இந்த விதைகள் மரிப்பதில்லை..!

-தே. சௌந்தர்ராஜன்

கதைகள்…! அற்புதமானவை…! அது உயிரின் அடங்கிய நிலை. விதைகள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடினமான ஓட்டை பெற்றிருக்கின்றன. அது தனக்குச் சாதகமான சூழல் வரும்வரை காத்திருக்கின்றது. ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், அதற்கு மேலும் கூட, அபூர்வமாக சில விதைகள் ஆயிரம் ஆண்டுகள்கூட காத்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சில விதைகள்கூட தற்போது முளைத்ததாக கூறப்படுகிறது.

இந்த விதைகள், தான் முளைப்பதற்கான சூழல் வரும்வரை காத்திருக்கின்றன. தனக்குத் தேவையான ஈரமான மண்ணும், உயிர்க்காற்றும் (ஆக்ஸிஜனும்) கிடைக்கும்போது அது துளிர் விடுகிறது.

நல்ல இதயங்களில் விழுந்த விதைகளும் தனக்கான காலம் வரும்வரை காத்திருக்கின்றன. காத்திருப்பது மட்டுமல்ல, சந்தர்ப்பங்களை தேடுகின்றன. தேடுவது மட்டுமல்ல, தினமும் தன்னை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றன.

கூட்டுக்குள் தன்னைத்தானே அடைத்துக் கொண்ட புழுக்கள், பறப்பதற்காக தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு வெளியிலிருந்து எந்தவித உணவும் கிடைக்காதிருந்தாலும் தன்னைத் தானே வளர்த்துக் கொள்கின்றன.

இதுபோலவே இந்த உள்ளங்களும் வெளியில் இருந்து எந்த உதவியும் கிடைக்கா விட்டாலும் தனக்கான காலம் கனியும்வரை காத்திருக்கவும், அந்த சந்தர்ப்பங்களை தேடவும் கூடவே தன்னைத்தானே அபிவிருத்தியும் செய்து கொள்கின்றன.

ஜெர்மனியின் புரட்சித் தலைவரான கரிபால்டி புரட்சி காரணமாக அரசால் நாடு கடத்தப்பட்டார். 14 ஆண்டுகள் அந்நிய தேசத்தில் ஒரு விவசாயத் தொழிலாளியாக வாழ்ந்தார். இவர் இந்த நாட்களில் தனது புரட்சியின் வேகத்தை இழந்திருப்பார். ஒரு சராசரி மனிதராக மாறி இருப்பார் என்று உலகம் எதிர்பார்த்தது. அந்த பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தையும் தாண்டி ஜெர்மனியில் புரட்சிக்கான காலம் கனிந்தபோது மீண்டும் வந்து புரட்சிகள் செய்து வெற்றி பெற்றார், அந்த கர்மவீரர்.

அதே ஜெர்மனியில் மொஸாத் என்ற இசை மேதை வாழ்ந்து வந்தார். அவர் இளைஞராக வளர்ந்து வரும் பருவத்திலே அவரது இசைத் திறமையும் வளர்ந்து வந்தது. இசைத் துறையில் பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும்போது நோய்வாய்ப்பட்டார். ஓர் ஆண்டு முழுவதுமாக நோயில் முடங்கிப் போனார்.
ஓர் ஆண்டு கடந்தபின் அவர் மெதுவாக நோயிலிருந்து வெளிவந்தார். இந்த ஓர் ஆண்டில் அவர் இசையில் இருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

மீண்டும் அவர் இசையில் சாதிக்கத் தொடங்கியதும் ஓர் ஆண்டுக்குள் இசையை முழுவதும் மறந்திருப்பார். மீண்டும் கடந்த நிலையை பெற சற்றுகாலம் பிடிக்கும் என யாவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவரோ களத்தில் இறங்கியதுமே சாதிக்கத் தொடங்கி விட்டார். முன்பைவிட வேகமாகவும் சாதனைகளை செய்தார். யாவரும் மூக்கின் மேல் விரல் வைத்து அசந்துபோய் இருக்கும்போது, இவர் கூறினார், ”நான் இந்த நாட்களில் இசையில் ஈடுபடாவிட்டாலும் என் மனம் எப்போதும் அதே கற்பனைகளில் இருந்து புதிய இசைகளை வடிவமைத்துக் கொண்டே இருந்தன” என்றார்.

பூசும்போதும் உன் நினைவே! – ஒன்றைப்
பேசும்போதும் உன் நினைவே!
உண்ணும்போதும் உன் நினைவே! – ஒன்றை
எண்ணும்போது உன் நினைவே!
எழும்போதும் உன் நினைவே! – இறையை
தொழும்போதும் உன் நினைவே!

என்று பக்தர்கள் இறைவனையே சதா நினைத்திருப்பதுபோல இலட்சிய வீரர்களும் தங்கள் இலட்சிய உணர்விலேயே வாழ்கின்றனர். காலம் கனியும்போது இந்த விதைகள் மரங்களாகி வெற்றிக் கனிகளைக் கொடுக்கின்றன.

2 Responses

  1. sekar kovai

    //பூசும்போதும் உன் நினைவே! – ஒன்றைப்
    பேசும்போதும் உன் நினைவே!
    உண்ணும்போதும் உன் நினைவே! – ஒன்றை
    எண்ணும்போது உன் நினைவே!
    எழும்போதும் உன் நினைவே! – இறையை
    தொழும்போதும் உன் நினைவே!//

    nalla kavethi thanyou

  2. Venkatesan V M

    நல்ல இதயங்களில் விழுந்த விதைகளும் தனக்கான காலம் வரும்வரை காத்திருக்கின்றன. காத்திருப்பது மட்டுமல்ல, சந்தர்ப்பங்களை தேடுகின்றன. தேடுவது மட்டுமல்ல, தினமும் தன்னை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றன

    Super collection for everyone life and nice kavithai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *