நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி

கதை வடிவில் விறுவிறுப்பான பிஸினஸ் பாடங்கள்

மனித வளத்தை மேம்படுத்துவது எப்படி?

காலையில் எழுந்திருக்கும்போதே, கமலம் கண்டிஷன் போட்டுவிட்டாள். “’இன்னிக்கு உங்க பொண்ணோட ஸ்கூல்ல வரச்சொல்லியிருக்காங்க. வந்திட்டு, அப்புறம் எங்க வேணும்னாலும் போங்க. சொல்லிட்டேன்.””

“”இப்ப மட்டும் ஏன் உங்க பொண்ணுன்னு சொல்ற.

போனதடவ ஸ்போர்ட்ஸ்ல பர்ஸ்ட் வந்தப்ப, ‘என் பொண்ணுன்னு’ பெருமைப்பட்டுக் கிட்ட””

கமலம் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே மறைந்தாள்.

சதாசிவம் யோசித்துப்பார்த்தார். நன்றாக படித்துக்கொண்டிருந்தவள்தான். வர வர மார்க் ரொம்பவும் குறைந்து பாஸ் செய்வதே அதிசயம் என்றாகி விட்டது. தன் மகள் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்றெல்லாம் சதாசிவத்திற்கு கனவுகள் இல்லை. முடிந்தவரை படித்தால் போதும். படிச்சு என்ன வேலைக்கா போகப் போறா என்பதுதான் அவர் நினைப்பு.

அதனால் அவள் என்ன மார்க் வாங்கினாலும் அவர் எதுவும் கேட்பதில்லை. இப்போது என்னடா என்றால் கேட்பதில்லை என்பதாலோ என்னவோ மார்க் ரொம்பவும் குறைந்துவிட்டது. அதற்காகத்தான் ஸ்கூலில் வரச் சொல்லியிருக்கிறார்கள்.
கம்பீரமான கொண்டை, கண்ணுக்கு மட்டுமல்லாமல் முகத்திற்கே போட்டது போன்ற பெரிய ப்ரேம் கண்ணாடி. முகத்தில் கொஞ்சம் கண்டிப்பு. பிரின்ஸ்பால் என்று முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது.

”உங்க பொண்ணோட மார்க் எல்லாம் பார்த்தீங்களா. கழுதை தேஞ்சு கட்டெறும் பாகிறதுங்கிறது கரெக்டா இருக்கு. 70 மார்க் எடுத்திட்டிருந்தவ, இப்ப அதுல பாதிகூட வாங்கிறதுல்ல.. ஏன் நீங்க அவளை கவனிக்கிறது இல்லையா?”

”பிஸினஸ்னாலே நிறைய பிரச்சனை. அதான் என்னால் முழுமையா கவனம் செலுத்த முடியல.””

”உங்க பிஸினஸ்ல ஏற்கனவே பிரச்சனைகள் இருக்குனு புதுசா வர்ற பிரச்சனைகளை கண்டுக்காம விட்டுடுவீங்களா. உங்க ஒரு பொண்ணுமேல உங்களால் கவனம் எடுக்க முடியலேன்னா, உங்கள்கிட்ட வேலை பார்க்கிற பல பேர்கிட்ட உங்களால எப்படி கவனம் எடுக்க முடியும்?””

சதாசிவம் சங்கடத்தில் நெளிந்தார்.

இதோ பாருங்க சதாசிவம். இந்த உலகத்திலேயே அதிகமாக வீணடிக்கப்படும் வளம், மனித வளம்தான்.”

உலகத்திலேயே அதிகம் உழைக்கும் திறன் உள்ளவர்கள். யார் தெரியுமா? இந்தியர்கள்தான். என்ன ஆச்சரியமா பார்க்கிறீங்க. உண்மைதான். ஒரு அமெரிக்கனை விட, ஒரு ஜப்பானியனை விட இரண்டு மடங்கு உழைக்கும் திறன் கூடுதலாக உள்ளவர்கள் நாமெல்லாம்.”

“இந்த ஆராய்ச்சியை செஞ்சவர்கிட்ட கிண்டலா கேட்டாங்க. ‘உலகிலேயே அதிகம் உழைக்கும் திறன் உள்ளவர்கள் இந்தியர்கள் என்றால், அப்புறம் ஏன் இந்தியா வல்லரசாக வில்லை?’ ஆராய்ச்சியாளர் சொன்னார், ‘உலகிலேயே அதிகம் உழைக்கும் திறன் உள்ளவர்கள் இந்தியர்கள்தான். இதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு ஜப்பானியன் இரண்டு நாள்ல செய்யறதை ஒரு இந்தியன் ஒரு நாள்ல செஞ்சுடுவான். ஒரு அமெரிக்கன் ஒரு நாள்ல செய்றதை இந்தியன் அரை நாள்ல செஞ்சுடுவான். உலகிலேயே அதிகம் உழைக்கும் திறன் உள்ளவர்கள் இந்தியர்கள்தான். ஆனா என்ன.. இவங்க உழைக்கிறதே இல்லைன்னாரு.. இது உங்க பொண்ணுக்கும் பொருந்தும்.”

சதாசிவத்திற்கு, இதற்கு மேலும் பேச விட்டால்.. பிரின்ஸ்பால், ரமணா பட விஜயகாந்த் ரேஞ்சிற்கு பேசிவிடுவார் என்று தோன்றியது. அதனால் அவசர அவசரமாக குறுக்கிட்டு, ‘இனிமே நிச்சயமா இவ படிப்பு விஷயத்திலே அதிக கவனம் எடுக்கிறேன். மேடம்’” என்றார்.

பிரின்ஸ்பால் முகத்தில் புன்னகை வந்ததும், சதாசிவம் கேட்டார், “’மேடம் இந்தியாவோட பிரச்சனையே மக்கள் தொகைதானே.. நீங்க என்னடான்னா மனிதர்களை வளம்னு சொல்றீங்க…”

இந்தியாவோட பிரச்சனை மக்கள் தொகை இல்லை. அதை சிறப்பாக பயன்படுத்தாமல் இருப்பதுதான் நம் பிரச்சனை. நம் மக்கள் தொகையை 110 கோடி வயிறுகள்னு பார்க்கிறோம். இது தப்பு 220 கோடி உழைக்கும் கரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள்.

இந்தக் கைகளை, வளத்தை நாம் எப்படி பயன்படுத்தாமல் வைத்திருக்கிறோம் என்பதை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.

சதாசிவத்தின் மகளைப்பார்த்து, “”விமலா இந்த மார்க்கரை எடுத்து அந்த ஒயிட் போர்டுல எவ்வளவு உயரத்தில வைக்க முடியுமோ. அவ்வளவு உயரத்தில் ஒரு புள்ளி வை” என்றார்.

விமலா தயங்கிக்கொண்டே, போர்டில் புள்ளி வைத்தாள். பிரின்ஸ்பால் சிரித்துக் கொண்டே கேட்டார், “”உன்னால் இவ்வளவு உயரம்தான் முடியுமா? இல்லை. இதைவிட உயரமாக வைக்க முடியுமா?”

விமலா, ‘முடியும்’ என்று இன்னும் உயரத்தில் வைத்தாள். பிரின்ஸ்பால் இப்போது சதாசிவத்தை பார்த்துக் கேட்டார், “”உங்கள் பெண்ணால் இவ்வளவு உயரத்தில்தான் முடியுமா. இல்லை இன்னும் உயரத்தில் வைக்க முடியுமா?””

சதாசிவம் தன் மகளை பார்த்து, “”முடியும் இன்னும் முயற்சிசெய்”” என்றார். அவள் எம்பி இன்னும் உயரத்தில் புள்ளி வைத்தாள்.

பிரின்ஸ்பால் இப்போது விமலாவைப் பார்த்து புன்னகை மாறாமல் சொன்னார், ”உன்னால் இன்னும் உயரத்தில் வைக்க முடியும் முயற்சி செய்.”” விமலா
தயங்கிக்கொண்டே நிற்க, பிரின்ஸ்பால் மார்க்கரின் மூடியைக்காட்டி சொன்னார், “”உன் மூளையை பயன்படுத்து.” சட்டென்று புரிந்துகொண்டவள் மார்க்கரின் மூடியை பின்பக்கம் சொருகி இப்போது புள்ளி வைத்தாள். அது இன்னும் உயரத்தில் அமைந்தது.
சதாசிவத்திற்கு வியப்பாக இருந்தது. முதல்புள்ளிக்கும் கடைசிப்புள்ளிக்கும் உயரத்தில் அரை அடிக்கும் மேலான முன்னேற்றம். ஐந்தே நிமிடத்தில் ஒருவரை அரை அடி உயர்த்த முடியுமா?

“உங்கள் பெண்ணால் இன்னும் சிறப்பான மதிப்பெண் பெறமுடியும். ஆனால், பெறவில்லை. காரணத்தை நீங்களே தேடுங்கள். பாதர் வெறும் ஸ்பர்ம் டோனர் இல்லை. உங்களைப்போல பிஸினஸில் இருப்பவர்கள் எல்லாம் குழந்தைகளின் படிப்பு, அம்மாவின் வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள். குழந்தையின் வளர்ச்சி இருவரின் பொறுப்பு. வேலையல்ல. நன்றி.”

“அடுத்த முறை நீங்கள் என்னை அழைத்தால், அது என் பெண்ணை பாராட்டுவதற் காகத்தான் இருக்கும். நன்றி.”

பாதர் வெறும் ஸ்பர்ம் டோனர் இல்லை. நிர்வாகி என்பவர் வெறுமனே சம்பளம் கொடுப்பவர் மட்டுமில்லை. சதாசிவம் யோசித்துக் கொண்டே காரில் ஏறினார்.
எல்லா வளங்களும் இருக்கிற ஆப்ரிக்கா ஏன் வறுமையில் இருக்கிறது? வளங்களற்ற ஜப்பான் ஏன் வளமாக இருக்கிறது? காரணம் மனித வளம்.

பணியாளர்கள், மாணவர்கள் அவர்கள் கற்க வேண்டியவர்கள். தொடர்ந்து கற்க வேண்டிய வர்கள் தொடர்ந்து மேம்படவேண்டியவர்கள். அவர்களை நிச்சயம் என்னால் மேம்படுத்த முடியும். உண்மைதான் மனிதவளம்தான் இந்தியாவின் சொத்து.

என்னுடைய பிரிட்டிஷ் பேக்கரியின் சொத்தும்கூட என் பணியாளர்கள் தான்.
அவருடைய பணியாளர்கள் அனைவரும், ஒரு கணம் அவர் நினைவில் வந்தார்கள். மன நிறைவோடு காரை வேகப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *