எத்தனை மாறினாலும் சத்தியம் மாறாது!

டாக்டர் என்.எஸ்.குமார்
என்.எஸ்.கே. மிஷன் ஒர்க்ஸ்

தொழிலாளியாக வாழ்க்கையின் தொடக்கம், தொடர் சோதனைகள், தோல்விகள். ஆனால் இலட்சியப் பிடிப்போடு இடையறா முயற்சி இவற்றின் விளைவாய் இன்று தொழிலதிபராய் ஜெயித்திருக்கிறார் இவர். சுற்றுச் சூழலுக்கு உகந்த பேப்பர் பேக் உற்பத்தி செய்யும் இயந்திரங்களைத் தயாரிக்கும் என்.எஸ்.கே. மெஷின் டூல்ஸ் உரிமையாளர் திரு. என்.எஸ்.குமார் அவர்களுடன் ஓர் சந்திப்பு.

இலட்சியத்தோடு ஆரம்பமான உங்கள் இளமைப் பருவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். விரிவாகச் சொல்லுங்களேன்?

திருவனந்தபுரம் அருகிலுள்ள சிரயிங்கில் கிராமம்தான் என் சொந்த ஊர். நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, அப்போதைய பிரதமரான திரு.லால்பகதூர் சாஸ்திரி “ஜெய்ஜவான் ஜெய்கிஸான்” என்கிற முழக்கத்தை முன் வைத்தார். இராணுவம், விவசாயம் இரண்டிற்குமான முக்கியத்துவத்தை உணர்த்துகிற முழக்கம் அது. அந்தக் கொள்கையால் உந்தப்பட்ட நானும் என் நண்பர்களும், “இளம் விவசாயிகள் சங்கம்” தொடங்கினோம். அப்போது பதினைந்து பதினாறு வயதுதான் இருக்கும். எங்கள் உறுப்பினர்களின் வீடுகளில் சின்னச் சின்ன காய்கறித் தோட்டங்களை உருவாக்கி வளர்த்து, அறுவடை வரை துணையிருப்போம். அந்த வயதிலேயே “ஜெய்கிஸான்” என்கிற விவசாய இதழைத் தொடங்கினேன். என் அம்மா துணை புரிந்தார். பத்திரிகை விற்பனையாகவில்லை. என் அம்மாவின் நகைகளை அடமானம் வைத்து நடத்தி, பத்திரிகையை இலவசமாக விநியோகம் செய்தேன். இதனால் என் அம்மாவிடம் பெரிய கடனாளியாகி விட்டேன். என் இலட்சியப் பயணத்தின் ஆரம்பத்தில் என்னைப் பார்த்து பெருமைப்பட்ட என் குடும்பம், பொருளாதார நஷ்டத்தைப் பார்த்து சோர்வடைந்துவிட்டது.

அப்போது படித்துக் கொண்டிருந்தீர்களா?

ஆமாம். எஸ்.எஸ்.எல்.சியில் ஒரே மதிப்பெண்ணில் தோல்வியடைந்தேன். அப்போதெல்லாம் தேர்வில் தோல்வி அடைந்தால் எல்லாப் பாடங்களையும் மறுபடி எழுத வேண்டும். அப்படி மறுபடி எழுதி வெற்றி பெற்றேன். அதே ஊரில் இருந்தால் நான் பொது வேலைகளில் கவனம் செலுத்துவேன் என்பதால் என் பெற்றோர். கோவையில் கோத்தாரி டெக்ஸ்டைல்ஸில் வேலை பார்த்து வந்த என் அண்ணா திரு. சோமனிடம் அனுப்பினார்கள். அவர் என்னைத் துடியலூர் ஐ.டி.ஐ யில் சேர அனுப்பினார். அவர்கள் வைத்த தேர்வில் வெற்றியடைந்தேன். ஆனால் நேர்காணலில் சீட் கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஏனென்றால் கேரளாவின் எஸ்.எஸ்.எல்.சி அப்போது இங்கே அங்கீகரிக்கப்படுவதில்லை. என் மனம் விரக்தியடைந்தது. “நான் படிக்க மாட்டேன் வேலைக்குப் போகிறேன்” என்று அண்ணனிடம் சொல்லிவிட்டேன்.

எங்கே முதல் முதலில் வேலைக்குச் சேர்ந்தீர்கள்?

வேலைக்குச் சேர்கிற முதல் வாய்ப்பே ஒரு சுவாரசியமான திருப்புமுனையை என் வாழ்வில் தரப்போகிறதென்று அப்போது எனக்குத் தெரியாது. எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டராக இருந்த திரு.சி.வி. சண்முகம் என்பவரின் நிறுவனத்தின் சூப்பர்வைசராக சேர்ந்தேன்.

அவர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். மின் ஒப்பந்தத் தொழில் குறித்து எதுவுமே தெரியாத நிலையில் சேர்ந்தேன். எல்லாவற்றையும் அவரிடம் பழகினேன். அப்போது மாதம் அறுபது ரூபாய் சம்பளம். பொருட்கள் வாங்குவதற்காக நிரப்பப்படாத காசோலை ஒன்றை என்னிடம் அவர் கொடுப்பார். பொருட்களை வாங்கும்போது, விற்பனை செய்பவர்கள் எனக்குக் கமிஷன் தொகையாக செலவுக்கு வைத்துக்கொள் என சிறிது பணம் கொடுப்பார்கள். அதனைக் கொண்டுவந்து என் முதலாளியிடம் கொடுத்துவிடுவேன். எனக்கு சம்பளம் அறுபது ரூபாய் என்றால் கமிஷன் பணத்தை நான் கொடுப்பதால் என் முதலாளிக்கு மாதம் நூறு ரூபாய் வரை கிடைக்கும்.

என் முதலாளியின் தாயார் ஒரு மூதாட்டி. அவர் என்னைத் திட்டுவார். “மடையா” உனக்குத் தந்த பணத்தை நீ வைத்துக் கொள்” என்பார். “அது முதலாளியின் பணத்திலிருந்து வந்த கமிஷன். எனவே அது அவருக்குத்தான் சொந்தம்” என்று வாதிடுவேன். இப்படியே எல்லாம் நல்லவிதமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

அப்புறம்தான் அந்தத் திருப்புமுனைச் சம்பவம் ஏற்பட்டதா?

ஆமாம். அங்கிருக்கும் ஒரு வேலையாள், நிறுவனத்திலிருந்து செம்புக் கம்பியை, தன் வேட்டியில் சுற்றிக் கொண்டு, வேட்டியை நன்கு மடித்துக் கட்டி, திருடிச் செல்ல முயன்றான். அவனை நான் கையும் களவுமாகப் பிடித்ததோடு முதலாளியிடமும் புகார் செய்தேன். அதற்கு அவர், “அவன் நல்ல வேலைக்காரன். இனி செய்திராமல் பார்த்துக் கொள்” என்றார். ஆனால் அவன் என்னை ஒரு விரோதியாகவே முடிவு கட்டி விட்டான். என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக முதலாளியிடம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

ஒருநாள் மாலை 5.30 மணி இருக்கும். நான் அலுவலக வேலையாய் வெளியே போய்விட்டு வந்தபோது இந்த வேலையாளும் முதலாளியும் பேசிக்கொண்டிருந்தார்கள். முதலாளி என்னைப் பார்த்து “தம்பி எந்த சினிமாவுக்கு போயிட்டு வரே” என்றதோடு “நான் இல்லாதபோது அடிக்கடி சினிமாவுக்கு போயிட்டு வரே” என்றார். அருகிலிருந்தவாறே “சின்னப் பசங்க அப்படித்தான் இருப்பாங்க முதலாளி! இதை நீங்க கண்டுக்கக் கூடாது” என்றான். நான் சைக்கிளைப் பூட்டி அதன் சாவியை முதலாளியிடம் கொடுத்து “நாளையிலிருந்து வேலைக்கு வரமாட்டேன். காரணத்தை இன்று இரவு உங்கள் வீட்டிற்கு வந்து சொல்கிறேன்” என்றேன்.

என்ன காரணம் சொன்னீர்கள்?

இரவு எட்டு மணியளவில் அவர் வீட்டுக்குப் போனேன். அவர் குடும்பமே என்னை எதிர்பார்த்து, சமாதானப்படுத்தக் காத்திருந்தது. “ஏன் விலகுகிறாய்” என்று அவர் மீண்டும் கேட்டார். “நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் கோபப்படக் கூடாது, வருத்தப்படக்கூடாது, நாளை என்னை வீதியில் பார்த்தால் விரோதியாக நினைக்கக்கூடாது. இன்றைக்கே மறந்துவிட வேண்டும்” என்று நிபந்தனை விதித்தேன். “சரி” என்றார்.

மெதுவாகச் சொன்னேன், “எனக்கு முதலாளியாக இருக்கும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்” என்று. என் முதலாளியின் தாயார் ஆவேசமாக ஓடிவந்து என்னை அணைத்து, கன்னங்களில் முத்தமிட்டு “மடையா! சரியாகச் சொன்னேடா! இவனுக்கு என்ன தெரியும்?, இங்கிலீஷ் படித்திருக்கிறான். ஆனால் உன்னைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லையே” என்று கண்ணீர் மல்கச் சொன்னார்.

“இனி என்ன செய்யப் போகிறாய்” என்று அந்த மூதாட்டி கேட்டார். நான் சொன்னேன், “அம்மா! இந்த சம்பவத்தின் மூலம் ஒன்று தெரிந்துகொண்டேன். உங்கள் மகன் மட்டுமல்ல யாருக்குமே எனக்கு முதலாளியாக இருக்கிற தகுதியில்லை. எனக்கு நானே முதலாளி” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அந்த வைராக்கியம்தான் என்னைத் தொழில் தொடங்க வைத்தது. நேர்மையான முறையில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வேகம் பிறந்தது.

முதலில் என்ன தொழில் தொடங்கினீர்கள்?

தொழில் தொடங்க வேண்டுமென்று நினைத்தேனே தவிர என் கையில் பணமில்லை. என் சகோதரி அப்போது ஆயிரம் ரூபாய் கடனாகத் தந்து உதவினார். அதை முதலீடாக வைத்து அ1 கமலா பார் சோப் என்ற பெயரில் சோப்புத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன்.

ஆங்கிலத்தில் முதலெழுத்து, எண் வரிசையில் முதல் எண் இரண்டையும் சேர்த்து, எதிலும் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதற்காக வைத்தேன். என் தாயாரின் பெயர் கமலா. நானே முதலாளி, நானே தொழிலாளி.

ராமநாதபுரம் ஆரியன் சோப் கம்பெனியில் வேலை பார்த்த ஒருவர் என்னிடம் சேர்ந்தார். சோப் தயாரிக்க சிலிக்கான் வேண்டும். குனியமுத்தூரில் சாரதா சிலிக்கான் என்ற நிறுவனத்தில் சிலிக்கான் வாங்கி, அந்த டின்னை சைக்கிளின் பின்புறத்தில் கட்டிக் கொண்டு வருவேன். அது ஆடக்கூடாது என்பதால் என் முதுகால் அழுத்திக் கொள்வேன். ஆனால் மிகவும் சூடாக இருக்கும். எனவே அட்டைகளை நடுவில் சொருகிக் கொள்வேன்.

சோப்பைத் துண்டு போடுவது தொடங்கி பேக்கிங் வரை நானே செய்து அட்டைப் பெட்டியில் அடுக்கி, சைக்கிளில் ஏற்றி கடை கடையாகப் போடுவேன். அப்போது கோவைப்பகுதி முழுவதும் மளிகைக்கடை வைத்திருந்தவர்கள், மலபார் முஸ்ஸிம்கள். அவர்களுக்கு மலையாளம் எழுதப் படிக்கத் தெரியாது. அவர்கள் கடைகளில் நான் சோப் கொண்டுபோய் இறக்கும்போது அவர் மனைவிமார்கள் எழுதும் கடிதங்களைப் படித்துச் சொல்வதும், அவர்கள் சொல்வதைக் கடிதமாக எழுதுவதும் என் வேலையானது. வேண்டிய சோப்பை அவர்கள் சிப்பந்திகளே எண்ணி அடுக்கி விடுவார்கள். புறப்படும்போது பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். இதிலும் சின்னத் தடை வந்தது.

என்ன தடை அது?

என் சகோதரரின் நண்பர் ஒருவர், சைக்கிளில் நான் கடை கடையாக செல்வதைப் பார்த்தார். என் சகோதரிடம் போய், “என்ன உன் தம்பி மீன் விற்பவன் போல் சைக்கிளில் கடை கடையாகப் போகிறான்” என்று கேட்டார். என் சகோதரர் என்னிடம் கோபப்பட்டார். நான் அவரிடம் “உங்கள் தம்பி திருடுகிறான், குடித்துவிட்டு உருள்கிறான், பிக்பாக்கட் அடிக்கிறான் என்று பெயர் வரவில்லை அல்லவா?” என்று கேட்டேன். பிறகு அவரையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று கடைகடையாக விநியோகம் செய்வதை இரவு நேரத்திற்கு மாற்றிக் கொண்டேன்.

அவினாசி சாலையிலுள்ள கனரா வங்கியில் ராபர்ட் லூயிஸ் என்பவர் மேலாளராக இருந்தார். வி.கே.சிவராமன் என்பவர் அலுவலராக இருந்தார். அங்கு அலுவலக உதவியாளராக இருந்த திரு. கிருஷ்ணன்குட்டி என்பவர் பரிந்துரையால், எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் மூவாயிரம் ரூபாய் கடன் கிடைத்தது. மிகச்சரியாக கடனைக் கட்டிக் கொண்டு வந்தேன் என் சேமிப்பில் ஐயாயிரம் ரூபாய் வைத்து இருந்தேன்.

ஒருவர் ஆயுர்வேத எண்ணெய் தயாரிக்கலாம் என்று வந்தார். அதற்கு செய்த முதலீட்டில் அந்தப் பணம் போனது. பிறகு குஜராத்தி ஒருவருடன் சேர்ந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தினேன். பணம் கட்ட முடியாத அச்சக அதிபர் ஒருவர், பங்குதாரர் முறையில் எங்களைச் சேர்த்துக் கொண்டார். அச்சகத் துறையில் ஈடுபட்டு 76 வரை மிக நன்றாக நடத்தினோம்.

அழைப்பிதழ் ஒன்றில் ஏற்பட்ட அச்சுப்பிழை ஒன்றை வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நான் சுட்டிக் காட்டியதால் அதனை மறுபடி அச்சிட்டுத்தர வேண்டி இருந்தது. அந்த நஷ்டம் என்னால் ஏற்பட்டது என்று பங்குதாரர்கள் கருதினார்கள். வாடிக்கையாளரை ஏமாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் அதிலிருந்து விலகினேன்.

எல்லா வளர்ச்சிகளிலும் தடைகள் ஏற்படுவதும், தடைகளே வளர்ச்சிக்கு வழி வகுப்பதுமாய் உங்கள் வாழ்க்கை இருக்கிறதே?

ஆமாம்! அடுத்து நான் சொல்லப் போவதுதான் உச்சக் கட்டமான திருப்புமுனைச் சம்பவம். வட நாடுகளிலிருந்து வெவ்வேறு இயந்திரங்களை வாங்கி விற்கிற வேலையை அடுத்து நான் மேற்கொண்டேன். டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் இயந்திரம் வாங்கி, உரிய தொகையையும் சேர்ப்பித்து என் கமிஷன் பணத்தைக் கேட்டேன். “அடுத்த ஆர்டரைப் பெற்றுக் கொடுத்துவிட்டு உன் கமிஷனை வாங்கிக் கொள்” என்றார். நான் மறுத்தேன். வாக்குவாதம் வலுத்தது.

“இனி உங்களுடன் தொழில் செய்ய மாட்டேன் என் கணக்கை முடித்துவிடுங்கள்” என்றேன். அதற்கு அவர் எகத்தாளமாக “எப்படி தொழில் செய்வாய்? தென்னிந்திய முட்டாள் எவரும் இயந்திரத்தை உற்பத்தி செய்வதில்லை” என்றார். எனக்குக் கோபம் வந்தது. அந்த இயந்திர உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென்று அங்கேயே முடிவெடுத்தேன்.

அன்றே ஊருக்குத் திரும்ப வேண்டிய நான் இரண்டு வாரங்கள் தங்கி இருந்து உபரிப் பொருட்கள், உற்பத்திக்குத் தேவையானவற்றை வாங்கினேன். இத்தனைக்கும் கையில் பணமில்லை. அங்கிருந்த நண்பர்கள் உதவினார்கள். ஊருக்குத் திரும்பிப் பணம் அனுப்பினேன்.

இயந்திரம் தயாரித்து, அதனைப் புகைப்படம் எடுத்து நிறுவனத்திற்கு கேட்லாக் தயாரித்தேன். அதன் முதல் பிரதியை, என்னிடம் சவால்விட்ட வடஇந்தியருக்கு, (தென்னிந்தியாவின் முதல் முட்டாளிடமிருந்து, நல்வாழ்த்துக்களுடன்) என்ற குறிப்போடு அனுப்பினேன். என்ன இருந்தாலும் அவரல்லவா இந்தத் தொழில் தொடங்கக் காரணம்.

அப்படித் தொடங்கப்பட்ட என்.எஸ்.கே மெஷின் டூல்ஸ், இந்தியாவிலேயே பேப்பர் பேக் உற்பத்திக்காக ஒன்பது வித இயந்திரங்கள் தயாரிக்கும் ஒரே நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், பதினெட்டு அயல் நாடுகளிலும் நாங்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் செயல் படுகின்றன. எங்கும் ஏஜென்சிகள் கிடையாது. விற்பனையாளர் கிடையாது. கடவுள் தான் எங்களை உலகெங்கும் கொண்டு செல்கிறார்.

காகிதப் பைகள் உற்பத்தியில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம்?

இது ஒரு தொழில் மட்டுமல்ல. சமூக நலனுக்கான ஆக்கப் பணியும் கூட. இன்று பலருக்கும் சமூகப் பொறுப்புணர்வு குறைகிறது. காரில் போகிறபோதே கண்ணாடி பாட்டிலை வீசுவது, துப்புவது மற்றவர்களை பாதிக்கும் என்கிற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கிறார்கள். காகிதப் பை பயன்படுத்துவதும் சமூகப் பொறுப்புணர்வாக வெளிப்பட வேண்டும். பிளாஸ்டிக் பைகள் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கிப் போகாது. உணவுப் பொருட்களுடன் வீசப்படுகிற பிளாஸ்டிக் பைகளை விலங்குகள் தின்று சாகின்றன. பிளாஸ்டிக் பை விழுந்த பூமியில் உயிர்ப்புத் தன்மை குறைகிறது.

பல நாடுகளில், இயந்திரங்களை இறக்குமதி செய்கிற போது பேக்கிங் செய்யக்கூட பிளாஸ்டிக் பொருட்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. டேப் கூட சுற்றுவதற்கு அனுமதிப்பதில்லை. நம் நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு வளரவேண்டும்.

மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும்போது ஒருமுறை சொன்னேன், “பிள்ளைகள் மீது மிகுந்த பிரியம் வைத்திருப்பவள் தாய். அவள் கூட பிள்ளைகள் இறந்தால் அந்தப் பிணத்தை நாள் கணக்கில் மடியில்போட்டு அழமாட்டாள். நாற்றம் எடுத்தால் அகற்றச் சொல்வாள். ஆனால் பூமித்தாய் தான் நம் பிணம் அழுகினால் கூட அதனை மடியில் தாங்கிக்கொள்கிற அளவு நம்மேல் பிரியமாக இருக்கிறாள். அவளைக் காப்பது நம் கடமை” என்று. எனவே காகிதப் பைக்கான இயந்திரங்களை உற்பத்தியைத் தொழிலாக மட்டுமின்றி, பொறுப்புணர்வாலும் செய்கிறேன். அதற்காக எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். அது படித்து வாங்கிய பட்டம் அல்ல. ஆனால் வேலை செய்து வாங்கிய பட்டம்.

டாக்டர் பட்டம் தவிர வேறு பல விருதுகளும் பெற்றிருக்கிறீர்கள் அல்லவா?

ஆமாம். மாநில அரசின் விருது, விஜயரத்னா விருது, செயல்சிறப்பு விருது, பாரத் உத்யோக் விருது, சிறந்த இயந்திரத்திற்கான விருது போன்றவை பெற்றுள்ளேன். ஆனால், நான் பெரிதும் மதிக்கிற விருது, வாடிக்கையாளர்களின் மன நிறைவுதான். வாடிக்கையாளர்களை நம் உடன் பிறந்தவர் களாகவோ, நம் குழந்தைகளாகவோ கருதவேண்டும்.

எங்களிடம் இயந்திரம் வாங்குபவர்கள் தொழிலிலும் வெற்றி பெற தேவையானதைச் செய்கிறோம். இரண்டு மாதப் பயிற்சி, உபரிப் பொருள் விபரங்கள், முகவரிகள், வங்கிக் கடன் பெற அணுகுமுறைகள், நிர்வாகிகளுக்கு, உற்பத்தி விலை, மற்ற செலவுகள், விலை நிர்ணயித்தல் குறித்த பயிற்சி, வாடிக்கையாளர் தொடர்பு முகவரி உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் கொடுத்து உதவுகிறோம்.

பூமியைக் காப்பதால் வாழ்க்கை சிறக்கிறது. வேளாண்மை சிறக்கிறது. பூமியைக் காப்பதில் அலட்சியம் காட்டினால் நம் அடுத்த தலைமுறைக்கு தண்டனை தருபவர் ஆவோம். எனவே ஆக்கபூர்வமான உலகை உருவாக்க நம்மால் இயன்ற பங்களிப்பை நாம் வழங்குவோம்.

2 Responses

 1. Elanchezhiyan

  Dear sir,
  we need paper bag manufacturing machine so can u give me the NSK Machine Tools Company Address.

  Regards,
  R.Elanchezhiyan

 2. senthil

  dear sir,

  i am having a 6000 sqft 20 feet hight a godown with 65 HP power service ,so now i want to start any type of business,so i want to help from u, pls help me

  thanks
  senthil

  9443332655

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *