இடங்களில் இன்சுவைக் கிளைகளுடன் இயங்கி வருகின்றன.

சர்வதேச அங்கீகாரமும் அபிமானமும் பெறும் விதமாய் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தை திரு.ம.கிருஷ்ணன், அவரது சகோதரர் திரு.ம.முரளி ஆகியோர் விரிவு படுத்தியுள்ளனர். தங்கள் தயாரிப்புகள் குருவாயூரப்பனின் பிரசாதம் என்பதில் நிலையான நம்பிக்கை இவர்களுக்கு!

வணிகவியல் பட்டதாரியான திரு.ம. கிருஷ்ணன், தொழிலையும், தொண்டையும் இரண்டு கண்களாய்க் கருதுபவர். புரவலர்கள் மத்தியில் இவர் தனிவிதம். கலை இலக்கிய அமைப்புகள், தங்கள் நிகழ்ச்சிகளுக்கு நிதிக் கொடை கேட்டு புரவலர்களை அணுகுவது வழக்கம்.

ஆனால், திரு.கிருஷ்ணன், சமூகத்திற்கு தான் அர்ப்பணிக்க விரும்பும் கலை இலக்கிய நிகழ்ச்சிகளைத் தானே திட்டமிட்டு, அதனை நடத்துகிற பொறுப்பை கலை இலக்கிய அமைப்புகளிடம் ஒப்படைத்து அத்தனை ஏற்பாடுகளையும் தானே செய்தும் தருகிற தன்மை உடையவர்.

அழைப்பிதழில் அறிவித்த நேரத்திலிருந்து விநாடிகூட தாமதிக்காமல் விழாக்கள் துவங்குகிற மரபை கோவையில் உருவாக்கிய பெருமை திரு.கிருஷ்ணனுக்கு உண்டு. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்துகிற நிகழ்ச்சியென்றால், பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அரங்கம் நிறைந்து விடுவதும் தொடர்ந்து நிகழ்கிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் “குறையொன்றுமில்லை” என்னும் தலைப்பில் தொடர் ஆன்மீக நிகழ்ச்சிகளையும், “எப்படிப் பாடினரோ” என்ற தலைப்பில் மரபிசை நிகழ்ச்சிகளையும், “வல்லமை தாராயோ” என்ற தலைப்பில் இளைஞர்கள் மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும், “நலந்தானா” என்ற தலைப்பில் நலவாழ்வு நிகழ்ச்சிகளையும் பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

மூத்த அறிஞர்களையும், சாதனையாளர் களையும், பாராட்டும் விதமாக விருதுகள் நிறுவி வழங்கி வருகிறார், திரு.ம.கிருஷ்ணன். இவர் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ் விவரங்கள் இவரே வடிவமைப்பார். “விருது பெறுபவர்” என்று அழைப்பிதழ் அச்சிடும் வழக்கத்தை மாற்றி “விருது ஏற்பவர்” என்று அச்சிடுவதும் இவர் தொடங்கி வைத்ததுதான்.

கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, பழனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி நடத்துகிறார்.

மிகவுயர்ந்த ரசனைகளைத் தான் கொண்டிருக்கும் காரணத்தால் அந்த ரசனையின் உயரத்திற்கு ஈடுதரும் நிகழ்ச்சிகளை சமூகம் முழுமைக்கும் சமர்ப்பிப்பதுதான் இவரது கலை இலக்கியப் பணிகளின் அடித்தளம்.

வெளியே தெரியாத அறப்பணிகளை பயனாளிகளுக்கு தெரியாத வண்ணம் செய்வது இவரது பணி. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 31ம் நாள் பின்னிரவில், இவரது நிறுவனத்தின் சரக்கு வாகனங்கள் புறப்படும். ஒவ்வொரு வாகனத்திலும் ஏராளமான கம்பளிகள் இருக்கும். நடுங்கும் குளிரில் கையது கொண்டு மெய்யது போர்த்தி உறங்கும் நடைபாதை வசிப்பாளர்களைக் கண்டால், இவரது அலுவலர்கள் இறங்கிச் சென்று, கம்பளியைப் போர்த்திவிட்டு வந்துவிடுவார்கள். காலை எழுந்த பிறகே பயளாளிக்கு, இந்த பேகனின் பணி புலப்படும்.

கோவையில் இலக்கியவாதிகள் பலர்கூடி, கலந்துரையாடி, விருந்துண்டு திரும்பும் விதமாய் ஒவ்வொரு மாதமும் “ஊஞ்சல்” என்னும் இலக்கிய சந்திப்பையும் நடத்தி வருகிறார்.

இறைவனுக்கு செய்யும் எதுவும் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம் என்பது இவரது பார்வை.

ஒரு சம்பவம். நெருங்கிய நண்பர் ஒருவரை திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். உண்டியலில் போட ஒரு இலட்சம் ரூபாய்களை நண்பர் எடுத்து வந்தார். “இந்தப் பணம் ஆலயத்துக்குத்தான் சேர வேண்டும் என் தீர்மானித்து விட்டீர்களா?” என் கேட்டார் திரு.கிருஷ்ணன், நண்பர் ஆமாம் என்றார், உடனே அந்த ஒரு இலட்சம் ரூபாயை வாங்கிய திரு.கிருஷ்ணன், அந்தத் தொகையில், ஐந்தாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டுக்கள் எவ்வளவு வருமோ அவ்வளவு வாங்கினார்.

தர்ம தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மத்தியில் அவற்றை விநியோகம் செய்தார். எதிர்பாராத வாய்ப்பில் மலர்ந்த அந்த எளிய மனிதர்களின் முகங்களில் திருமலைவாசன் தரிசனம் தந்தார்.
பரிவில் கொடையப்பராய், பண்பாட்டில் நிறையப்பராய், கலை இலக்கியக் காதலில் சிறந்து விளங்கும் திரு.ம.கிருஷ்ணன் அவர்களுக்கு சடையப்பர் விருது சாலப் பொருத்தம்.

எதிலும் கோவையின் முத்திரை பதிப்போம் என்று தொழிலுலகில் ஒரு புதிய முழக்கத்துடன் புறப்பட்டுள்ள திரு.ம.கிருஷ்ணன் அவர்கள் சடையப்ப வள்ளல் விருது பெறும் இந்த வேளையில், நமது நம்பிக்கை மாத இதழ் தன் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *