– அனுராஜன்
ஏன் எல்லா குரங்குகளும் மனிதன் ஆகவில்லை
குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்கிறது பரிணாம வளர்ச்சி தத்துவம். அப்படியெனில் ஏன் எல்லா குரங்குகளும் மனிதனாக பரிணமிக்கவில்லை? ஏன் பல குரங்குகள் குரங்குகளாகவே தேங்கிவிட்டன ?
எல்லா மனிதர்களும் வெற்றிபெறத்தான் பிறந்திருக்கிறார்கள் என்றால், ஏன் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை என்பதை யோசித்த போதுதான் மேற்கண்ட கேள்வி எனக்குள் எழுந்தது.
இந்த இரண்டுகேள்விக்குமான விடையை இந்தச் சம்பவமே விளக்குகிறது.
காட்டுக்குள் சிங்கம், மானை துரத்திக் கொண்டிருந்தது. அங்கே என்ன .. ஓட்டப்பந்தயமா நடக்கப்போகிறது. நடந்தது உயிர்வேட்டை.
இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் என்ன நினைத்தேன், ‘நிச்சயம் சிங்கம்தான் ஜெயிக்கும். ஏனெனில் காட்டிலேயே வலிமையான மிருகம் சிங்கம். காட்டிற்கே ராஜா சிங்கம். அதனால் சிங்கம்தான் ஜெயிக்கும்’ என்று நினைத்தேன்.
கடைசியில் மான் ஜெயித்துவிட்டது அதாவது தப்பித்துவிட்டது. ஆச்சரியம் தாங்காமல் மானைக் கேட்டேன், “ காட்டிலேயே வலிமையான மிருகம் சிங்கம்தானே, உன்னால் எப்படி அதை ஜெயிக்க முடிந்தது?”
அதற்கு மான் சொன்னது, “வலிமையின் அடிப்படையில், யார் முதலில் இருக்கிறார் என்றால் சிங்கம்தான். ஆனால் தேவையின் அடிப்படையில், யார் முதலில் இருக்கிறார் என்றால் நான்தான். சிங்கம் ஒரு வேளை உணவுக்காக ஓடியது. ஆனால் நான் என் ஒட்டுமொத்த வாழ்நாளையும் காப்பாற்றிக் கொள்ள ஓடினேன்.”
மான் சொன்னது உண்மைதானே. மனிதர்களிலும் சிலர், அந்த வேளை உணவுக்காக மட்டுமே ஓடுகிறார்கள். சிலரோ தங்கள் ஒட்டு மொத்த வாழ்நாளையும் சிறப்பாக்கிக் கொள்வதற்காக ஓடுகிறார்கள்.
கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நண்பர்கள் சிலரை பயிற்சி வகுப்பொன்றில் சந்தித்தேன். அவர்களில் சிலர் அன்றைய வருமானத்தை அன்று மாலையிலே ஒரு கட்டிங்கில் காலி செய்துவிடுகிறார்கள். அவர்கள் அன்றைய நாள் உணவுக்காக மட்டும் ஓடுகிறவர்கள்.
அவர்களிலேயே இன்னும் சிலர் மாலை நேரங்களில் கூடுதல் வேலை செய்து தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைத்து உயர்வான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சிங்கம் மாதிரி ஓடுகிறவர்கள்.
நீங்கள் யோசித்துப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சிங்கம் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை மான் மாதிரி ஓடுகிறீர்களா?
முதல் இரண்டு கேள்விகளுக்கும் இப்போது பதில் கிடைத்ததா?
உணவைத்தாண்டி உயர நினைத்ததால்தான், குரங்குகளில் சில தங்கள் முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தத் துவங்கின. உயரத்தில் ஏறின. தாவின. நிமிர்ந்தன. வளர்ந்தன. மனிதனாக பரிணமித்தன.
விலங்குகளுக்கு உணவென்பதை தாண்டி பெரிதாக இலக்குகள் எதுவும் இல்லை. அப்படி சில மனிதர்களும் இருந்துவிடுகிறார்கள் அதனால் தான் அவர்கள் வளர்வதே இல்லை.
k.ramesh
very very nice.
always welcome that type improvement story.
thank you,
k.ramesh