அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் முத்தையா

வாரன் பஃபெட்

”என்ன! இன்னைக்கு இந்த கம்பெனியோட ஷேர் பத்து சதவிகிதம் பளீர்னு எகிறிடுச்சே! ‘அட ஆமாம்பா! நம்ம வாரன் பஃபெட் அங்கே பங்கு வாங்கியிருக்காரு! அதான்!”

1970களில், அமெரிக்காவிலுள்ள டீக் கடைகளில் டோநட் கடித்தபடி இப்படி சிலர் பேசியிருப்பார்கள். அந்த அளவுக்கு, பங்குச் சந்தைகளின் போக்கைத் துல்லியமாக கணித்தவர் வாரன் பஃபெட். அவர் வாங்கினால் விலை எகிறி விடும் என்ற அளவுக்கு பங்குச்சந்தையின் பந்தயக் குதிரையாய், முன்னணியில் மூக்கை நீக்கிக் கொண்டிருந்தவர் அவர்.

தன்னுடைய பாட்டனாரின் மளிகைக் கடையில் இருந்து ஆறு கிரேட் கோககோலா வாங்கி, ஒரு பாட்டிலுக்கு 5 சென்ட் லாபம் பார்த்த வேளையில் வாரன் பஃபெட்டின் வயது ஆறு! சக வயதுப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கண்ணாமூச்சி ரே ரே என்று பாடி விளையாடிக் கொண்டிருந்த போதே பணம் பண்ண ஆரம்பித்தார் வாரன் பஃபெட். அவருடைய தந்தையும் பங்குச் சந்தை தரகர் என்பதால் பிஞ்சு வயதிலேயே பரம்பரைத் தொழிலில் பரமபதம் ஆடத் தொடங்கியது ஆச்சரியமில்லைதான். ஆனாலும் அந்த வயதுக்கு அது கொஞ்சம் அதிகம்தான்.

பதினோரு வயதில், தனக்கு மட்டுமின்றி தன் சகோதரிக்கும் சேர்த்து 38 டாலர் விலையில் மூன்று பங்குகளை வாங்கின வாரன் பஃபெட், அதன் மதிப்பு 27 டாலர்களுக்கு சரிந்ததும் அதிர்ந்து போனதென்னவோ உண்மை தான். அதன் மதிப்பு மறுபடியும் 40 டாலர்களுக்கு வந்ததும் அவசரம் அவசரமாய் விற்றுவிட்டார். கொஞ்ச காலங்களிலேயே அதன் மதிப்பு 200 டாலர்களுக்கு எகிறியதும், பகீர் என்றது பஃபெட்டுக்கு! பொறுமையின் பெருமையை அவர் பாடம் படித்தது அப்போதுதான்!!

பள்ளிப்படிப்பை முடித்தபோது வாரன் பஃபெட்டின் சேமிப்பில் இருந்த சொந்த சம்பாத்தியம், 5000 டாலர்கள். இன்றைய தேதியில் அது 50000 டாலர்களுக்குச் சமம்!! அவரது வணிக அறிவை வியந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படிக்க வைக்க விண்ணப்பித்தார், அவருடைய அப்பா ஹோவர்டு. ஹோவர்டின் கனவை ஹார்வர்டு ஏற்கவில்லை. பல்கலைக்கழகம் சொன்ன காரணம், ”வாரன் பஃபெட் சின்னப் பையன்! வயசு பத்தாது!” என்பது தான். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லாததால் வாரன் வருத்தப்படவில்லை.

அந்தக் காலகட்டத்தில்தான் பங்குச் சந்தையின் பீஷ்மர் பென் கிரஹாம் பட்டையைக் கிளப்பத் தொடங்கியிருந்தார். நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கையை ஊன்றிப்படித்து, நிறுவனத்தின் வளர்ச்சியைக் கணித்து பங்குகளை வளைத்துப் போடுவதில் பென் கிரஹாம் பெரிய கை!!

அவர் எழுதிய ”செக்யூரிட்டி அனாலிஸிஸ்” மற்றும், ”இன்டெலிஜெண்ட் இன்வெஸ்டர்” ஆகிய புத்தகங்களைப் படித்து பென் கிரஹாம் என்ற துரோணருக்கு ஏறக்குறைய ஏகலைவன் போலவே ஆகியிருந்தார் வாரன் பஃபெட். அப்போது அவருக்கு வயது 21.

நம்ம ஊர் மணிமேகலைப் பிரசுரத்தின் ”பிரபலமானவர்கள் விலாசங்கள்” புத்தகத்துக்குப் பெரியப்பா, அமெரிக்காவின் ரட்ர் ண்ள் ரட்ர் புத்தகம். அதன் பக்கங்களுக்குள் புகுந்து புறப்பட்டு, பென் கிரஹாம், வெளியே பெரிதாய்த் தெரியாத ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் தலைவராய் இருப்பதைக் கண்டு பிடித்தார் வாரன் பஃபெட். உடனே வாஷிங்டனுக்கு ரயிலேறினார் அவர். வாஷிங்டனில் போய் இறங்கியதும் அந்தக் கட்டிடத்தின் கதவுகள் உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தன. வாரன் பஃபெட் தட்டிய தட்டலில், ஆறாவது மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரேயொரு மனிதர் அலறியடித்துக் கொண்டு வந்து கதவைத் திறந்தார். அவர் பென் கிரஹாம் இல்லை. ஆனாலும், அவரிடம் அந்த நிறுவனத்தைப் பற்றி விதம்விதமான கேள்விகளைக் கேட்டு வண்டு போல் குடைந்தெடுத்தார் வாரன் பஃபெட். அப்படி குடையப்பட்ட அந்த மனிதர்தான், எஉஐஇஞ காப்பீட்டு நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் வாரிமர் டேவிட்ஸன். அந்த நிறுவனத்தை, தான் சில ஆண்டுகளுக்குப்பின் விலைக்கு வாங்கப் போகிறோம் என்பதை வாரன் பஃபெட் அப்போது அறிந்திருக்கவில்லை.

பென் கிரஹாமிடம் சம்பளமில்லாமல் வேலை பார்க்க வாரன் பஃபெட் விருப்பம் தெரிவித்தார். ஆர்வமிக்க ஏகலைவனை ஏற்க, அந்த அமெரிக்க துரோணரும் மறுத்துவிட்டார். நம் ஊர் துரோணர் மறுத்த அதே காரணம்தான்…. ஜாதி! தன் நிறுவனத்தில் யூதர்களுக்கே முதலிடம் என்பதில் பென் கிரஹாம் உறுதியாய் இருந்தார்.

மனமுடைந்த வாரன் ஊர்திரும்பி, அப்பாவின் பங்குச் சந்தை தரகு நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினார். ஒரு மனிதன் குழப்பத்தில் இருக்கும்போது தனக்குத்தானே செய்து கொள்கிற விஷயங்களில் கல்யாணமும் ஒன்று என்று நக்கல் பொன்மொழி ஒன்று உண்டு. (இந்தக் கட்டுரையை எழுதும்போது சுடச்சுட உதயமான பொன் மொழியாக்கும்!!)

சுசி தாம்ஸனை காதலித்து 1952 ஏப்ரலில் கைப்பிடித்தார் வாரன் பஃபெட். மாதம் 65 டாலர்கள் வாடகைக்கு, ஒரு வீட்டில் இருவரும் குடியேறினார்கள். சோதனையாக, வாரன் பஃபெட் முதலீடு செய்த பங்குகள் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன.

இந்த நேரத்தில்தான் ஒமாஹா பல்கலைக்கழகத்தில் இரவு நேரங்களில் விரிவுரை யாளராக சேர்ந்திருந்தார் வாரன். சில மாதங்களுக்கு முன்னர் என்றால் இது சாத்தியமே இல்லை என்று சத்தியமே செய்திருப்பார் அவர். மேடையைக் கண்டால் மேலும் கீழும் உதறும் விதமாய்த்தான் வாரன் பஃபெட் இருந்தார். பிரபல சுயமுன்னேற்ற நிபுணர் டேல் கார்னகியின் சுயமுன்னேற்ற வகுப்புகளில் சேர்ந்து பிரமாதமாக தேறியிருந்தார் அவர்.

இந்த நேரத்தில், தன் ஏகலைவனை அர்ச்சுனனாக மாற்றும் எண்ணம் துரோணருக்கு வந்தது. தன்னுடன் சேர்ந்து பணியாற்ற பென் கிரஹாமிடம் இருந்து வாரன் பஃபெட்டுக்கு அழைப்பு வந்தது. வெறும் 9800 டாலர்கள் கையில் வைத்திருந்த வாரன் 1956க்குள் 1,40,000 டாலர்கள் சேர்த்திருந்தார்.

பங்குச் சந்தை குருஷேத்திரத்தில் குருவுக்கும் சீடனுக்கும் கருத்து வேறுபாடுகள் முளைத்தன. துரோணருக்கு எதிராக வாரன் பஃபெட். வில்லெடுக்க வேண்டி வந்தது.
1956 மே மாதம் ஒன்றாம் தேதி, தன்னுடைய அக்கா டோரிஸ், அத்தை சூலின் உட்பட ஏழு பங்குதாரர்களுடன் பஃபெட் அரோசியேட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அழகான மனைவி, அருமையான மூன்று குழந்தைகள். அட்டகாசமான தொழில் என்று வெற்றிக் கொடி கட்டினார் வாரன் பஃபெட். ஐந்தே ஆண்டுகளில் 251% லாபம் கண்டது நிறுவனம். பத்தே ஆண்டுகளில், நிறுவனத்தின் சொத்து மதிப்பில் 1156% அபார வளர்ச்சி!

பெர்க் ஷைர்ஹேத்லே என்ற நிறுவனத்தின் பங்குகளை 49% வாங்கியது வாரன் பஃபெட்டின் அடுத்த அதிரடி. மிக விரைவில் அதன் தலைவரானார் வாரன். இதற்கிடையில், நஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது பென் கிரஹாமின் எஉஐஇஞ. அதன் பங்குகள் வெறும் 2 டாலர்களுக்கு இறங்கி இருந்தன. அதை வாங்கி மறுபடியும் முன்னணி நிறுவனமாய் உயர்த்தினார் வாரன் பஃபெட்.

பெருகிய செல்வத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் அறக்கட்டளைகளையும் ஆரம்பித்தார் அவர். 1986ல் தன் சொந்தத் தேவைக்காக 8,50,000 டாலர்கள் தந்து ஒரு விமானமும் வாங்கினார் அவர்.

ஆறுவயதில் கோககோலா பாட்டில்கள் விற்று சம்பாதித்த வாரன் பஃபெட், இப்போது கோககோலா நிறுவனத்தின் 7% பங்குகளை வைத்திருந்தார்.

பகடையாட்டம் போன்ற பங்குச் சந்தையில் சமயோசிதம், நிதானம், உள்ளுணர்வு, திட்டமிடுதல் போன்ற வித்தியாசக் கலவைகளில் வெற்றி மீது வெற்றி பெற்ற வாரன் பஃபெட்…. நாம் அறிந்து கொள்ள வேண்டிய அதிசய ஆளுமை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *