– கிருஷ்ண வரதராஜன்
உள்ளேன் ஐயா
நான் முதன் முதலில் எழுதிய புத்தகம் நூற்றுக்கு நூறு. பல்வேறு தரப்பிலிருந்து அந்த புத்தகத்திற்கு பாராட்டு கிடைத்தாலும் என்னை பள்ளிப்பருவத்திலேயே, எழுத்திலும், பேச்சிலும் திருப்பிவிட்ட என் தமிழாசிரியர் அதைப் பெரிதாக சிலாகிக்கவில்லை.
புத்தகத்தை படித்துவிட்டு என் மேல் மன வருத்தம் கொண்டிருந்தார் என்பதை நேரில் சந்திக்கும்போது அறிந்தேன். ‘நூற்றுக்கு நூறு வாங்குவதுதான், தகுதியா? அதை துரத்துகிற ஒரு முட்டாள் கூட்டத்திற்கு நீயும் ஊக்கம் தருவதா?’
இன்றைய கல்வி முறையில், அறிவை வளர்த்துக்கொள்ளாமலே, வெறுமனே குருட்டு மனப்பாடம் செய்து நூற்றுக்கு நூறு வாங்கிவிட முடியும் என்பதால் நூற்றுக்கு நூறு வாங்குவதை மிகப்பெரிய திறனாக நான் கருதுவதில்லை என்ற போதிலும் மதிப்பெண் வாங்காததால் ஒரு மாணவன் மனநிலையில் ஏற்படுகிற காயங்களை நானறிவேன். எனக்கும் அத்தகைய காயங்கள் உண்டு.
என்றாலும் நூற்றுக்கு நூறு வாங்குகிற ரோபோக்களை, வெறும் குருட்டு மனப்பாடம் செய்கிற இயந்திரங்களை உருவாக்குவது என் நோக்கம் இல்லை.
படித்தவர்கள் எல்லாம் ஜெயித்ததும் இல்லை. படிக்காதவர்கள் எல்லாம் தோற்றதும் இல்லை. ஆனால், மிடில் கிளாஸ் குடும்பங்களை பொறுத்தவரை, கல்வியும் மதிப்பெண்ணும் நிச்சய வெற்றிக்கான வழி. அவர்களின் இந்த நம்பிக்கை தான் கல்வி வியாபாரம் செழிக்கக் காரணம்.
இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொண்டு தங்கள் கல்வி வியாபாரத்தை நடத்தும் நிறுவனர்கள் இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பில் 490 எடுத்தால் பதினொன்றாம் வகுப்பு சேரும்போது, எந்தக் கல்விக்கட்டணமும் கிடையாது. ஏன் இவர்கள் கல்விச் சேவை 490 க்கு மேல் எடுத்தவர்களுக்கு மட்டும் என்றால் அப்போதுதான் ப்ளஸ் டூவில் இவன் எடுக்கும் 1290ஐ விளம்பரப்படுத்தி, தங்கள் பள்ளியின் சாதனை என்று தம்பட்ட விளம்பரம் செய்து காசு சம்பாதிக்க முடியும். எனவே கல்விக் கட்டணச் சலுகை என்பது ஒருவகையான விளம்பர முதலீடு.
இத்தகைய கல்வி நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களால் பெற்றோர்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது.
தங்கள் குழந்தைகளுக்கு அங்கே இடம் கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று கட்டணம் கட்டுகிறார்கள். இவ்வளவுக்கும் பிறகும் தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை என்றால், அவர்களை கொல்லாமல் கொன்று விடுகிறார்கள்.
மதிப்பெண்களாலேயே மாணவர்கள் மதிக்கப்படுவதால், மதிப்பெண் குறைகிறபோது மாணவர்கள் தங்களைப்பற்றிய மதிப்பையும் சேர்த்தே குறைத்துக்கொள்கிறார்கள். நான் முட்டாள். எனக்கு படிப்பு வராது என்பது போன்ற எண்ணங்கள் வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்னே அவர்களது கால்களை உடைத்துவிடுகின்றன.
யாராவது சுலபமாக கற்கிற வழிகளை சொல்லித்தந்திருந்தால் நிறையப் பேர் இன்னும் நல்ல மதிப்பெண்களையும் தங்களைப் பற்றிய நல்ல சுயமதிப்பையும் பெற்றிருப்பார்கள்.
நம் வெற்றிப்பயணத்திற்கான பாதை சரியானதில்லை என்பதுதான் என் கருத்தும். ஆனால் மாற்றுப்பாதை அதாவது சரியான வழியை அனைவரும் ஏற்கும் வரை போகும் பாதையை சிக்கலில்லாமல் செய்யும் பணியை யார் செய்வது? என்று, கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் நாமே செய்து விடுவது என்று களத்தில் இறங்கிவிட்டேன்.
‘உங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கை பெற வேண்டுமா? அறிவில் சிறந்து விளங்க வேண்டுமா? பெற்றோர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்’ என்பதுதான் என் முதல் நிகழ்ச்சிக்கான விளம்பரம். யாரும் அதை பொருட்படுத்தவில்லை.
ஆனால், ‘உங்கள் குழந்தைகள் நூற்றுக்கு நூறு வாங்கவேண்டுமா? வழிமுறைகளை விளக்குகிறார் கிருஷ்ண.வரதராஜன்’ என்று விளம்பரம் செய்தால் கூட்டம் அலைமோதுகிறது.
விளம்பரம் எப்படி இருந்தாலும் நான் சொல்லும் விஷயங்கள் என்னவோ ஒன்றுதான். மதிப்பெண் பெறுவதை அல்ல. அறிவை பெறுவதைத்தான் நான் ஊக்குவிக்கிறேன். அதற்கு பெற்றோர்களையே பொறுப்பேற்க வைக்கிறேன்.
நூற்றுக்கு நூறு முதன்மைப்படுத்தி என் நிகழ்ச்சியையோ அல்லது புத்தகமோ இல்லா விட்டால் பெற்றோர்கள் அருகில் வருவதில்லை என்ற வாதத்தை என் தமிழாசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை.
என் நிகழ்ச்சி விளம்பரங்களை பார்த்து விட்டு தங்கள் குழந்தைகளை, ‘நூற்றுக்கு நூறு’ வாங்க வைக்கிற ஒரு அவதார புருஷனை கண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சியில் குழந்தைகளோடு வந்து கலந்து கொள்வார்கள். பெற்றோர் களுக்கான நிகழ்ச்சி முடிந்து செல்கையில் தன் குழந்தையின் கல்வி வெற்றிக்கு மட்டுமல்ல வாழ்க்கை வெற்றிக்கும் நாம்தான் பொறுப்பு. நாம்தான் இன்னும் நிறைய மாறவேண்டும் என்ற நோக்கில் செல்வார்கள்.
குரு ஒருவர் அடிக்கடி சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிறைசென்று கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கையின் இறுதி நாளில் அவரிடம் இதற்கான காரணம் கேட்கப்பட்ட போது சொன்னார். அங்குள்ள குற்றவாளிகள் என்னை ஒரு குருவாக பார்த்தால் கிட்டவே நெருங்கியிருக்க மாட்டார்கள். என்னை சக குற்றவாளியாக அதாவது அவர்களுள் ஒருவனாக பார்த்ததால் என்னை நெருங்கினார்கள். என் கருத்துக்களை ஏற்றார்கள். அவர்களை என்னால் சுலபமாக மாற்றமுடிந்தது. திருத்த முடிந்தது.
என் வழியும் இதுதான். நூற்றுக்கு நூறு என்பதை தூக்கி எறியுங்கள் என்றால் அவர்கள் அதன் பிறகு நான் சொல்லப்போகும் எதையும் காது கொடுத்து கேட்கப்போவதில்லை.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கூட படுத்தியெடுக்கிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். மதிப்பெண் எடுக்க வைப்பது என்பது ஒரு மனநோயாக மாறிவருகிறது என்பது என் அபிப்ராயம்.
கையில் பக்கவாதம் வந்துவிட்டது. அந்தப் பையனிடம் டம்ளரை எடு என்றால் அவனால் எடுக்க முடியாது. இதற்கு அர்த்தம் அவன் விரும்பவில்லை என்றோ முயற்சிக்கவில்லை என்றோ இல்லை. அவனால் முடியாது. அதுபோல டிஸ்லெக்ஸியா, ஸ்லோ லேர்னர்ஸ், மூளை வளர்ச்சி குறைபாடுள்ளவர்கள் என அதிக மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெற்றோர்கள் எல்லாம், தங்களை குழந்தைகளை அதிக மதிப்பெண் எடுக்க வைக்க மற்ற பெற்றோர்களை விடவும் அதிகம் தவிக்கிறார்கள்.
அதிகம் பாடுபடுகிறார்கள். தங்கள் குழந்தைகளை அதிகம் படுத்துகிறார்கள். உங்கள் குழந்தையின் கைகள் முதலில் மற்றவர்கள் செய்கிற வேலைகளை செய்கிற அளவுக்கு முதலில் பலம் பெறட்டும். பிறகு பளு தூக்கப் பயிற்சி எடுக்கலாம் என்று நான் சொல்லும் போது தலையாட்டுவார்கள். எனக்கு ஒரு குழந்தையை காப்பாற்றியாகிவிட்டது என்று நிம்மதியாக இருக்கும். எல்லாம் கேட்டுவிட்டு, “இனிமே நல்லா படிப்பானா சார்” என்பார்கள். ஓங்கி ஓர் அறை விட்டிருக்கிறேன் அவர்களை, மானசீகமாக. இவர்களை எல்லாம் நான் எப்படி திருத்துவது?
இதையெல்லாம் எப்படி என் தமிழாசிரியருக்கு சொல்வது?
‘குழந்தைகளை படிக்க வைப்பது உன் வேலை. சம்பாதிப்பது மட்டுமே என் வேலை’ என்றிருந்த என் கணவர், உங்கள் நூற்றுக்கு நூறு புத்தகம் படித்து விட்டு இனிமேல் குழந்தைகள் படிப்புக்கு நான் பொறுப்பு என்று சொன்னதாக ஒருவர் மகிழ்ந்த போது, நானும் அவர்கள் மகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதேபோல, நாங்கள் நடத்தும், ‘சாதனையாளர்களை உருவாக்குவோம்’ என்ற பெற்றோர்களுக்கான கருத்தரங்கங்களில் கலந்து கொண்டவர்களிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
“நீங்கள் சொன்னது போல, என் குழந்தைகளுக்கு நானே சிறந்த முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். அதனால் நான் இப்போது எம்.ஏ சேர்ந்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம், அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்ததும், நான் டிவி பார்ப்பதில்லை. என் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுகிறேன். என் மகனின் தேர்வு நேரங்களில் எனக்கும் தேர்வு என்று நினைத்துக்கொண்டு நானும் கூடுதல் நேரம் படித்தேன். அதைப்பார்த்து என் பையனும் கூடுதல் உற்சாகத்துடன் படிக்கிறான் என்றார் ஒருவர்.
இன்றைக்கு மாணவர்கள், பாடங்களை மனப்பாடம் செய்தே படித்து வருவதால், அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை நிகழ்ச்சிகளில் உணர்த்தி வருகிறேன். இதனால், 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள எல்லா புத்தகங்களையும் வாங்கி, ஆழப் படித்து ஒவ்வொரு சப்ஜெக்டையும் அதன் அடிப்படையிலிருந்து ஆரம்பித்து தன் குழந்தை படிக்கும் பத்தாம் வகுப்பு வரை தெளிவாக ஒரே நாளில், தன் குழந்தைக்கு பாடம் நடத்துவதாக ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
ரிசல்ட் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அதை எப்படி அடைந்தோம் என்கிற வழிமுறையும் முக்கியம் என்பதால்தான் பாடங்கள் புரியாமலே மனப்பாடம் செய்து வாங்கும் மதிப்பெண்களை எதிர்க்கிறேன். அதே சமயத்தில் நூற்றுக்கு நூறை குருட்டு மனப்பாடம் செய்து பெறுவதுதான் தவறே தவிர கற்பதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, பாடங்களை நன்கு புரிந்து கொண்டு படித்து, நினைவாற்றலுக்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டு, சிறப்பாக தேர்வெழுதி, அதன் மூலம் நூற்றுக்கு நூறு பெறுவதென்பது என்னைப்பொறுத்தவரை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. மாணவர் களை, எல்லோரும் கொண்டாடுவதற்காகவே இந்தப்பணியை நான் செய்து வருகிறேன்.
எது எப்படியோ, என் வெற்றியை மட்டுமல்ல, என்னால் என் மாணவர்கள் பெறும் வெற்றியும்கூட, என் தமிழாசிரியருக்கே அர்ப்பணிக்கிறேன்.
பள்ளியில், வருகையை பதிவு செய்ய, ‘உள்ளேன் ஐயா’ என்போம். இந்த உலகில் என் வருகையை, என் வாழ்க்கையின் மூலமே பதிவு செய்ய விரும்புகிறேன். லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி அறிவில் மேம்படுவதன் மூலமாக என்னைப் படைத்தவனுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், “உள்ளேன் ஐயா.”
Leave a Reply