– கிருஷ்ண வரதராஜன்
எங்கே தொலைத்தீர்கள் உங்கள் தெய்வீக அழகை
கவுன்சிலிங் கலையை கற்றுத்தரும் தொடர்
குழந்தைகளின் முகத்தில் இருக்கிற அழகை, அதாவது கண்களில் இருக்கிற ஒளியை, அவர்களின் புன்னகையில் இருக்கிற உண்மையை, அப்படியே காப்பாற்றுவது எப்படி? வளர வளர அந்த கண்களில் இருந்த ஒளி எப்படி காணாமல் போகிறது? அந்த தெய்வீக பேரழகை அப்படியே காப்பாற்றுவது எப்படி?
குழந்தைகளாய் இருந்த போது இருந்த, அந்த களங்கமற்ற அழகை எப்படி இழந்தோம்? எங்கே இழந்தோம்?
காரணம், உண்மைக்கு நெருக்கமாக இருந்த குழந்தைகள், வளர வளர உண்மையை விட்டு அதிகம் விலக ஆரம்பித்துவிடுகிறார்கள்.
சிரித்து, குதித்து, அழுது எந்த ஒரு உணர்ச்சிக்கும் உண்மையாய் இருக்கும் குழந்தைகள் வளர வளர கண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால் தங்கள் உணர்ச்சிகளுக்கு உண்மையாய் இருப்பதில்லை.
‘தொட்டதுக்கெல்லாம் அழு.. எப்பப்பாரு அழுகை.’ ‘எதுக்கு இப்படி கிக்கிபிக்கின்னு சிரிச்சிக்கிட்டே இருக்க..’ ‘உம்முனு இருக்காத.. விடியா மூஞ்சி.’ அதட்டப்பட்டு அதட்டப்பட்டு அடங்கிப்போனது, செயல்கள் மட்டுமல்ல, உணர்ச்சிகளும்தான்.
அடிபட்டு அழுபவர்களைக்கூட நாம் அழ விடுவதில்லை. அழக்கூடாது. கண்ணைத்தொட என்று சொல்லிச் சொல்லி வலியை வெளிப்படுத்த விட மாட்டோம். அழுகையை அடக்குவதால் உணர்ச்சிகளும் அடக்கப்படுகிறது.
திரும்பத்திரும்ப உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த கற்றுத்தருகிறோம். ஆனால் உணர்ச்சிகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்த கற்றுத் தருவதில்லை. அடைபட்டுக்கிடக்கும் உணர்ச்சிகளால்தான் மனிதர்கள் இறுக்கமான வர்களாக மாறிவிடுகிறார்கள்.
மனதில் சிறைபட்டுக்கிடக்கும் உணர்ச்சிகளை விடுவித்தல்தான் கவுன்சிலிங்கின் முக்கியப் பணி.
உணர்ச்சிகளை அடக்கி அடக்கி அவை உடலிலும் மனதிலும் ஒரு அடைப்பாகிவிடுகிறது. மெல்ல ஓர் இறுக்கம் எல்லோரிடமும் படியத் துவங்கிவிட்டது.
உள்ளே எவ்வளவு கிழிசல் ஆடை அணிந்திருந்தாலும் வெளியே நீட்டாக காட்ட பழக்கப் படுத்திவிட்டோம். அதனால் மனிதர்கள் உணர்ச்சிக்கூண்டில் அடைபட்ட சிங்கங்களாகி விட்டார்கள்.
ஆம்பளை அழக்கூடாது. பொம்பளை சிரிக்கக்கூடாது என்றெல்லாம் பாரம்பரியம் கற்பிக்கிறோம், உணர்ச்சிகளை அடைக்க.
உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொடுங்கள். ‘அழாதே’ என்பதற்குப் பதிலாக, ‘ஏன் அழுகை வருகிறதென்று கவனி’ என்று சொல்லுங்கள்.
கவுன்சிலிங்கின்போது என்னிடம் பேசுகிறவர்கள் கண்கலங்கினாலோ அல்லது கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டாலோ அவர்கள் மனம் விட்டு அழ உதவுவேன். அடைபட்டுக்கிடந்த உணர்ச்சிகளையெல்லாம் என்முன் கொட்டிய பிறகு, மனம் தெளிவாகும். கூடவே அவர்கள் முகமும் தெளிவாகும்.
பெற்றோர்களோ அல்லது மற்றவர் களோ தொலைத்த குழந்தைகளின் தெய்வீக அழகை தேடிக்கண்டுபிடித்து மீண்டும் அவர்கள் முகத்தில் பொருத்துவதோடு கவுன்சிலராக எங்கள் பணி நிறைவடைகிறது.
எல்லோருக்கும் கவுன்சிலிங் தரும் நண்பர் ஒருவர் தனக்கு ஒரு கவுன்சிலிங் வேண்டும் என்று என்னை வந்து சந்தித்தார்.
என்ன செய்கிறீர்கள் என்று கேட்பவர் களிடம், ‘நான் கவுன்சிலர்’ என்று அறிமுகப் படுத்திக்கொண்டால், ‘எந்த ஏரியா கவுன்சிலர்?’ என்று கேட்டு திகைக்க வைக்கிறார்கள் என்றார் சிரித்துக்கொண்டே.
இன்றைய வாழ்க்கை முறையில் ஏறத்தாழ எல்லோருமே ஆலோசனைகள் தேவைப் படுபவர்களாகவே இருக்கிறோம்.
தலைவலிக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால், பார்ப்பவர்கள் எல்லாம் ஆளுக்கு பத்து தீர்வுகள் தருவார்கள். ஆனால் அவர்களுக்கு தலைவலி என்றால் எதுவும் செய்யாமல் மற்றவர்களிடம்தான் யோசனை கேட்பார்கள்.
கவுன்சிலிங் செய்யும் நண்பர், என்னிடம் தயங்கித்தயங்கி, ‘என் மனைவிக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது’ என்றார்.
மனைவிக்கு கவுன்சிலிங் செய்வது எப்படி? அந்த சுவாரஸ்யமான விஷயத்தை அடுத்த இதழில் பார்ப்போம்.
Leave a Reply