அடித்துப் பேசுங்கள்

எ. வெங்கட்ராமன்

ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கென்று சில விசேஷ பிரச்சினைகள் உள்ளன.”சம உரிமைகளும், சம வேலை வாய்ப்புக்களும் எங்களுக்கும் தரப்பட வேண்டும்” என்று முழங்கும் வீராங்கனைகள் மிகச் சிலரேதான்.

எத்தனையோ வேலை பார்க்கும் பெண்கள், “நான் ஏன் இப்படி தினந்தோறும் வேலைக்குப் போய் அவஸ்தைப் படவேண்டும்? கஷ்டமோ, நஷ்டமோ, வீட்டோடு முடங்கிக் கிடப்பதுதான் சுகம்” என்று உள்ளூர நினைக்கிறார்கள்.

ஆனால், மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் கணவனின் வருமானத்திற்குள் கௌரவமான ஒரு வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாது என்றும், வசதியான தனி வீடுகளில் வாழ முடியாது என்றும் விதவிதமான ஆடைகளை உடுத்திக்கொள்ள முடியாது என்றும், குழந்தைளை உயர்தர கல்விக் கூடங்களில் சேர்க்க முடியாது என்றும் – பற்பல பொருளாதாரக் காரணங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல பெண்கள் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க விரும்புகிறார்கள்.

பிறரோடு இணங்கி, இணைந்து வேலை பார்ப்பதில் நான் முன் கூறிய வகைப் பெண்கள் சிலவகையான உணர்ச்சிபூர்வமான கஷ்டங்களுக்கு உட்படுகிறார்கள். அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகள் தெரியாமல் மனத்துக்குள் மருகுகிறார்கள்.

அமுதா (26) இயல்பிலேயே கூச்சம் நிறைந்த ஒரு பட்டதாரிப் பெண். தனியார் கம்பெனி ஒன்றில் அவள் வேலை பார்க்கிறாள். தினந்தோறும் ஆபீஸ÷க்குப் போவதே அவளுக்கு வெறுப்பை ஊட்டுகிற செயலாக உள்ளது. மிகவும் வெட்கப்படுகிற இயல்புடைய பெண்ணான அமுதா, ஆண்கள் தமக்குள் பேசிக் கொள்ளும்போது உதிர்க்கும் ஆபாசச் சொற்களைக் கேட்டு அதிர்ந்து போகிறாள். அவளைப் பற்றி அவர்கள் பேசும் போது அடிக்கும் கிண்டலும், கேலியும் அவர் உள்ளத்தை அமிலம் போல் தாக்கி ரணப்படுத்துகிறது.

இந்தக் காரணங்களுக்காகவே அவள் ஆபீஸ் போவதை வெறுக்கிறாள். வேலையை விட்டுவிட விரும்பினாலும், அது முடியாது என்பது அவள் அறிந்ததே. அவள் கொண்டுவரும் சம்பளம் இல்லா விட்டால், அவளுடைய வீட்டில் அனைவரும் பட்டினியாகக் கிடக்க வேண்டியதுதான்!

கீதா (35)வுக்கு இன்னொரு வகைத் தலைவலி. இயல்பாகவே பொறுமையும், அடக்கமும் நிறைந்த பெண்ணான அவளுக்கு, “இல்லை; மாட்டேன்; முடியாது” என்ற சொற்களைப் பயன்படுத்தவே பயம்.

தன்னிடம் ஒரு வேலையையோ, சலுகையையோ, அதிகப்படியான உழைப்பையோ இன்னொரு ஆண் ஊழியர் கோரும்போது, அவரை எதிர்த்துப் பேசப் பயப்பட்டுக்கொண்டு, அந்த அனாவசிய வேலையைச் செய்வாள்.

அவள் சரியான பயந்தாங்கொள்ளி, சுமைதாங்கி என்பது ஆண் ஊழியர்களுக்குத் தெரிந்துவிட்டபடியால், அதிகப்படியான வேலைகளையும், அனாவசியப் பணிகளையும், அவளிடம் ஒப்புவித்துவிட்டு அவர்கள் கிரிக்கெட் கமெண்டரி கேட்கவோ, அல்லது தன் குடும்ப வேலைகளைச் செய்யவோ போய்விடுவது வழக்கமாகிவிட்டது.

ஏமாளியான கீதா, மனத்திற்குள் தன் கோழைத்தனத்தை எண்ணிக் குமுறிக்கொண்டே, வாழ்நாளைக் கடத்துகிறாள். ஆபீஸ÷க்குப் போகாமல் இருக்க விருப்பம்தான், என்றாலும் முடியாது. அவளுக்கும் சம்பளம் தரும் சௌகரியங்கள் மிகமிக முக்கியமானவையே.

அமுதாவுக்கும், கீதாவுக்கும் உள்ள பிரச்சனை அபூர்வமான ஒன்றல்ல; பல அலுவலகங் களில், இவர்களைப் போன்ற பெண்மணிகள் இதே போன்ற சிக்கல்களினால் துன்புறுகிறார்கள். தவறு, வெளியில் யார் மீதும் இல்லை. இவர்களுடைய குணாதிசயத்திலேயே கோளாறு இருக்கிறது.
இவர்களிடம் தன்னம்பிக்கையும், அடித்துப் பேசுகின்ற திறமையும் இல்லை. அதனாலேயே ஆண்களின் மறைமுகமான தொல்லைகளுக்கு உட்பட வேண்டியிருக்கிறது. ஆண்களோடு கூடி வேலை செய்வதே எரிச்சலூட்டுவதாக உள்ளது. ஆனால், இவர்களைப் போன்ற பெண்கள் மனந்தளர வேண்டாம். சில புதிய குணங்களை ஏற்படுத்திக் கொள்வதின் மூலம், இந்தப் பிரச்னைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்கிறார் டாக்டர் ஜீன் பேயர்.

1) நீயாக இரு

நீ, நீயாக இருப்பதால் உனக்கு இயற்கையான கவர்ச்சி ஏற்படுகிறது. ஆ, ஊ என்று அலட்டிக் கொள்வது, பந்தா பண்ணுவது, செயற்கையாக நடிப்பது போன்ற குணங்கள் பிறரை நம்மிடமிருந்து விரட்டுகின்றன. உன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை எதிராளியின் மனத்தில் உருவாக்குகின்றன. பிறரைப் போல் காப்பி அடிப்பதும் பயன் இல்லாத செயலாகும். அது சில சமயம் நேர் எதிரிடை விளைவுகளை உண்டாக்கி விடும். உன் சுயமதிப்பை இழக்க வேண்டி வரலாம்.

2) உனக்கு என்ன தேவை என்பதில் மிகவும் தெளிவாக இரு

உனக்கு என்ன உண்மையான தேவை என்பதில் உனக்கே குழப்பம் இருந்தால் நீ அவற்றை அடையவே முடியாது.

உன் வாழ்க்கைக்கு முக்கியமானவை என்னென்ன என்பதில் மிகவும் தெளிவாகவும், கறாராகவும் இரு. அவைகளை அடைய நீ இடைவிடாமல் முயற்சி செய். உனது வேலை குடும்பத்துக்கு அடுத்தபடிதான் என்று நீ உண்மையில் எண்ணினால், வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு அடையவில்லை என்று புலம்பாதே. நீயே முன்னேற்றத்தை விரும்பாதபோது, யார் உன்னிடம் அதைக் கொண்டுவந்து தருவார்கள் என்று நினைக்கிறாய்.

3) புரியும் படி பேசுங்கள்

நம்மைப் பிறர் மதிக்க வேண்டுமானால் ‘கணீர்’ என்று தெளிவான குரலில், புரியும்படிப் பேச வேண்டியது மிகவும் அவசியம். உங்களை ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிக் கருத்துக் கேட்டால், நம்பிக்கையோடு, உரத்த குரலில் பேசுங்கள். உங்களை மதித்து எல்லோரும் கவனமாகக் கேட்பதை உணரலாம்.

4) மட்டந் தட்டினால்…

உங்களைப் பற்றி ஒரு சக ஊழியர் இழிவாகவும், அவதூறாகவும் பேசினால் கண்ணைக் கசக்கிக் கொண்டு கைக் குட்டையைத் தேடாதீர்கள். அந்த ஊழியரை முறைத்துப் பார்த்துக் கோபமும், கண்டிப்பும் நிறைந்த குரலில் “ஸார்! இந்த மாதிரிப் பேச்சுக்கள் எனக்குப் பிடிக்காது, உங்களைப் பற்றி உயர்வாக எண்ணியிருந்தேன். இப்போதுதான் உங்கள் உண்மையான சுபாவம் எனக்குப் புரிகிறது. இனியொரு முறை என்னிடம் அந்த மாதிரிப் பேசினால், என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது” என்று கூறுங்கள் அதற்குப் பிறகு உங்களிடம் யாரும் வாலாட்ட மாட்டார்கள்.

5) குறை கூறினால் பயப்பட வேண்டாம்

மற்றவர் உங்களைக் குறை கூறுவதற்கு நூறு காரணங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் எண்ணி மனம் புழுங்கத் தேவையில்லை. உண்மையான குறைகூறும் விமர்சனத்துக்கு நன்றி கூறி, முடியுமானால் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். பொறாமையினாலும், அசூயையினாலும் விடப்படுகிற குற்றக் கணைகளை அலட்சியப்படுத்தி உதறி எறியுங்கள்.

6) “மாட்டேன்; முடியாது; இல்லை” என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்

உங்கள் உழைப்பை அநியாயமாகப் பிறர் சுரண்டுகிறார்களா? பிறருடைய வேலையை உங்கள் தலையில் கட்டிவிடுகிறார்களா? அல்லது உங்ளுக்கு இஷ்டமில்லாத ஒரு வேலையை நீங்கள் செய்யும்படி நிர்ப்பந்தப்படுகிறீர்களா?

ஒரே வழிதான் உண்டு. இந்தச் சூழ்நிலையி லிருந்து நீங்கள் தப்புவதற்கு.
“முடியாது; மாட்டேன்” என்று அழுத்தம், திருத்தமாகக் கூறிவிடுவதுதான் அது. விளைவுகள் ஆச்சர்யமாயிருக்கும். உங்களை யாரும் ஏமாற்றி வேலை வாங்கிவிட முடியாது.

7) கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்

உங்களுக்குத் தேவையானது எது என்பது மற்றவருக்கு எப்படித் தெரியும்? உங்களுடைய நியாயமான உரிமைகளை நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களாகத் தானே முன் வந்து, உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்பது கனவிலும் நடக்காத காரியம்.8) உங்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிக் கொள்ளாதீர்கள்

உங்களுடைய குறைபாடுகளைப் பெரிது படுத்தியும், உங்கள் திறமைகளைப் பெரிதாக நினைக்காமலும் இருப்பது தவறு. உங்களைப் பற்றி நீங்களே இழிவாக நினைக்கும்போது, மற்றவர்கள் எப்படி உயர்வாக நினைப்பார்கள்?

9. திறமையாகப் பணிபுரியுங்கள்

உங்களுடைய வேலையை திறம்படச் செம்மையாகச் செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் அடித்துப் பேச முடியும். உங்களால் முடியாத வேலைகளையெல்லாம் இழுத்து விட்டுக்கொண்டு விழிக்காதீர்கள். வீட்டுவேலை அதிகமாக உள்ளவர்கள் ஆபீஸில் அதிகமாக உழைக்க முடியாது என்று புரிந்து கொள்ளுங்கள்.

10) தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்க்காதீர்கள்

பெண் என்பதால் உங்களுடைய திறமைக் குறைவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சாதீர்கள். சாக்குச் சொல்லும் பழக்கத்தை உடனடியாகக் கைவிடுங்கள். அரைகுறையாக வேலை செய்துவிட்டு, நொண்டிச் சமாதானம் சொல்லிச் சமாளிக்கலாம் என்று எண்ணினால் உங்களை யாரும் மதிக்கவே மாட்டார்கள்.

11) உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்

சூழ்நிலை நெருக்கடியாக மாறும்போது, உணர்ச்சிவசப்பட்டு அழாதீர்கள். கூடியவரை அமைதியாகவும், சலனம் இல்லாமலும் இருக்க முயற்சியுங்கள். பெண்களை மற்றவர்கள் கேலியாகப் பேசுவதற்கு இந்த அழுகையும் ஒரு முக்கிய காரணம்.

12) வம்பளக்காதீர்கள்

பிறருடைய குறைகளைப் பற்றி வம்பு பேசி உங்கள் நேரத்தையும், மற்றவர் நேரத்தையும் வீணாக்காதீர்கள். உங்களைப் பற்றிக் குறைகூறும் படியான விதத்தில் உடை அணியாதீர்கள்.

இந்த முறைகளைக் கையாண்டால் உங்களுக்கு ஆண்கள் அதிக மரியாதை கொடுப் பார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *