வெற்றி வெளிச்சம்

– இயகோகா சுப்பிரமணியம்

கரைகள் சரியாய் இல்லையேல்
நதிநீர் கடலை அடையாது;
கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் தொழிலில்
வெற்றிகள் கிடையாது;

சிங்காரச் சென்னை நகரம். விமான நிலையம் செல்வதற்கு நண்பர் சீனிவாசனது காரில் அவரே வண்டி ஓட்டிக்கொண்டுவர, நானும் அவரும் உரையாடியபடியே ஒரு சிவப்பு விளக்கு, பச்சையாக மாறுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.

சிவப்பு விளக்கு எரிவதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் எங்களைக் கடந்து வேகமாக பஸ்களும், கார்களும், இரு சக்கர வாகனங்களும் பறந்துகொண்டிருந்தன. சரியான திசையில் செல்பவர்களும், இந்த இடையூறுகளைப் பொறுத்துக் கொண்டு, விபத்துக்கு உள்ளாகாமல் தப்பித்துக்கொண்டு, இறைவனுக்கு நன்றி கூறியபடி சென்று கொண்டிருந்தனர்.

எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த காரிலிருந்து ஓயாமல் ‘ஹார்ன்’ சத்தமிட்டுக் கொண்டிருந்தது. ‘ஏனடா. இந்த மனிதன் இப்படி அலறுகிறான். ‘ஆம்புலன்ஸ்’ சத்தம்கூட இல்லையே’ என்று திரும்பிப் பார்த்தால், எங்களைப் பார்த்துக் கையசைத்து, ‘வண்டியை ஓட்டு’ என்றபடி ‘ஹாரனை’ அலறவிட்டுக் கொண்டிருந்தார்.

நானும் சரி, எனது நண்பரும் சரி, சிவப்பு விளக்கு எரிந்தால் தலையே போனாலும் முண்டமாக நிற்போமே தவிர ஒரு மில்லி மீட்டர்கூட நகர ஒப்பமாட்டோம்.

நண்பருக்கு சரியான கோபம். விதியை மீறச் சொல்லி ஒருவன் இவ்வளவு உரக்கக் கட்டளையிடும் தொனியில் கதறுவது என்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பது அவர் கருத்து. மூர்க்கத்தனம் என்பது தெளிவு. பச்சைவிளக்கு எரிந்தபோது நண்பர் வண்டியை எடுத்து மெதுவாக முன்னேறினார். பின்னால் நின்ற கார், பக்கவாட்டில் வந்து உரசுவது மாதிரி பின்தொடர, அந்த வண்டியை ஓட்டி வந்தவர், எங்களைப் பார்த்து, ” உங்களுக்கு, என்ன காது கேட்காதா? அவசரமாக நான் விமான நிலையம் சென்றாக வேண்டும். இப்படிக் கழுத்தை அறுத்து விட்டீர்களே,”என்றபடியே ஆத்திரத்தைக் கொட்டிவிட்டு வேகமாகச் சென்று விட்டார். எனது நண்பர் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டார்.

இப்படி வெகுவேகமாக விமான நிலையம் சென்ற நபர் விமானம் காலதாமதமாகிவிட்டால் என்ன செய்வார்? அல்லது வேகத்தில் வேறொருவரது வாகனத்தில் மோதிவிட்டால் என்ன செய்வார்? அவர் எந்தக் காரியம் தடை பட்டுவிடும் என்ற வேகவெறியில் சென்றாரோ, அந்தக் காரியம் நிச்சயம் தாமதப்படும் என்பதோடு, அவரது அவசரத்துக்கும் எந்த அர்த்தமோ, மரியாதையோ இல்லாமலும் போய்விடுகின்றது.

சிவப்பு விளக்குக்கு நிற்கவேண்டும் என்பது கட்டுப்பாடு. நிற்பவனைப் பார்த்து ‘சுத்தப் பைத்தியக்காரனாக இருக்கிறானே’ என்பது போல் பார்த்துச் செல்வதோ, பழிப்பதோ, சண்டைக்கு வருவதோ, சட்டத்துக்கு மட்டுமல்ல, தருமத்துக்கும் புறம்பானது. இப்படிக் கட்டுப்பாட்டை மீறிச் செல்பவர்களுக்கு, ‘இது சரியானது அல்ல’ என்று தெரியாமல் இல்லை. தெரிந்தும் அந்தக் கட்டுப்பாட்டை மீறுவதால் ‘தவறில்லை’ ‘ ஏதாவது நடந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்ற குருட்டுத் தைரியம்தான். அதுமட்டுமின்றி, இப்படிப்பட்ட தடைகளை மீறுவதன் மூலம் தான் ஏதோ சாதித்து விட்டது போலவும், ஒழுங்காக விதிகளைப் பின் பற்றுபவன் மடையன் என்றும் ஒரு அபிப்பிராயம் உருவாக்கி, அதை இரசிக்கவும் ஆரம்பித்து விடுகிறான்.

***

எங்கள் நிறுவனத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு உண்டு. அனைவரும ‘ஹெல்மெட்’ அணிந்திருக்க வேண்டும். நிறுவனம் அளித்துள்ள வண்டி யென்றால் நிறுவனமே ‘ஹெல்மெட்டையும்’ கொடுத்து விடும். சொந்தமாக வண்டி வைத்துள்ள வர்கள் கட்டாயம் ‘ஹெல்மெட்’டுடன்தான் வர வேண்டும். பணிக்கு வரும் பெண்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். நிறுவனம் அனைவருக்கும் ‘இன்ஷ்யூரன்ஸ்’ செய்துள்ளது. எனவே, வெளியில் எங்காவது ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்றால், அது நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டால் அபராதத் தொகை விதிக்கப்படும்.

நூற்றுக்கு நூறு சதவிகிதம் இந்தக் கட்டுப்பாட்டை அனைவரும் மனம் விரும்பி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வேறு வழி இல்லையே என்று ஏற்றுக் கொள்வதால், விபத்தின் போது ஏற்படும் இழப்புகள் நிறையத் தவிர்க்கப் படுகின்றன என்பது நிதர்சனம்.
இராணுவம், காவல்துறை இரண்டுமே கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான நடை முறைகளைக் கொண்டவை. மீறினால் தண்டனையும் உண்டு. இந்தக் கடும் கோட் பாடுகளை மற்ற அரசுத் துறைகளிலும் பின் பற்றினால் நிச்சயம் பல மாறுதலான பயன்கள் நாட்டுக்குக் கிடைக்கும்.

பல வளர்ந்த அந்நிய நாடுகளில் இந்தக் கட்டுப்பாடுகளைக் காணலாம். ஆனால், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ‘மனித உரிமைகள்’ என்ற பெயரில் தேவையான கட்டுப் பாடுகளைக்கூட உடைத்தெறியும் போக்கு காணப் படுவதால், நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.

எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளும் சரி, தொழிலாளர்களும் சரி கைபேசி உபயோகிக்கக்கூடாது. அதிகாரிகள் நிறுவனத்தின் அனுமதியோடு நிறுவனத்தின் வியாபார செய்திகளுக்கு மட்டும் உபயோகப் படுத்தலாம். அதே போல ‘கிரிக்கெட்’ போன்ற தேவையற்ற விளையாட்டுச் செய்திகளைப் பணிபுரியும் நேரத்தில் பேசக்கூடாது என்பதும் விதி (!?). இலைமறை காய்மறையாக ஒன்றிரண்டு மீறல்களைத் தவிர, மற்றபடி இந்தக் கட்டுப் பாடுகள் செவ்வனே நிறைவேற்றப்படுகின்றன.

இதில் சிறப்பான செய்தி என்னவென்றால், இந்தக் கட்டுப்பாடுகள் சரியாகக் கடைப் பிடிப்பதற்கு, நிர்வாகத்தின் கண்டிப்புதான் காரணம் என்பது

மேலெழுந்தவாரியாகச் சரியான காரணமாகத் தெரிந்தாலும், உண்மையான காரணம், அதிகாரிகளும், தொழிலாளர்களும் மனதளவில் இதை உணர்ந்து கொடுக்கும் ஒத்துழைப்பும், செயல்பாடும்தான். வேறொரு சூழ்நிலையிலிருந்து எங்கள் நிறுவனத்துக்குப் புதிதாக வந்து சேர்பவர்கள்கூட, ஆரம்பத்தில் இதை ஏற்பதற்குத் தயங்கினாலும், காலப்போக்கில் ஏற்றுக்கொள்வதோடு, இதன் சிறப்புகளையும் உணர ஆரம்பித்து விடுகின்றனர்.

கோயில் வரிசை; பஸ், ரயிலுக்கு வரிசை; சினிமா தியேட்டர் வரிசை; கூட்டம் கூடும் இடங்களில் வரிசை ‘ என்று சரியாகப் பின் பற்றினால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அரசாங்கமோ, அதிகாரமோ ஓரளவுக்குத்தான் இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மக்கள் ஒத்துழைப்பும், மனமாற்றமும் மட்டுமல்லாது, விதி மீறலுக்குத் தண்டனை கடுமையாக இருந்தால் நிச்சயம் ஒழுங்குமுறை ஏற்படும்.
தனியார் துறையிலும், தொழிலிலும் மட்டும் எப்படி இந்தக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது என்றால், தண்டனை என்பது உற்பத்தி இழப்பு, சம்பள இழப்பு, வாடிக்கையாளர் இழப்பு, வருமான இழப்பு, லாப இழப்பு ‘ எனப் பலப்பல இழப்புகளுக்கு ஆளாகி விடக்கூடாது என்பதனால் தான்.

ஆரம்பத்தில் கூறிய படியே, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர் களும், பின்பற்றுபவர் களைக் கேலி பேசுபவர்களும், யாரும்தான் பார்க்க வில்லையே என்று சமாதானம் செய்து கொள்பவர்களும் ‘ பணிபுரிபவர்களாக இருந்தாலும், தொழில் செய்பவர்களாக இருந்தாலும் ‘ வெற்றி வெளிச்சத்தை அவர்களால் எந்நாளும் காணவே முடியாது.

குறுக்கு வழியில் வேகமாக முந்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்தக் கணநேர நினைப்பு தான் அவர்களை இயக்குகின்றதே தவிர, தொலை நோக்கு சிந்தனையும், திட்டமிடலும் இல்லாமல் வெற்றிப்பயணம், வெற்றுப்பயணமாக முடிந்து விடுகின்றது. தொழில் முனைபவர்களை மேலாளர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் எதையும் திட்டமிட்டு, செயல்பாடுகளை வரையறுத்து வடிவம் கொடுத்து, பொருளாதார, செயல்பாட்டு எல்லைகளை நிர்ணயித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

அது மட்டுமல்ல, கட்டுப்பாடுகள் என்பவை ஆக்கப்பூர்வமாகவும், ஆரோக்கியமான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட தாகவும் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் காண்பிப்பதற்கும், அதிரடி விளம்பரம் போலவும் இருக்கக்கூடாது. முக்கியமாக ஒருதலைப்பட்சமாக இருக்கவே கூடாது.

எங்களது நிறுவனம் விற்பனை செய்யும் பலவிதமான ‘பெல்ட்’டுகளில் ‘பிளாஸ்டிக் மாடுலர் பெல்ட்’ என்பது ஒரு வகை. இத்தாலி நாட்டில் தயார் செய்யப்படும் இந்த வகையான பெல்ட்டுகள், விலையுயர்ந்தவை மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் தேவைக்கான அளவில், அவர்களுக்குத் தகுந்தபடி தயாரிக்கப்படுபவை. ஒரு வாடிக்கையாளருக்குத் தருகின்ற ‘பெல்ட்’டை வேறு வாடிக்கையாளர் உபயோகிக்கமுடியாது. ஒவ்வொரு பெல்ட்டின் தொழில்நுட்பம், செயல் படும் தன்மை எல்லாமே வேறொரு வாடிக்கையாளர் என்னும்போது மாறிவிடும். அளவுகள், தரத்தேர்வு இவை சிறிது மாறினால்கூட ‘பெல்ட்’டை உபயோகப்படுத்த முடியாது.

எனவே, இப்படிப்பட்ட ‘பெல்ட்’டுகளை வியாபாரம் செய்யும்போது, வாடிக்கையாளர் களிடம் குறைந்தது 50 சதவிகிதமும், புது வாடிக்கையாளர்கள் என்றால் நூறு சதவிகிதமும் முன்பணம் பெற்றுக்கொண்டு செய்வதுதான் எங்களது நிறுவனம் பின்பற்றும் வழிமுறை. அதே சமயம் ‘பெல்ட்’டின் தேர்வு, தரம், செயல் பாடுக்கான முழுஉத்தரவாதமும் நாங்கள் அளிக்கின்றோம். வாடிக்கையாளருக்கு திருப்தி இல்லையென்றால், முழுப்பொருளிழப்பும் எங்கள் நிறுவனத்துக்குத்தான். எனவே, முன் பணமில்லாமல் நாங்கள் இந்தவகை ‘பெல்ட்’டுகளை இறக்குமதியே செய்வதில்லை.

எங்கள் நிறுவன வழக்கப்படி இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முகவர் மூலம் அணுகிப் பேசி வந்தோம்.

முகவர்களுக்கு நாங்கள் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஒரு தொகை கமிஷனாகக் கொடுக்கப்படும். ஆனால், திடீரென்று ஒரு நாள் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு முகவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த ‘ஆர்டரை’ நான் எடுத்துக் கொடுக்கின்றேன். என் மூலமாகத்தான் வாடிக்கையாளர் அதை வாங்க விரும்புகின்றார் என்றும், முன்பணத்தோடு இப்போதே ‘ஆர்டர்’ அனுப்பத் தயார் என்றும் கூறினார்.

மிகப்பெரிய வியாபாரம். இதன் தொடர்ச்சியாக இன்னும் லாபமிக்க வியாபாரமாக இது பெருகலாம். ஆயினும், நிறுவனம் இந்த வாடிக்கையாளரை வேறொரு முகவருக்காக என்று நிர்ணயம் செய்து, ஒப்பந்தமும் செய்துள்ளது. லாபத்தைக் கருத்தில்கொண்டு மாற்றினால் இந்த முகவர் வேதனையடையலாம். எங்களை வேறொன்றும் செய்துவிடவும் மாட்டார். ஆனால், எங்கள் நிறுவனத்தோடு பல ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டு வியாபாரம் செய்யும் ஒருவருக்குக் குறுகிய ஆதாயம் கருதித் துரோகம் செய்ததாக ஆகிவிடும்.

மற்றொரு முகவரைப் பொறுத்தவரை, அவருக்குள்ள தொடர்பால் இந்த வியாபாரம் நடைபெறும் என்பதால், இதில் என்ன தவறு உள்ளது. வேண்டுமானால் கிடைக்கின்ற கமிஷனை அவருக்கும் ஒரு பகுதி கொடுக்கலாமே என்ற எண்ணம்.
எங்கள் மார்க்கெட்டிங் மானேஜருக்கு தர்மசங்கடமான நிலைமை. என்னிடம் வந்தபோது நான் சொன்னது’ ”நிறுவனத்தின் அடிப்படையான தர்மங்களையும், செயல்பாடு களையும் ஒரு சில வியாபாரங்களுக்காக மாற்றக்கூடாது. வியாபாரத்தை இழந்தாலும் பரவாயில்லை. அனுமதிக்கப்பட்ட முகவர் மூலம் வரும் வியாபாரந்தான் சரி” என்று கூறிவிட்டேன்.

அந்த வியாபாரத்தை அன்று இழந்தோம். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே முகவர் மூலம், அதே நிறுவனததில் மீண்டும் பல ‘ஆர்டர்கள்’ கிடைத்தன. இடையில் சிறு தவறு ஏற்படுத்திய முகவரும், அவரும் நல்ல எண்ணத்தில்தான் செய்தார் என்றபோதும் நாங்கள் எடுத்த முடிவைப் பாராட்டினார்.

நீண்ட நாள் தொலைநோக்குப் பார்வையோடும் கட்டுப்பாட்டோடும் செய்யும் எந்தச் செயலும் தொடர் வெற்றிகளை அளிப்பதோடு, மனதுக்கு நிறைவும் அளிக்கும் என்பது திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *