இரண்டரை இலட்சம் மரங்கன்றுகள்

ஆக்கப்பணியில் ஈஷாவின் ஆனந்த அலை!!

சில மாதங்களுக்குள்ளாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நடப் பட்டதும், ஒவ்வோர் ஊரிலும் அந்த மரங்களை வளர்க்கப் பசுமைப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதும் சமீபத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்கள். விரைவில் 11.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது இந்த இயக்கத்தின் நோக்கம்.

ஈஷாவின் பசுமைக்கரங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்திய ”ஆனந்த அலை” நிகழ்ச்சியில்தான் இத்தனையும். சத்குரு அவர்கள் பங்கேற்ற இந்த தொடர் நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு அலுவலர்கள், சமூகப் பார்வைமிக்க தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

ஆனந்த அலை நிகழ்ச்சிகளில் அலை அலையாய்த் திரண்ட மக்கள் வெள்ளம், வான் மழையிலும் சத்குருவின் ஞானமழையிலும் ஈடுபாட்டுடனும் கட்டுப்பாட்டுடனும் நனைந்து சிலிர்த்தது, மறக்க முடியாத அனுபவம்.

ஒவ்வோர் ஊரிலும் பல்லாயிரக்கணக்கில் தியான அன்பர்களும் பொதுமக்களும் திரண்டிருந்தனர். கூட்டத்தின் எல்லைவரை சத்குரு சென்று எல்லோருக்கும் தரிசனம் தரும்விதமாக அமைந்திருந்த நடைமேடை, மற்றுமொரு புதுமை.

சத்சங்கங்களில் சத்குருவின் அருளுரையும் கேள்வி பதில் பகுதிகளும் இடம்பெற்றன.
”சராசரி வாழ்க்கைக்கு மனிதர்கள் பழகி விட்டார்கள். என்னைப் பார்க்கும் எல்லோரும் இவர் ”மரம் வைக்கும் சாமி” என்கிறார்கள். நான் மரம் வைக்க வரவில்லை.

ஒவ்வொருவரையும் உள்ளே மலர்விக்க வந்திருக்கிறேன். இன்று மனிதன் மலராத மொட்டுப்போல் வாழ்ந்து விட்டுப் போக நினைக்கிறான். தான் வாழும் உலகுக்கு மட்டுமின்றி, தனக்கும் மிக நெருக்கமானவை மரங்கள் என்பதை மனிதன் உணர்வதில்லை. மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சு. மனிதனின் வெளிமூச்சே மரங்களின் உள்மூச்சு. மனிதனுடைய நுரையீரலின் இன்னோர் அங்கமே மரங்கள்தான்.

டார்வின் பரிணாமக் கொள்கையைக் கண்டறிந்தது, மனித சமூகத்தின் வளர்ச்சியில் முக்கியமான படிநிலை. இப்போதிருக்கும் நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கான வளர்ச்சி உண்டு என்பதை டார்வின் அறிவியல் பூர்வமாய் அறிவித்தார். ஆனால் அவர் பிறப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் உருவான தசாவதாரக் கோட்பாடு, பரிணாம வளர்ச்சியைத்தான் பேசியது. அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான உந்துசக்தி ஒவ்வோர் உயிருக்குள்ளும் உண்டு.

இந்த உலகில் நீங்கள் நினைத்தது போலவே 100% யாரும் இருப்பதில்லை. வேடிக்கை என்னவென்றால், நீங்கள் நினைப்பதுபோல நீங்களே இருப்பதில்லை. அதுதான் உங்கள் பிரச்சினை. நீங்கள் எந்தச் சூழலிலும் உள்ளே ஆனந்தமாக இருப்பதென்று முடிவு செய்தால் நிச்சயம் முடியும். ஆனால், உள்ளே இருப்பது என்னவென்று பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.

சங்கரன்பிள்ளை ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே வழிப்பறிக் கொள்ளையர் களிடம் மாட்டிக் கொண்டார். அவரிடம் இருந்த மணிப்பர்சைப் பறிக்க, கொள்ளையர்கள் போராடினார்கள். ஆனால் இவர் விடவில்லை. கீழே தள்ளி பர்ஸை பலவந்தமாகப் பறித்துப் பிரித்தால் இந்தியப் பணம் ஐந்து ரூபாய் இருந்தது. அமெரிக்க டாலர்கூட இல்லை. அவர்கள் ஆத்திரத்துடன் ”இதற்கா இவ்வளவு போராடினாய்” என்று கேட்டார்கள். உடனே சங்கரன் பிள்ளை, ”நான்கூட, நான் ஷுவில் மறைத்து வைத்திருக்கும் வைரத்தைத்தான் கொள்ளையடிக்க வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்” என்று சொன்னார்.

இப்படித்தான் பலரும் தங்களுக்குள் மறைந்து கிடக்கும் விஷயங்களின் மதிப்பு தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விழிப்புணர்வுடன் பார்த்தால் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். நீங்கள் அதிசயம் என்று தனியாக எதையும் நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. விழிப்புணர்வுடனும் முழுஈடுபாட்டுடனும் செய்தால் எல்லா செயல்களும் அதிசயங்கள்தான்.

எங்கிருந்தோ உங்கள் உணவு வருகிறது. அதை நீங்கள் பயிராக்கவில்லை. ஆனால் அந்த உணவை எடுத்து வாயில் போட்டதும் அது உங்களில் ஒரு பகுதியாகிறது. கணப்பொழுதுக்குள் ஒரு கவளம் மனிதனாகிவிட்டது. உங்களுக் குள்ளேயே இருப்பது அற்புதம். அதை உணராமல் வாழ்வது ஆபாசம். உங்களுக்குள் இருக்கும் சக்தியை செயல்படுத்தும் தொழில் நுட்பத்துக்குத்தான் ஆன்மீகம் என்று பெயர். பலர், தங்களுக்குள் இருக்கும் சக்தியை செயல்படுத்தக்கூட எங்கிருந்தோ கட்டளை வருமென்று காத்திருக்கிறார்கள்.

எதை நீங்கள் உங்களுக்கான செய்தியாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது, ஒருவர் தவம் செய்யலாம் என்று காட்டுக்குள் போகத் தீர்மானித்தார். அங்கிருந்து உணவுக்கு வெளியே வரவேண்டுமா என்று யோசித்த போது, அவர் பார்வையில் ஊனமுற்ற நரி ஒன்று தென்பட்டது. அதனால் அசைய முடியாது. உணவு தேடி வேட்டையாட முடியாது. ஆனால் அது பட்டினி கிடப்பது மாதிரியும் தெரியவில்லை. கொழுத்த நரியாகத்தான் இருந்தது. உணவுக்கு என்ன செய்கிறதென்று இந்த மனிதர் மறைந்திருந்து பார்த்தார். சிறிது நேரத்தில் அங்கே ஒரு சிங்கம் வந்தது. ஒரு மாமிசத் துண்டைக் கொண்டு வந்து நரியின் முன் போட்டது. தனக்குக் கடவுளின் செய்தி கிடைத்துவிட்டதாக இந்த மனிதர் அகமகிழ்ந்தார்.

தனக்கான உணவு, தானே வரும் என்று தவம் செய்ய உட்கார்ந்தார். நாட்கள் ஓடின. யாரும் உணவு கொண்டு வரவில்லை. பசியால் சுருண்டு கிடந்த அவரை அந்தப் பக்கமாக வந்த யோகி ஒருவர் கண்டார். என்ன நடந்தது என்று கேட்டறிந்தார்.
பிறகு அந்த யோகி சொன்னார், ”நடந்த சம்பவத்தில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. பசித்திருந்த நரி. பகிர்ந்து உண்ட சிங்கம். நீ ஏன் உன்னை நரியின் இடத்தில் வைத்துப் பார்த்தாய். நீ சிங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்திருக்கலாமே” என்றார்.

இதேபோல் இன்னொரு சம்பவம். ஒரு குருவிடம் பயின்ற சீடர்கள் எதிர்பாராத விதமாக வேறொரு யோகியை சந்தித்தார்கள். அவரிடம், ”வாழ்க்கை என்றால் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த யோகி, ”வாழ்க்கை என்பது மல்லிகைப் பூவின் மெல்லிய வாசனை போன்றது” என்றார். வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். ”சுவாமி! எங்கள் குருநாதர், வாழ்க்கை என்பது குத்துகிற முட்களைப்போல் கொடுமையானது என்று கூறினாரே!’ என்றார்கள். யோகி சிரித்துக் கொண்டே சொன்னார், ”அவர் சொன்னது அவருடைய வாழ்க்கை. நான் சொன்னது என்னுடைய வாழ்க்கை” என்று.

”உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக அமைத்துக்கொள்ளும் சக்தி உங்களிடம் தான் இருக்கிறது” என்றார் சத்குரு.

சென்னை, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், வேலூர், பாண்டிச்சேரி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இந்த மகா சத்சங்கங்கள் நடை பெற்றன.

பெரும்பாலான ஊர்களில், நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியரும், ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் திட்டக்குழு உறுப்பினருமான மரபின் மைந்தன் முத்தையா திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இன்னிசை, வாணவேடிக்கை என்று இயற்கையையும் வாழ்க்கையையும் கொண்டாடும் அற்புத விழாக்களாக வீசியது ஈஷாவின் ஆனந்த அலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *