புது வாசல்

விஸ்வரூபம் எடுங்கள்

தமிழகம் முழுவதும், நான் கேட்டு வியந்த டயலாக்குகள் சில உண்டு.

எல்லா ஊரிலும், மனிதர்கள் எந்த ஒரு வித்தியாசமுமின்றி, அவரவர்கள் ஊரை குறை சொல்வதுதான் அது.

நான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது, அருகில் அமர்ந்து வழிகாட்டும் உள்ளூர் நண்பர் சொல்வார், ‘சார், பாத்துப்போங்க. கன்னா பின்னானு வருவானுங்க. இந்த ஊர்ல ரூல்ஸ்னு ஒண்ணும் பாலோ பண்ணமாட்டாங்க. அவனவன் இஷ்டத்துக்குத்தான் வண்டி ஓட்டுவான்.’”

சொல்லி வைத்த மாதிரி, தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்திலும் இந்த டயலாக்கை சொல்கிறார்கள்.

“”இந்த ஊர்ல, எல்லாப் பயலும் சுயநலம் பிடிச்சவங்க.. அடுத்தவன் நல்லா இருந்தா யாருக்கும் பொறுக்காது. தான் முன்னேற்றது பத்தி யோசிக்கிறதவிட அடுத்தவன கீழ இறக்கிறதுக்கு யோசிக்கிறதுதான் இங்க அதிகம்.””

“”என்ன வெயில்… இந்த ஊர் மாதிரி, வெயில் வாட்டற ஊர் வேற எதுவும் இல்லை.””

எல்லா ஊரிலும் இப்படி கேட்கும்போது எனக்குத் தோன்றுகிறது, குறைகளை பேசிப்பேசி சோர்ந்து போவதற்கு பதில், ஏன் நிறைகளை பேசிப்பேசி உற்சாகமாகக் கூடாது?

உங்கள் ஊரைப்பற்றி மற்றவர்கள் குறைசொன்னால்கூட, “எந்த ஊர்லதான் சார் டிராபிக் இல்ல. நாம் நிதானமாப் போவோம். நிச்சயம் நாம போற காரியம் நல்லபடியா நடக்கும்” என பேசலாமே.

‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்றால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்று, உற்சாகமாகப் பதில் அளியுங்கள். உங்கள் பதில், ‘நாமும் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக இருக்க முடியும்’ என்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு ஏற்படுத்தட்டும்.

இனி யாரிடம் பேசினாலும் நம்பிக்கையை விதையுங்கள்.

யாரையாவது உற்சாகப்படுத்தியிருக்கிறீர்களா? துவண்டு கிடந்து யாரையாவது தட்டி எழுப்பி, எழுச்சியூட்டியிருக்கிறீர்களா? தோல்வி விரக்தியில் இருக்கும் யாருக்காவது ஆறுதல் சொல்லியிருக்கிறீர்களா?

கொடுப்பவரே பெறுகிறார் என்பது நம்பிக்கைக்கும் பொருந்தும்.

எனக்கே நம்பிக்கை தேவையாயிருக்கும்போது, நான் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்துவது என்று எழும் கேள்வியை தூக்கிப்போட்டுவிட்டு உங்களை விடவும் அவலத்தில் இருக்கும் ஒருவருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுங்கள்.
பாரதப் போர் முடிவு எல்லோருக்கும் முன்பே தெரிந்திருந்தது. கிருஷ்ணர் இருக்கும் அணிதான் ஜெயிக்கும் என்பதுதான் அது. உங்களை நண்பர்களாகக் கொண்டவர்களும் இப்படியே முடிவு செய்யட்டும்.

கீதை உபதேசித்த கிருஷ்ணன் கடைசியில் விஸ்வரூபம் எடுத்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தத் தரிசனம் அர்ஜூனனுக்கு மட்டும்தான் கிடைத்தது.

நான் இதை வேறு மாதிரி கருதுகிறேன். முடியாது என்று துவண்டு கிடப்பவர்களுக்கு, முடியும் என்ற எண்ணத்தை, நம்பிக்கையை ஏற்படுத்தும்போது, அவர்கள் பார்வையில் நாம் கூட விஸ்வரூபம் எடுக்கிறோம்.

அதனால்தான் சொல்கிறேன் நீங்களும் விஸ்வரூபம் எடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *