நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி

நிர்வாகிகள் யுக்திகள் பற்றிய பாடங்கள் கதை வடிவில்

ஆயிரம் மூளையை அடைவது எப்படி?

இந்த மாதம் விளம்பர வியூகங்களை வகுப்பது எப்படி?

விளம்பரமும் வெற்றியும் என்கிற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம். தாராளமாக நூறு பேர் உட்காரக்கூடிய அளவிற்கு ஹாலில் இடமிருந்தது. சதாசிவம் உள்ளே நுழையும்போது பாதி

    இருக்கைகள்தான் நிறைந்திருந்தது. முதல் வரிசை மட்டும் முற்றிலும் காலியாக இருந்தது. ஆனாலும் சதாசிவம் கடைசி வரிசையில் போய் அமர்ந்து கொண்டார்.

    பேராசிரியருக்கு கிடைத்த டிக்கெட்டை அவர் சதாசிவத்திற்கு அனுப்பியிருந்தார். ஒருநாள் நிகழ்ச்சிக்கு இரண்டாயிரம் ரூபாய் கட்டணம். இவ்வளவு பணம் கட்டி எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற அவரின் சந்தேகத்திற்கு அரங்கம் நிறைந்தபோது பதில் கிடைத்தது.

    பேராசிரியரின் சந்திப்பிற்கு பிறகு இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டிருந்தாலும், ‘நாமோ நம் பேக்கரிக்கு விளம்பரம் செய்வதில்லை. செய்யப் போவதுமில்லை. கலந்து கொள்வோமா, வேண்டாமா?’ என்று குழம்பிக்கொண்டிருந்தார். கடைசியில் குழப்பத்தை ஆர்வம் வென்றது.

    நிகழ்ச்சியை துவங்கும்போது அரங்கம் நிரம்பி வழிந்தது. விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியாக இருப்பவரை அவரின் சிறப்புகளை சொல்லி அறிமுகம் செய்தார்கள். பேச ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் பார்வையாளர்களை பார்த்து அவர் கேட்டார். “இந்த நிகழ்ச்சி எதற்காக என்று தெரியுமா?”

    பார்வையாளர்கள், அவரே பதில் சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தார்கள். அவர் பதில் சொல்லாமல், “கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் அனைவரும், எழுந்து முதல் வரிசைக்கு வாருங்கள்” என்றார். தயங்கியவர்களை மேடையிலிருந்து இறங்கிவந்து அவரே கைப் பிடித்து அழைத்துச்சென்று உட்கார வைத்து விட்டு மைக்கில் அறிவித்தார், “வணிகத்தில் கடைசி நிலையில் இருப்பவர்களைக்கூட முதல் நிலைக்கு அழைத்து வரவேண்டும். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி”. சதாசிவம் உட்பட எல்லோரும் ரசித்து கை தட்டினார்கள்.

    என்னை அறிமுகம் செய்து வைத்தார்களே! அதுகூட விளம்பரம்தான். அறிமுகம் செய்த பிறகு என் மீதான மதிப்பு கூடுவதைப்போலத்தான் விளம்பரமும் ஒரு பொருளின் மதிப்பை கூட்டுகிறது.

    எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்று தான் எல்லோரும் யோசிக்கிறார்களே தவிர, விளம்பரம் செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பலருக்கும் தெரியவில்லை.

    ஒரு விளம்பரத்தை உருவாக்க ஆயிரம் மூளைகளின் ஆற்றல்கள் வேண்டும். ஆனால் நம்மிடம் இருப்பது ஒரே ஒரு மூளைதான். ஆயிரம் மூளைகளைப் பெற என்ன செய்யலாம்? ஆயிரம் மூளைகளை நமக்காக யோசிக்க வைக்கலாம். எப்படி என்கிறீர்களா? சர்வே. உங்கள் வாடிக்கையாளரிடம் சர்வே எடுங்கள். அதற்குப் பெயர் கஸ்டமர் சாடிஸ்பேக்ஷன் ஸ்டடி. வாடிக்கையாளர் திருப்தியறியும் கருத்துக்கணிப்பு. ஆனால் அதுமட்டும் போதுமானதல்ல.

    ஏனெனில் வாடிக்கையாளர்கள் தான் வந்து கொண்டிருக்கிறார்களே. பொது மக்களிடம் எடுங்கள். அப்போதுதான் உங்கள் நிறுவனம் பற்றிய உண்மையான மதிப்பை அறிய முடியும். அதில் பல வகைகள் இருக்கின்றன.

    கஸ்டமர் ப்ரிபரன்ஸ் ஸ்டடி. வாடிக்கையாளர் தேர்வுநிலை பற்றிய கருத்துக் கணிப்பு. உதாரணத்திற்கு சிறந்த ஹோட்டல் எது என்று நூறு பேரிடம் கேள்வி கேட்கிறோம். அதில் 60 பேர் ஒரு ஹோட்டலை சொல்கிறார்கள். 30 பேர் வேறு ஹோட்டலை சொல்கிறார்கள். மீதமுள்ள பத்து பேர் ஒரு ஹோட்டலை சொல்கிறார்கள் என்றால் இதை வைத்தும் தரம் பிரிக்கலாம். இது தவிரவும் இன்னொரு முறை இருக்கிறது.

    நீங்களே பேசும்போது கவனித்திருப்பீர்கள். எந்தப் பால் சுவையாக இருக்கும் என்று கேட்டால், ஒன்றைச் சொல்லி பரிந்துரைப்பார்கள். அது கிடைக்காவிட்டால் இதை வாங்கு என்று இன்னும் இரண்டு பால் பெயர் சொல்வார்கள். உதாரணத்திற்கு ஆரோக்கியா கிடைக்கிறதா பார், இல்லை என்றால் ஆவின். அதுவும் இல்லை என்றால் கவின் பால் வாங்கிக்கொள் என்றால் இதிலிருந்து வாடிக்கையாளர் பால் நிறுவனங் களுக்கு கொடுத்திருக்கும் தர வரிசை தெரிய வரும்.

    நம் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? நிச்சயமாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் அபிப்ராயங்களும் தெரிந்தால் அவர்களை கவரும் வகையில் சிறப்பாக விளம்பரம் செய்ய முடியும்.
    விளம்பரங்களின் வகைகள், விளம்பரத்திற்கு பிறகு எடுக்க வேண்டிய சர்வேக்கள் என அவர் பேசப்பேச, சதாசிவம் மனதில் உடனடியாக செய்ய வேண்டியவைகள் காட்சிகளாக ஓட ஆரம்பித்தன.

    நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தும்கூட சதாசிவத்திற்கு இன்னும் அதே யோசனையாகவே இருந்தது.

    எப்போதும் விற்பது பற்றி மட்டுமே யோசிக்கிறோம் வாங்குபவர்கள் பற்றி யோசிப்பதில்லை. நம் தயாரிப்புகளை வாங்குகிறவர்கள் உண்மையில் நம்மை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் பேக்கரி வாடிக்கையாளர் மனதில் கடைசி இடத்தில் இருக்கிறதா? முதலிடத்தில் இருக்கிறதா?

    நம் வாடிக்கையாளர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?.நாம் நிறைய விற்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் வாடிக்கையாளர் என்ன நினைக்கிறார்கள், ‘சுவையாக இருக்க வேண்டும்’ என்று.

    சதாசிவம் நோட்டு, பேனாவை எடுத்துக் கொண்டு அட்டவணை தயாரிக்க ஆரம்பித்தார்.
    நிறுவனத்தின் எதிர்பார்ப்பு

    விற்பனை சிறப்பாக இருக்க வேண்டும்.
    எல்லாம் வெரைட்டியும் விற்க வேண்டும்.
    லாபம் கிடைக்க வேண்டும்.
    வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு
    சிறப்பான சுவை இருக்க வேண்டும்.
    நிறைய வெரைட்டி இருக்க வேண்டும்.
    புதிய புதிய வெரைட்டிகள் வேண்டும்.
    விலைக்கேற்ற தரம் இருக்கவேண்டும்.

    வாடிக்கையாளர் என்ன நினைப்பார் என்று நான் யூகித்தது இது. ஆனால் நம் வாடிக்கை யாளர்கள் நினைப்பது இவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?

    விளம்பரம் செய்கிறோமோ, இல்லையோ உண்மையில், ‘திருவாளர் வாடிக்கையாளர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்?’ சதா சிவத்திற்கு அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

    பேக்கரியில் வாடிக்கையாளர் கருத்துக்களை பதிவு செய்ய என்று ஸ்டிக்கர் ஒட்டி அந்த இடத்தில் பேனாவும் பேப்பரும் வைத்தார். ஒரு வாரத்தில் மொத்தம் 5 பேர்தான் எழுதி இருந்தார்கள். ஏதோ, யாரும் எழுதவில்லை என்று வருத்தப்படக்கூடாதே என்பதற்காக எழுதியது போல இருந்தது. சதாசிவத்திற்கு திருப்தியாக இல்லை.

    எப்போதோ பேராசிரியர் சொன்னது நினைவிற்கு வந்தது. நம் திட்டங்கள் மட்டும் சிறப்பாக இருந்தால்போதாது. அதைச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    நோட்டு வைத்தால் எல்லோரும் எழுதி விடுவார்களா? எழுத வைக்க வேண்டும். என்ன செய்யலாம்? எங்கள் சேவை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பிறந்த நாள் கேக்கை பரிசாகப் பெறுங்கள் என்று எழுதி வைத்தார். இதற்கு நல்ல பலன் இருந்தது.

    நன்று . சிறப்பான சேவை. சிறப்பான சுவை என்பதையெல்லாம் தாண்டி நிறைய ஐடியாக்கள் கிடைத்தன.

    பேராசிரியரின் வழிகாட்டுதலோடு அவர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஐந்து பேரை வைத்து பொதுமக்களின் எண்ணங்களை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினார்.

    நகரில் உங்களுக்கு பிடித்த பேக்கரி எது? காரணம்?
    பேக்கரியில் நீங்கள் விரும்பி சாப்பிடும் ஐட்டம் எது?
    மாதத்தில் எத்தனை முறை பேக்கரிக்கு செல்கிறீர்கள்?
    பேக்கரியில் நீங்கள் எதிர்பார்க்கும் சேவை என்ன?
    பிரிட்டீஷ் பேக்கரி பற்றி தங்கள் கருத்துக்கள் என்ன?

    இரண்டாயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு எடுத்து, தொகுத்துப்பார்த்ததில் சதாசிவத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் 7 சதவீதம் பேர் தான் பேக்கரிக்கு செல்பவர்கள். மீதி 93 சதவீதம் பேர் எந்த பேக்கரிக்கும் ஒருமுறைகூட சென்றதில்லை.

    பேராசிரியர் இதை வேறு விதமாக பார்த்தார். “சதாசிவம், எத்தனை பேர் பேக்கரியில் வாங்குகிறார்கள் என்ற இந்த சர்வேக்கு மார்கெட் பொட்டென்ஷியல் ஸ்டடி என்று பெயர். அதாவது இன்னும் நாம் எந்த அளவுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும். புரிகிறதா. 7 சதவீதம்பேர் பேக்கரிக்கு வரும்போதே நமக்கு இவ்வளவு பிஸினஸ் நடக்கிறது என்றால் மீதி 93 சதவீதம் பேரையும் இங்கே வர வைத்தால் இன்னும் நம் பிஸினஸ் எப்படி வளரும் என்று யோசியுங்கள்.”

    பேராசிரியர் சிரித்துக்கொண்டே சொன்னார், ”இன்னும் இவ்வளவு வாடிக்கை யாளர்களை எப்படி வரவைக்கப்போகிறீர்கள்?”
    சதாசிவம் முதன் முறையாக, ‘விளம்பரம் அவசியம்’ என யோசிக்கத் தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *