சமுதாயப் பணியில் சங்கீதக்குயில் பத்மஸ்ரீ. சுதாரகுநாதன்

நேர்காணல்

சமுதாயா பவுண்டேஷன் அறக்கட்டளை துவங்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி….?

சங்கீத உலகில் நான் 30 ஆண்டுகளாகப் பாடிக் கொண்டிருக்கிறேன். இதில் அதிக கச்சேரிகள் நிதிதிரட்டும் விதமாக செய்கிறோம்.

சமுதாயத்திற்குப் பயன்படும் விதமாகவும், கேன்சர் பவுண்டேஷன், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மற்றும் பல அமைப்புகளுக்காக பாடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நாம் அறக்கட்டளை தொடங்கினால் என்ன என்று தோன்றியது.

எந்த விஷயங்கள் நம் மனதை தொடுகின்றதோ, எந்த அமைப்புகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதை செய்வதற்கான சுதந்திரம் நமக்கு கிடைக்கிறது. எனவே, நாம் அறக்கட்டளை துவங்கினால் என்ன என்ற எண்ணம் எனக்கும் ரகுநாதனுக்கும் தோன்றியது.

அந்த சமயத்தில்தான் கார்கில் போர் நடந்து கொண்டிருந்தது. நிறைய குழந்தைகள் அவர் களுடைய அப்பாக்களை இழந்து விட்டார்கள், புதிதாக திருமணமான பெண்கள் பலர் தன் கணவரை இந்தப் போரில் இழந்து விட்டார்கள். அவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். குழந்தைகளின் கல்விக்கு எப்படி அவர்களால் செலவு செய்ய முடியும்? இந்தச் செய்திகளை படித்தவுடன் இந்த பவுண்டேஷன் துவங்க இதுதான் சரியான தருணமோ என்று நினைத்தேன்.

இந்த சமுதாயம் தான் நமக்கு உலகில் நல்ல பெயரையும் அந்தஸ்தையும் கொடுத்துள்ளது. எனவேதான் இந்த பவுண்டேஷனுக்கு ”சமுதாயா” என்ற பெயரை தேர்ந்தெடுத்தோம்.

திரு. டி.எஸ்.கே. வாசுவும் எனது கணவரும், நானும் அறங்காவலர்கள். 1999 ஆம் ஆண்டு ஜுலை 20ம் தேதி, பாரதரத்னா திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார்.

சமூகப் பணிகள் செய்வதில் உங்களுக்கு ஆதர்சமாய் முன்னோடியாய் விளங்கக் கூடியவர்கள் யார்?

என்னுடைய குருதான் எனக்கு முன்னோடி. அவர்களைப்போல் பரந்த மனது, கொடுக்க வேண்டும் என்கிற இதயப்பூர்வமான எண்ணம் அவரைப் போல் என் வாழ்வில் யாரையும் சந்தித்தது இல்லை. எது வேண்டுமோ, பொருளோ, நேரமோ அல்லது சங்கீதமோ எதைக் கேட்டாலும் கேட்ட வுடன் செய்யக்கூடிய மனப்பான்மை, அவர்களைப் பொறுத்தமட்டில் ”இல்லை” என்ற வார்த்தைக்கு இடமில்லை. ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ கழித்து செய்வார்கள். ஆனால் கேட்ட உதவியை நிச்சயம் செய்திருப்பார்கள்.

ஒரு சமயம் ஒருவர் திருமண ஏற்பாடு செய்துவிட்டு திருமாங்கல்யம் கூட செய்ய முடியாத சூழ்நிலையில் உதவி கேட்டு வந்திருக்கிறார். ஆனால் அப்போது அவர்களுக்கு சௌகரிய மான சூழ்நிலை இல்லை. தன் திருமாங்கல்யத்தை உடனே கழற்றி கொடுத்தார்களாம். பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற தொடர்பை என் மனதில் ஏற்படுத்தியது என் குருதான். நான் திருமணமாகி போன குடும்பமும் அப்படித்தான். வீட்டிற்கு யார் வந்தாலும் எனது மாமியார் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன வேண்டும் என்று கேட்டு அவர்களை எப்படி திருப்திப்படுத்த முடியும் என்று நினைப்பார்கள். பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற சின்னச் சின்ன விஷயங்கள் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது.

இந்தப் பட்டியலில் இன்னும் பலர் உண்டா?

அது தவிர பொது வாழ்வில் அன்னை தெரசா எல்லோருக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அவர்கள் சாதாரண மனுஷி அல்ல. புனிதை. தன் வாழ்க்கை. தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் சமுதாயத்திற்காக அர்ப்பணித்து உள்ளார்கள். அவர்களைப் போன்றவர்கள் சமுதாயத்தில் குறைவு. சென்னையில் ஸ்ரீ அருணோதயம் என்ற அமைப்பை நடத்திவரும் ஐயப்பன், இளம் வயதில் தன் வாழ்க்கையை 100 அனாதைக் குழந்தைகளுக்காக அர்ப்பணித்து சேவை செய்து, அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக உள்ளார். விஷ்ராந்தி அறக்கட்டளையை நடத்திவரும் சாவித்திரி வைத்தி அவர்களுக்கு 80 வயதாகி விட்டது. இன்னும் பலர் அவர்களை தெய்வமாக போற்றி வருகின்றனர். இப்படி நிறையச் சொல்லலாம்.

கேன்சர் பவுண்டேஷன் டாக்டர். சாந்தா எதையும் எதிர்பார்க்காமல் சமுதாயத்திற்கு உதவி செய்து வருகின்றார். இப்படி ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் சேகரித்து எனக்குள் தோன்றிய சிந்தனைகள் மூலமாகவும் இந்த ”சமுதாயா” பவுண்டேஷன் மூலமாகவும் செய்ய முடியும் என்று இத்திட்டங்களை செயல் படுத்தி வருகின்றேன்.

உங்கள் அறக்கட்டளை மேற்கொண்ட முதல் முயற்சி என்ன?

கார்கில் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும் ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ரூ.1 லட்சமும் குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் கொடுத்தோம். இவை மூன்றும் நம் தேசத்தை ஆட்டிப் படைத்த விஷயங்கள்.

தொடர்ந்து என்னென்ன பணிகளை உங்கள் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது?
சென்னையில் உள்ள அமைப்புகளுடன் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம். காக்கும் கரங்கள் அறக்கட்டளை, பான்யன் போன்ற அமைப்புகளுக்கும், அடையார் புற்றுநோய் மையத்திற்கு ரூ.10 லட்சம் பொருளுதவி கொடுத்துள்ளோம். பின்பு இருதய அறுவை சிகிச்சை செய்யமுடியாத வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகள் 100 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ. 25 லட்சம் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடுத்துள்ளோம். அப்போது ஸ்ரீ அருணோதயத்திற்கு இலவசமாக கிடைத்த நிலத்தில் கட்டிடம் கட்ட பொருளுதவி தேவைப் படுவதை அறிந்து, சமுதாயா பவுண்டடேஷன் மூலம் தனியறை கட்ட 5 லட்சம் கொடுத்துள்ளோம்.

சென்னையில் 100 வருடங்களாக செயல் பட்டுவரும் கண்பார்வையற்றோர் பள்ளிக் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் அடிப்படை வசதிகள் இல்லையென்றும் சொன்னார்கள். அதற்கு தேவைப்பட்ட ரூ. 17 லட்சம் கடந்த (2010) மார்ச் 23ஆம் தேதி கொடுத்தோம். இப்போது பாதிப்பணிகள் முடிவடைந்து விட்டது. துளிர் என்ற அமைப்பிற்கு ரூ.5லட்சம் கொடுத்துள்ளோம். பாலியல் வன் முறைக்கும் பாலியல் கொடுமையால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ உறுதுணை புரியும் அமைப்பு அது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் நடக்கிறது. நம் நாட்டில், நம் ஊரில் நடப்பதில்லை என்று யாரும் கண்டு கொள்வதில்லை.

அந்த வலி, அந்த சம்பவங்கள் நடக்கும் குடும்பங்களுக்கு அந்த குழந்தைகளுக்குத்தான் அதன் வலி தெரியும். வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும் கேன்சர் நோயை குணப்படுத்த அவர்களால் முடியாது. எனவே கேன்சரை குணப்படுத்துவதற்காக டீன் பவுண்டேஷன் அமைப்பிற்கு ரூ.5லட்சம் கொடுத்துள்ளோம். இந்த அமைப்பை தீபா முத்தையா என்பவர் நிர்வகித்து வருகிறார். அவர்களுக்கு நிறைய உதவி தேவைப்படுகிறது. இது ஒரு துளிதான். இதைக் கொடுத்த பிறகு அவர்களிடையே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின்பு இப்படிப்பட்ட குழந்தைகளை பாதுகாக்க அரசு மருத்துவமனையில் தனிவார்டு ஒதுக்கி உள்ளனர்.
அக்டோபர் 31ம் தேதி நான், என் கணவர், எனது மகள் மாளவிகாவும் உறுப்பு தானம் செய்துள்ளோம். மேலும் 50 பேரிடம் பேசியுள்ளேன். 25 பேர் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர். நம் வாழ்க்கைக்குப் பிறகும் நம் உடல் உறுப்புகள் பிறருக்கு உயிர் கொடுக்க முடியும். அதன்மூலம் அவர்கள் வாழ் நாட்களை நீட்டிக்க முடியும் என்ற மகிழ்ச்சியான எண்ணம் வந்துள்ளது.

அடுத்த திட்டம், ”சமுதாயா” பவுண்டேஷன் 2011 காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. என்னுடைய படங்கள், தமிழ்ப்பண்டிகை விழாக்கள், தீபாவளி, கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பொங்கல் போன்ற விழாக்கள் அடங்கிய காலண்டரை விற்பனைக்கு வைக்கின்றோம். ஆன்’லைன் விற்பனைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் நிதியை கிட்னி பாதிக்கப்பட்ட நான்கு வயதிற்குட் பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மேற்கொண்ட சமூகப் பணிகளில் மறக்க முடியாத அனுபவங்கள்?

ஸ்ரீ அருணோதயம் அறக்கட்டளைக்கு உதவும்முன் அங்கு சென்று பார்வையிட்டேன். அங்கு அன்புக்காக ஏங்கும் குழந்தைகள் நாம் ஒரு சிறிய மைசூர் பாகு கொண்டு போனால்கூட ஆசையாய் சாப்பிடுகிறார்கள். தீபாவளிக்கு பட்டாசு, துணிகள் வாங்கிக் கொடுத்தேன். அங்கு சென்று 10 நிமிடம் செலவிட்டால் நம்மை கடவுள் எவ்வளவு மேன்மையாக வைத்துள்ளார். நமக்கு எவ்வளவோ கடவுள் கொடுத்திருக்கிறார். அதில் 10 சதவீதம் பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் அந்த சமூக அக்கறை இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள், விருப்பம், விண்ணப்பம். இதுபோன்ற விஷயங்களை நாம் நேரில் பார்த்தால்தான் நம் மனம் பக்குவப்படும்.

நம் குடும்பத்தில் என்ன கஷ்டம் எப்படி சம்பாதிக்கலாம், இந்த காரை மாற்றி அடுத்த உயர் ரக கார் எப்ப வாங்கலாம். அடுத்த பட்டுப் புடவை எப்ப வாங்கலாம், இப்படித்தான் நாம் யோசிக்கின்றோம் என்று நான் எண்ணுகின்றேன். நம் எண்ணத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் இந்த உலகத்தையே மகிழ்ச்சிமிக்க உலகமாக மாற்றலாம்.
உறுப்புதானம் என்னும் கோட்பாட்டை நீங்கள் மேற்கொள்ள என்ன காரணம்?
உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று சில வருடமாய் நானும் என் கணவரும் யோசித்துக் கொண்டுதான் இருந்தோம்.

அந்த தருணத்திற்காக இதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தோம். 2010 அக்டோபர் 31ம் தேதி என் குரு எம்.எல். வசந்தகுமாரி அவர்களின் 20வது ஆண்டு நினைவு நாளின்போது அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாகவும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய தற்காக காணிக்கையாகவும் உறுப்புதானம் என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன்.

சடங்குகளில் அதிக நம்பிக்கை கொண்ட குடும்பச் சூழலில் உறுப்புதானம் செய்ய ஏதேனும் தடைகள் இருந்தனவா? அவற்றை எப்படி எதிர்கொண்டீர்கள்?

கண்டிப்பாக தடை இருந்தது. புருவத்தை உயர்த்தினார்கள். ஆனால், என்னையும் ரகு நாதனையும் பற்றி தெரியும். நாங்கள் மனதில் நினைத்தால் அவர்களால் தடை சொல்ல முடியாது. அதுவும் நல்ல காரியம் என்றால் தடுக்க முடியாது என்று தெரியும். சிலர் என்னிடம் இப்பவே ஏன் செய்றீங்க? 5 வருடம் போகட்டும் என்றார்கள். நானும் கொஞ்சம் யோசித்தேன். என் மகள் மாளவிகா என்னிடம் சொன்னாள், உறுப்பு தானம் இப்ப செய்தால் என்ன? பிறகு செய்தால் என்ன? அது நடக்கப்போவது உன் காலத்திற்குப் பிறகு. அதன் பின்பு என்ன நடந்தால் உங்களுக்கென்ன. முடிவு எடுத்துவிட்டால் உடனே செய்யுங்கள் என்றாள். பிறகு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொன்னார்கள். முழு உடல்தான் மோட்சத்திற்கு செல்லும் என்றெல்லாம் கொன்னார்கள். சடங்குகளில் எனக்கு நம்பிக்கை உண்டு. குடும்பத்தினர் கருத்திலும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் நானும் ரகுநாதனும் எடுத்த முடிவு சரிதான். என் மகள் சொன்ன வார்த்தைகள்தான் என் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.

இசைத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றியாளர் என்ற முறையில் உங்கள் வெற்றிச் சூத்திரங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். உங்கள் அன்றாட நிகழ்ச்சி நிரல், உணவுப் பழக்கவழக்கம் போன்றவை.

எனது நிகழ்ச்சி நிரலை கேட்டால் பயந்து தான் போவீர்கள். நிறைய பயணங்கள், ஃப்ளைட் பிடித்து கச்சேரிகளுக்குச் செல்வது, ஏதாவது ஹோட்டலில் தங்குவது. அங்கு கிடைக்கும் உணவு உண்பது. திரும்ப ட்ரெயின் பிடித்து ஊருக்கு வந்தால் அடுத்த நாள் ஊரில் கச்சேரி இருக்கும். விழாக்களுக்கு தலைமை ஏற்பது. ரெக்கார்டிங் போவது என்று பரபரப்பாய் இருக்கும். இருந்தாலும் எனக்குள் ஓர் ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்வேன், தினசரி உடற்பயிற்சி, யோகா, தியானம் என. 20 நிமிட கார்ப்பயணம் என்றால் 10 நிமிடம் தியானத்தில் இருப்பேன்.

நிகழ்ச்சி நிரல் என்ற ஒழுங்குமுறை வைத்துக் கொள்ள முடியாது. உணவுப் பழக்க வழக்கத்தில், காரம், புளிப்பு, எண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை. வறுத்த உணவு வகைகள் மிகக் குறைவு. சாப்பாட்டு அளவும் குறைவுதான். பழங்கள் சாப்பிட முயல்வேன். பாதாம், பிஸ்தா, பேரீச்சைபழம் எடுத்துக் கொள்வேன். ஏனென்றால் அதிகப் பயணங்களால் உணவு, தூக்கம் இரண்டையும் இழக்க வேண்டி இருப்பதால் உணவு முறைகளில் இதைப் பின்பற்றுவேன்.

வெற்றிச் சூத்திரங்கள் என்று சொல்வ தென்றால் அது கடவுளின் அனுக்கிரகம்தான். அதை மீறி எதையும் சொல்ல முடியாது. அதுதான் முதலும் கடைசியும். ஆனால் இடையில் சில விஷயங்கள். குடும்பம், கணவர் ஒத்துழைப்பு. கணவர் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்.

எனது குழந்தைகளுக்கு முழுமையாக அம்மாவாக இருக்க முடியவில்லை. தற்போது இருவரும் கல்லூரியில் பயில்கிறார்கள். அவர்களின் பள்ளிக் காலத்தில் கணக்கு சொல்லித் தருவது போன்ற எதையும் நான் செய்யவில்லை. அவரவர் போக்கில் விட்டுவிட்டேன். அதுவும் ஒரு வகையில் நல்லதாகிவிட்டது. இப்போது தாங்களாகவே நெட்டில் தேடிக்கொள்வார்கள். ஏதாவது முக்கியமான சந்தேகம் என்றால் அறிவுரை கேட்பார்கள். சுதந்திரமான, நம்பிக்கை மிக்க குழந்தைகள். எனது பங்கு இல்லாதது அவர்களுக்கு இழப்பாக தெரியவில்லை.

எனது சிந்தனை எல்லாம் சங்கீதம்தான். சங்கீதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இப்போது சமூக சேவை. மற்றபடி ஊர் சுற்றுவது எல்லாம் கிடையாது. நண்பர்களுக்கு போன் செய்து தேவை இல்லாமல் பேசும் பழக்கம் கிடையாது. மற்ற நேரங்களில் எல்லாமே பாட்டு தான். முற்காலத்தில் பாகவதர்கள் கீர்த்தனையை 100 முறையாவது பாடிப் பார்ப்பார்களாம். அப்போதுதான் அதற்கு உரிய வடிவம் கிடைக்கும். ஆனால் இன்றைய சூழலில் காலையில் கொடுத்தால் மாலையில் பாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆனால், இது சரியான முறையில்லை. இது போன்ற சவால்களை ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது.

எனக்குள் நம்பிக்கை, அயராத உழைப்பு, எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கைதான் நான் முன்னேற ஒவ்வொரு படியாக உதவுகிறது.

எனது நண்பர்கள் மத்தியில் ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டால் போதும். அது எப்படி யாவது நடந்து விடும். அவர்களின் அன்பு, பரிமாற்றம் என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னும் 10 வருடம் கழித்து, வெற்றிச் சூத்திரம் என்னும் புத்தகம் எழுதலாம் என்று இருக்கின்றேன்.

இசைத்துறையில் மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழகாக பேசவும் செய்கின்றீர்கள். உங்கள் கல்வி, பின்புலம், மொழித் தேர்ச்சி குறித்து சொல்லுங்களேன்.
அதற்காக என் தாய் தந்தையருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேள். அவர்கள் படிப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். படிப்பு படிப்பு படிப்புதான். என்னுடைய பேச்சில் ஒரு கோர்வை இருக்கும்.

எந்த இடத்தில் எந்த வார்த்தை சேர்ப்பது என்ற பயமே இல்லை. காரணம் படிப்புதான். என் தாய் ‘ தந்தையர் எதைக் கொடுத்தார்களோ, அதைத்தான் எனது குழந்தைகளுக்கும் கொடுத்தேன். எனது குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துள்ளேன். படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பேன்.

இன்று குழந்தைகளுக்கு நுண்கலை பயிற்சி தருபவர்கள்கூட 9ம் வகுப்பு வந்தவுடன் நிறுத்தி விடுகிறார்கள். கல்விக்கு, கலை ஆர்வம் தடையென்று சொல்ல முடியுமா?

கல்விக்கு தடை என்பதே கிடையாது. நாளின் 24 மணி நேரத்தில் 9 மணி நேரம் தூக்கம், 3 மணி நேரம் உணவு, 2 மணி நேரம் விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால்கூட 10 மணிநேரம் மீதியுள்ளது. இதில் 7 மணி நேரம் பள்ளிக்காக எடுத்துக் கொண்டால்கூட மீதமுள்ள 3 மணி ந