– கனகலட்சுமி
காற்றும் வெளிச்சமும்கூட புக முடியாத கடினமாக காட்டுப்பகுதியை வெகு சுலபமாக கடந்து சென்று, மிக அழகாக விளக்கி கொண்டிருந்தார் ஒரு சுற்றுலா வழிகாட்டி. இதை பார்த்து வியந்து போன ஒரு சுற்றுலாவாசி அந்த வழிகாட்டியிடம் வெறும் ஆபத்துகள் மட்டுமே நிறைந்துள்ள இந்த காட்டுப்பகுதியை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறீர்களே, இது எப்படி உங்களால் சாத்தியமானது என்று கேட்டார்.
அதற்கு அந்த வழிகாட்டி மிக அலட்சியமாக சொன்ன பதில், ”யார் ஒருவர் அவர் கனவின் தூரத்தையும் அதை அடைவதற்கான பாதையையும் சரியாக தேர்வு செய்கிறார்களோ அவர்கள் எந்தத் துறையிலும் எளிதாக ஜெயித்து விடுவார்கள். அதைப் போலவே இந்தக் காட்டை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற கனவை அடைந்த நாள் முதல் அதை தெரிந்து கொள்வதற்காக அத்தனை வழிகளையும் தேடித்தேடி பயணித்தேன். அதுவே என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என்றார்.
அந்த வழிகாட்டி சொன்னதைப்போல் வெற்றிகளை வசப்படுத்த, நாம் உறுதியாக இருக்க வேண்டிய விஷயங்கள் இரண்டே இரண்டு. ஒன்று நாம் நம் வாழ்வில் எதை அடைய வேண்டும். மற்றொன்று, அதை நோக்கிய நம் பாதை சரியானதாக இருக்க வேண்டும்.
உலகில் உள்ள மனிதர்களை மூன்று வகையாக பிரித்துவிடலாம். ஒன்று வெற்றியாளர்கள், இவர்கள் தனக்கு என்ன தேவை என்பதை முழுமையாக அறிந்தவர்கள். அவர்களின் ஆளுமையையும் ஆற்றலையும் சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள். இரண்டாவது ஏன் தோற்கிறோம் என்ற கேள்விகளே இன்று தோற்பவர்கள் இந்த வகையை சேர்ந்தவர்களின் அடையாளத்தை அவரை சுற்றியுள்ள சமூகம் தான் செதுக்கிக் கொண்டிருக்கும்.
இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது வகையான மனிதர்கள் உண்டு. அவர்கள் மனம் போன போக்கில் சென்று எப்போதாவது ஒரு சில வெற்றிகளை எதிர்பாராமல் பெற்றவர்கள், ஆற்றலும், ஆளுமையும் அவர்களுக்குள் வைத்துக் கொண்டு அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாதவர்கள்.
மூன்றாம் வகையை சேர்ந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல. நம்மில் பலர் இன்று இந்த மூன்றாம் வகையான ஆட்களாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவை அவர்களை சுற்றியுள்ள உறவுகள் தரும் எழுச்சி, வெற்றி முனைப்பை கூட்டும் சில நம்பிக்கை வரிகள், அவர்களின் திறனை இயக்கும் உத்வேகம், இவர்கள் முதல்வகை மனிதர்களைப்போல் தொடர் வெற்றிகளை தர தவறுவதன் காரணம், அவர்களுக்குள் ஒடுக்கப்பட்டுள்ள ஆளுமையை உணர்ந்து கொள்ளாதது கனவுகளுடன் இலக்குகளுடனும் சமரசம் கொள்வதும்தான்.
எதிர்பாராமல் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முறிந்த சில உறவுகள், தொலைந்து விட்ட சில நல்ல வேலை வாய்ப்புகள், பண நெருக்கடி, திட்டமிட்ட இலக்குகள், உற்சாகம் தராத சொந்தங்கள் என ஏதோ ஒன்று அவர்கள் வெற்றியை தடுத்திருக்கக் கூடும்.
உதாரணமாக விமானத்தில் பயணிக்கும் போது முதல் அறிவிப்பே, ”ஆபத்துகள் வர வாய்ப்புள்ளது. சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள்” என்பதுதான். அதுபோல் வரவிருக்கும் தோல்வியை ஆபத்தை தடுப்பதற்காக நம் கடந்த கால துயரங்களில் இருந்து துவண்டு விடாமல் நமக்குள் எழும் உத்வேகம்தான் காக்கும் கவசம். அதுவே இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து உயர நினைக்கும்போது இடையூறுகள் ஏற்பட்டாலும் பயணம் இனிமை யானதாக அமைய தெளிந்த மன நிலையுடன் நம்பிக்கை என்னும் சீல்பெல்ட் அணிந்து கொள்வோம்.
Sivahari
மிகவும் அற்புதமான தன்னம்பிக்கைத் தொடர் இது. வாழ்வில் உத்வேகம் பெற இது போன்ற தொடர்கள் அவசியம் தேவைப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை.
பகிர்ந்தமைக்கு நன்றி