மீட்பராகுங்கள்

கவுன்சிலிங் கலையை கற்றுத்தரும் தொடர்

குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்குவது எப்படி?

“ஸ்கூலில் டிராமா. என் பையனுக்கு, தாத்தா வேஷம். நாங்கள் வேஷ்டி சட்டை எல்லாம் கொடுத்து, ‘போடு’ என்றால், போடமாட்டேன் என்கிறான். ‘பேண்ட் சர்ட்தான் போடுவேன்’ என்று ஒரே அடம். காரணம் என் அப்பா பேண்ட் சர்ட்தான் போடுவார்.

என்ன சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் அவன் பள்ளி ஆசிரியர் கூப்பிட்டு பத்து நிமிடம் பேசினார். சட்டென்று போட்டுக்கொண்டு வந்துவிட்டான். ஏன் இப்படி? என்றார் என் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒருவர்.

பெற்றோர்கள் சொன்னால் ஏன் குழந்தைகள் கேட்பதில்லை? இப்படி இருக்கையில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். அதற்கு இந்த குட்டிப்பையன் விஷயத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
“உன்னுடைய வாட்டர் பாட்டில் சிறிய சைஸ் கிரிக்கெட் பேட் போல இருக்கிறது. அதை எடுத்து மேடையில் காட்டினால் எல்லோரும் அதை வாட்டர் பாட்டில் என்று புரிந்து கொள்ள மாட்டார்கள். இல்லையா? எல்லோரும் பயன்படுத்துகிற வடிவில் இருக்கிற ஒரு வாட்டர் பாட்டிலை காட்டினால், சட்டென்று புரிந்து கொள்வார்கள். நான் சொல்வது சரியா? தவறா?

அதுபோல எல்லோருக்கும் தெரிந்த தாத்தா போல வேடமிட்டால்தான் நம் வேடத்தை சட்டென்று புரிந்து கொள்வார்கள். காந்தித்தாத்தான்னு நாம சொல்றோமே அவர் என்ன டிரஸ் போட்டிருப்பார்? இப்போது நீயே சொல்! தாத்தா வேஷம் போட்டால் நாம் என்ன ஆடை அணிய வேண்டுமென்று இதுதான் குழந்தைகளிடம் பேசும்முறை. இப்படித்தான் அந்த ஆசிரியரும் பேசியிருக்க வேண்டும்.

கணவன் மனைவி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தாத்தா பாட்டிகள் என மற்ற எல்லா பருவங்களில் இருப்பவர்களையும்விட குழந்தைகளுக்கு கவுன்சிலிங் செய்வது தான் சுலபம்.

பெற்றோரின் குரலில், ‘நான் சொன்னதை செய்’ என்கிற கண்டிப்பு எப்போதும் இருக்கும்.

மேலும் எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பதால், ‘நீ சொன்ன நான் கேட்க மாட்டேன் . உனக்கு வேறு என்ன வேலை’ என்ற எண்ணத்தை நாம் ஏற்படுத்தி விடுகிறோம்.

எல்லா பெற்றோர்களின் வருத்தமுமே, நாங்கள் சொல்வதையே கேட்பதில்லை என்பதுதான். எல்லா குழந்தைகளின் வருத்தமே எப்போதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான்.

ஸ்விட்ச் போட்டால் கிரைண்டர் ஒடும் என்பதுமாதிரி வாயை திறந்தால் அம்மா எதாவது அட்வைஸ் சொல்லிக்கொண்டிருப்பார் என்று ஆகிவிடக்கூடாது.

உணவு அவசியம்தான். அதற்காக நாள் முழுவதும் உணவு கொடுத்துக்கொண்டிருந்தால் சாப்பாடே வெறுத்துவிடும். பெற்றோர்களில் வார்த்தைகளுக்கு காது கொடுக்காததற்கு காரணம் இதுதான்.

எனவே எப்போதும் சொல்லுவதை நிறுத்துங்கள். சொல்வதைக் கேட்பார்கள்.

மேலும், நாம் என்ன செய்தாலும் அதில் ஏதாவது குறைசொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்றுதான் குழந்தைகள் கருதுகின்றன. காரணம் நாம் அவர்களை பாராட்டுவதே இல்லை.

பெற்றோர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, என் கவுன்சிலிங் ரூமிற்கு வெளியே காத்திருக்கும் சின்னக்குழந்தைகள் கதவின் அருகிலேயே சுற்றிக்கொண்டிருப்பார்கள். நிச்சயம் நம் அப்பா அம்மா நம்மை பற்றி குறைதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைகளிடமும் அவர்களின் குறையைப்பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். மற்றவர்களிடம் பேசும்போதும், குழந்தைகளின் குறையைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.

இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் போதும் குழந்தைகளை எளிதாக கவர்ந்து விடலாம்.

பெற்றோர்களின் வார்த்தைகள் (கவுன்சிலிங்) எடுபடாததற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையே முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாமல் நாமே முன்முடிவு செய்து உடன் பேசி விடுவோம்.

அதனால், ‘நம்மளை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க’ என்ற உணர்வு குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது.
இதனால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு ஒரு வழிப்பாதையாகி விடுகிறது.

என்னிடம் பல பெற்றோர்கள், கவலையோடு “எங்களைப்பற்றி என்ன நினைக்கிறான்னு கேட்டு சொல்லுங்க சார்” என்கிறார்கள். அவர்கள் குழந்தை அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதைக்கூட சொல்ல முடியாத நிலையில்தான் இருக்கிறது

தங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து சொல்ல ஆள் தேவைப்படுகிறது என்றால் பெற்றோர்களின் பாதை திறந்தே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் பாதை அடைபட்டுக் கிடக்கிறது என்று அர்த்தம்.
என்னுடைய டிவி அதில் என்ன சேனல் ஓட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எனக்குத்தான் உண்டு என்பது போல என் குழந்தை. அது இப்போது டிவி பார்க்க வேண்டுமா? இல்லையா? என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் நாம் நடந்து கொள்கிறோம். இதனால் குழந்தைகளின் பாதை மெல்ல அடைபட்டு விடுகிறது.

குழந்தைகளை பார்க்கிறபொழுதெல்லாம் எனக்கு ஒரு கேள்வி தோன்றும். குழந்தைகளாக இருக்கிறபோது அவர்கள் முகத்தில் இருக்கிற தெய்வீக அழகு, வளர வளர காணாமல் போய்விடுகிறதே. அதை தொலைத்தது யார் ? பெற்றோரா ? அல்லது குழந்தைகளேவா? அதை நாம் மீட்டெடுக்க முடியுமா ?
இந்தக்கேள்விக்கான பதிலில்தான் கவுன்சிலிங் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் விடை அடங்கியிருக்கிறது. அதை அடுத்த இதழில் பார்ப்போம்.

கவுன்சிலிங் கார்னர்

லியாணசுந்தரத்திற்கு பிறவியிலேயே கீச்சுக்குரல். பேசினால் பெண் குரலாக இருக்கும். இந்த ஒரு காரணம் போதாதா? சக மாணவர்கள் அவரை கேலி செய்ய? எந்நேரமும் மற்றவர்கள் கேலி செய்ய கலியாணசுந்தரத்திற்கு பேசவே பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்தக்குரலோடு வாழவே பிடிக்கவில்லை.

தாழ்வு மனப்பான்மையால் தற்கொலை எண்ணம் தலையெடுக்க ஆரம்பித்தது. அதிகரித்த குழப்பத்தால் அப்போது நம்பிக்கை தரும் கட்டுரைகளை எழுதிவந்த கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியர் தமிழ் வாணனை போய் சந்தித்தான். தன் நிலையைச் சொல்லி அழுதான்.

கலியாணசுந்தரத்தின் கைகளை ஆதரவாகப் பற்றிய தமிழ்வாணன் அவரை திருவல்லிக்கேணி கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.
மனதுக்கு இதம் தரும் அந்தச்சூழலில், கலியாணசுந்தரத்தை அன்பாக அணைத்துக்கொண்டு சொன்னார்.
“தம்பி! ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது அவன் எப்படி பேசுகிறான் என்பதைப் பொறுத்தல்ல. அவனைப்பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும்.” எதைக் குறை என்று நினைக்கிறாயோ அதையே நிறையாக நினைத்துக்கொள்ளேன். என்னால் மெல்லிய குரலில்தான் பேசமுடிகிறது என்கிறாய்.

ஆனால், தாங்கள் விரும்பியதை பேசவே முடியாமல் லட்சக் கணக்கான பேர் இந்த உலகில் இருக்கிறார்களே.
மனிதன் குறைவாக பேசவேண்டும். நிறைவாக செய்ய வேண்டும். நீ அதிகம் பேசாதிருக்கவே இந்தக்குரல். எனவே உன் பேச்சு பற்றி உனக்கு கலக்கம் கூடாது.”

தமிழ்வாணன் கூறிய அறிவுரை கலியாணசுந்தரத்திற்கு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுச்சியை ஏற்படுத்தியது.

பிறகு தன் வாழ்வில் நூலகராக பணியாற்றி தான் சம்பாதித்த பணம் , ஓய்வூதியம், பரம்பரை சொத்து என அனைத்தையும் இயலாத குழந்தைகளின் கல்விக்காகச் செலவிட்டு அவர் இன்று பாலம் கலியாண சுந்தரமாக உயர்ந்து நிற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *